30.3.12

உரிமம் என்றால் சுகம்


கட்டிட உரிமம் கோரும் விண்ணப்பப்படிவம்:
இருக்கிறது
கையெழுத்து உட்பட பூர்த்தி செய்யப்பட்டு

கிரையப்பத்திரம்:
இருக்கவேயிருக்கிறது
உங்கள் மேஜையில் என் பெயரில்

அங்கீகரிக்கப்பட்ட
மனைப்பிரிவு வரைபடம்:
உள்ளது இணைக்கப்பட்டே

விதிகளை கருத்தில் கொண்டு
வரையப்பட்ட கட்டிட வரைபடம்:
நூறு சதம் சாதகமானது என்பது தெரிந்தும்
உங்களின்
நெடுநாளைய ஆய்வில் இருப்பதில்லையா அது

கட்டிட அனுமதிக்கட்டணம்
கட்டிட இடிபாடுகள் அகற்றும் கட்டணம்
கட்டிட தொழிலாளர் நலநிதி
உள்ளூர் திட்டக்குழும அபிவிருத்திக்கட்டணம்
பாதாள சாக்கடை வைப்புத்தொகை:
செலுத்திய சீட்டும் உண்டென்வசம்

கணக்கு எண்ணே காணாததையும்
சேர்த்திட
கவனமாய்த்தான் எடுத்தேன்

இங்கே வைத்து வேண்டாமென்று
கேட்டுக்கொண்ட போது
உங்களின்
முகத்தில் தெரிந்த பதற்றம்
போலீஸ்காரன் கண்காணிப்பிலிருக்கிற
விபச்சாரியினுடையது போலவே இருந்தது
உயர்திரு
நகரமைப்பு அதிகாரி அவர்களே.

28.3.12

அலைவுறுவதை



அலைவுறுவதை
குறைத்துக்கொண்டே வந்து
நிலைக்கு வந்துவிட்ட ஊஞ்சலிலிருந்து
இறங்கிக்கொண்டது குழந்தை

பாகை 90 க்கு
திரும்பிவிட்டிருந்தது பூங்கா

22.3.12

பாவனைகள்


 







மேகத்தை வழிநடத்தக் கேட்டுக்கொண்டாலும்
இப்படித்தான் இருக்கும் போல
இந்த வழிநடத்துபவன் கைக்கொள்ளும்
பாவனைகள்

மெல்லியதும் நீண்டதுமான
குச்சி கொண்டு,
மூட்டத்திற்கு நோகாமல்
இடவலமாய் அணைத்திடவும்
சீர் பிசகாமல் செலுத்தவும்
தேர்ந்தவன் இவன்

அப்போது
மேகம் பெயர்வதானது
நம்மில் ரம்மியம் கூட்டவிருக்கிறது
பெயருமிந்த
வாத்துக்குஞ்சுக் கூட்டம் போலவே.

நன்றி: இந்த வார (28.03.12)

17.3.12

அந்த ஈ



ஆவி சிறகடித்து எழும்ப
ஆவி சிறகடித்துப்பறக்க
ஆவி சிறகு நிறுத்தி மிதக்க
ஆவி சிறுகச்சிறுக காற்றில் மறைய
இன்னும் அருந்தப்படாதிருக்கிறது
கோப்பையில் தேனீர்
இன்னொரு முறை அந்த ஈ
வந்து திரும்புமெனில்
அது எட்டாவது தடவை

14.3.12

பூ தேன் வண்டு



மில்லியன் இலைகள் அடர்ந்த
இரவின் கொடியில்
விரிந்திருக்கிறது ஒற்றைப்பூ

போகிற போக்கில்
எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கவேண்டும்
தேன்,

தேகத்தில் படிந்துவிட்ட
ஓரிரு துளிகள் மின்ன
அலுமினிய றெக்கை விரித்து
பறந்து போகிறது
கருநீலப்பந்தலின் கீழ்
ஒரு வண்டு

11.3.12

சாலை ஓவியத்தின், ஓவியனின் குறுக்குவெட்டுத்தோற்றம்




இப்போது பத்தடி நீளம்
உயரங்களுக்கே பழகியிருந்த விஸ்வரூபம்

கண்கள் திறந்திருந்த நிலையிலேயே
உயிர் நீத்திருந்த கடவுளை
பாடையில் கிடத்திமுடித்து
வியர்வையை ஒற்றிக்கொள்கிற நேரம்
உலோக நாணயங்களாய் உருமாறி
மொய்க்கின்றன ஈக்கள்

சுழன்றொரு ஒற்றை ரூபாய் நாணயம்
சரியாய்
கடவுளின் சவத்தின்
நெற்றியில் அமர்கையில்
புன்முறுவல்
சாலை ஓவியனுக்குள்ளிருக்கும்
சாத்தானின் உதட்டில்   

7.3.12

தொட்டி மீன்கள்



வாயசைத்து வாயசைத்து
உள்ளே
என்ன வாயாடுகின்றனவோ -

எல்லையிலிருந்து
வம்பளத்தலின் பொருட்டிவனை
விளித்து வைக்கின்றனவோ

இவனின்
முன்னிலை தரும்
இறுக்கத்தின் ஒவ்வாமையில்
பித்தேறி ஏசுகின்றனவோ

இல்லாது செய்த பின்பே
அடுத்த அலைதலை சந்திப்பதென்று
இவனை
விழுங்கிட பரபரக்கின்றனவோ

கண்ணாடி சுவர் தாண்டி
நீரின் மட்டம் கடந்து
ஒலிப்பதில்லை குரல்கள்

உணவு தூவப்படுவதில்
கவனம்
திசைதிரும்ப
சலனமுறுகின்றன தொட்டி மீன்கள்.

4.3.12

விடுபடலின் மந்திரம்




அவரின் சுபாவத்தின் பட்டறையில்
எனக்கென்றே தயாரானது
பொன் போன்றதான
எனது காலத்தின் குரல்வளையை
கருணையேயின்றி
அலைந்தறுக்கும் இவ்வாள்

உதிரம் பெருகி
இன்னும்
முக்கால் அங்குலம்
அறுபடவிருந்த நிலையில்
உச்சரிக்கிறார்
உதிரம் நாளங்களுக்கே
திரும்பவும்
அறுபட்டதன்
சுவடேதும் தெரியாமல்
குரல்வளை சேரவுமான
அம்மந்திரத்தை
"அப்போ நான் புறப்படட்டுமா நண்பரே!"

சுவாசிக்கக்கூடிவிட்ட நிலையில்
முணுமுணுக்கிறேன்
அவருக்குக்கேட்காமல்
"ரொம்ப நல்லது!"

உரக்கவே சொல்கிறான்
அருகேயிருந்த நிஷித்
"நல்ல ரொம்பது!"

- குட்டி, T.நிஷித்-க்கு