12.8.11

பால் நிலா



'போடி, அது என்னோட நிலா..'
குரலில் வாளுருவி
கூரைவரை எகிறுவான்
குட்டி இளவரசன்

'அப்பா,
என்னோடதுனு சொல்லுப்பா..'என்று
கன்னத்தில்
கோட்டோவியமொன்றுருவாகும்வரை
பிறாண்டுவாள் குட்டி இளவரசி

கரைத்து
புட்டிகளில் ஆளுக்குக்கொஞ்சம்
பகிர்ந்தளிப்பதில் கழியும்
ராணியில்லா அரண்மனையில்
ராஜாவின் தேய்பிறை நாட்கள்.



4.8.11

பார்த்துக்கொண்டிருக்கிறேன்



நினைத்திராத ஒரு சமயத்தில்
தவிக்க விட்டு
எழுதுவதை நிறுத்திக்கொண்டது
சின்ரெல்லாவின் பேனா

மை பகிர ஏதுவாய்
மறை கழல
திருகுகிறாள் மித்ரா
தன் பேனாவை

பார்த்துக்கொண்டிருக்கிறேன் நான்
'கா' ஒன்று
பழமாகிக்கொண்டிருப்பதை

பட்டங்கள்




மிதக்கின்றன
அலைகின்றன
பறக்கின்றன ஆகாயத்தில்
தேகமே சிறகுமான
காகிதப்பறவைகள்

நாம் பார்க்கிறோம்,
கூடு திரும்பியவை போக
ஒன்றிரண்டு
மின்கம்பியில்
மரக்கிளையில்
நெடு நாட்களாய்
இளைப்பாறுவதையும்.

உன் மனம் உன் அன்பு




இருப்பதிலேயே மிகச்சிறிய சீசா
உன் மனம்
இரண்டே சொட்டு பெறும்
சொட்டி முடிக்கட்டும் என
காத்திருப்பதன் முடிவில்
அதிலிருந்து கிடைக்கப்பெறும்
உன் அன்பு

வீரியம் மிக்க உனதன்பின் ஒருபாதி
நக்கித்தீர்ந்திருக்க
வார்க்கிறாய் அடுத்தொரு பாதியையும்

வேட்டையாடப்படுவதின் ரகசியங்கள்
எல்லாம் விளங்கி
சடசடத்து உள்ளம் பொசுங்கும்,
ஆனாலும் வாலாட்டும்
வாழ்வின் அந்திமப்பொழுதிலும்,
வஞ்சித்து பழக்கப்படாத
இந்த நாய்

- (மாலதிக்கு)

மீனாகிறேன்



இரண்டு பக்கமும்
பற்களிருக்கும் சீப்பு போல
தோன்றவே செய்கிறது
உடல் நீத்த சிறு மீனின்
எலும்புக்கூடு

இரு உள்ளங்கைகளிடை வைத்து
மூடுகிறேன்
அது உடலாகிறது

எனக்குள் அலைந்து
நானே
மீனாகிறேன் 

நன்றி : கல்கி