30.3.13

என் வளர்ப்பு வரால்கள்


ஆழம் பார்க்க
அமிழ்ந்த உனது கால்
பின்வாங்குகிறது
விருட்டென்று

உள்ளிருந்து
சிரித்துக்கொள்கின்றன தங்களுக்குள்,
பாதத்தோடு
கிச்சுக் கிச்சு மூட்டி
விலகிய
என் வளர்ப்பு வரால்கள்
இரண்டு.




29.3.13


 
   
நீ
மரம் அதன் கிளைகள்
மீதில்
பற்றினாற்போலுலவும்
பச்சைப் பாம்பும் நீ

நெளிவில்
ஊர்தலில்
கொடியல்ல நீயென்று
அறிந்திடும் வரையில்
சிறு கொடியும் நீ.

28.3.13

ஜனு குட்டி


ஊரில் இருக்கிறாள் ஜனு குட்டி
என்பதை
உங்களுக்கு
எழுதியே தெரியப்படுத்துகிறேன்
 

சொல்வேனெனில்
அப்புறம்
கணந்தோறும்
குழைந்து ஒலிக்கும்
அவளின் மொழியில்
செவிசாய்க்கப் பழகிய
இந்த
கரடி பொம்மையைத்

தேற்றவும்
இப்போதே இங்கே
இருந்தாகவேண்டும் ஜனு குட்டி.




இந்த அன்பு



நண்பர்களுக்கு வணக்கம்,

கடந்த சில நாட்களில் என் வலைப் பக்கத்துக்கு நண்பர்கள் பலரும் வருகை தந்து மேலான தங்களின் கருத்துக்களை பதிவு செய்திருப்பதோடு திரு.சேஷாத்ரி மற்றும் திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இந்த எளியவனின் வலைப் பக்கத்தை, படைப்புக்களை www.blogintamil.blogspot.in (வலைச்சரம்)-ல் அறிமுகம் செய்தும் வைத்திருப்பது, வலைப் பக்கத்தில் கருத்துரைகளை பெறும் / கையாளும் அமைப்பில் (settings) போதிய ஞானமின்மை காரணமாக, இப்போதே எனக்கு தெரிய வருகிறது. மேலும், இந்த அன்பு என்னை அதிகம் நெகிழவும், இத்தனை பேரில் புதியவர்களை நானே அறியாமல் நான் நண்பர்களாகப் பெற்றிருப்பதில் பெருமை கொள்ளவும் வைத்திருக்கிறது.

அன்பு நன்றிகள்:

ரிஷபன் ஜி,
சுந்தர்ஜி,
சேஷாத்ரி,
வை.கோபாலகிருஷ்ணன்,
பத்மா,
திண்டுக்கல் தனபாலன்,
அப்பாதுரை,
தாய் சுரேஷ்,
அகிலா,
இராஜராஜேஸ்வரி,
நிலாமகள்,
கே. பி. ஜனா,
வாசன்,
2008ரூபன்,
இரவின் புன்னகை,
கோவை மு.சரளா

- இன்னும் கவனக் குறைவில் விடுபட்டுப் போனவர்களுக்கும்.

27.3.13

இன்னும் பருகவேயில்லை



காகிதக் குவளையோடு
சர்க்கரை கலந்த பால்

இணைப்பாக
பரிசாரகன் இட்டுத்தருவது
நூலின் நுனியில்
சிறு தேயிலைப்பொட்டலம்

விளையாட்டுபோலக் கூட
மூழ்கடித்து மூழ்கடித்து
கரைக்கிறேன்

இன்னும் பருகவேயில்லை
எனக்கென்னவோ
இப்போதே என்
சோம்பல்
வடிந்து வருவதாகத்தானிருக்கிறது.


13.3.13

இரவு பகல்



கூரைத் துளை வழி
ஒழுகும் சூரியன்
இருள் மண்டிக்கிடக்கும்
அறையின்
தரை சேர்கையில் நிலவு

ஒளிப்பாதையை
மொய்க்கும் தூசுத் துகள்கள்
நக்ஷ்த்ரங்கள்

உள்ளே இரவு
வெளியே பகல்.

[முதல் வரி பிரமிளின் 'பட்டகம்' கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டது]




12.3.13

கோடிட்ட இடங்கள்






மின் கம்பி
துணி உலர்த்தும் கொடி
கோடிட்ட இடங்களை
நிரப்புகின்றன
பட்சிகள்.


மறந்து விடுகிறேன்



அப்பாலிருக்கும் அத்தனையையும்
ஊடுருவிப் பார்க்கவியலும்
கண்ணாடித்தொட்டி நீரோடு
உறுத்தும்
ஆக்ஸிஜன் குமிழிகளையும்
மறந்து விடுகிறேன்.

சற்றுமுன்பு வரை
நீந்திக்கொண்டிருந்தவை,
இப்போது கூட்டமாக
அந்தரத்தில்
பறந்துகொண்டிருக்கின்றன.

சித்திரம்




சாலை விஸ்தரிப்பு
என்று
வேரறுக்கப்படலாம்
நாளை இந்த சித்திரம்

அதற்குள்ளாக ரசித்துக்கொள்ளலாம்
புளிய மரங்கள்
இளநீர்க் குலை தள்ளி நிற்பதை.