30.12.11

என்னுள் வாழும் வனம்




மலைகள் காடுகள் நீர்நிலைகளென்று
எவற்றைக்குறிப்போம் இனி,
வரைபடத்தில்தான் நீ வருவதாயில்லையே.

அடவி வாழ் உயிரிகளென்று
எவற்றை வகைப்படுத்துவோம் இனி,
அருகி வருகின்றனவல்லவா அவைகள்.

கல்லோடு கல்லைக்கொண்டு மோதினால்
என்ன கிடைக்குமென்று
நெருப்பைக்கண்டடைந்தவன்
இன்று
காடுகளோடு தான் மோதுகிறான்,
போதிய தளவாடமோ உன்னிடமில்லை
தாக்குப்பிடிக்க

ஜீவராசிகளோடு இணக்கம் காணாத
அவனுக்குமாய்த்தானே இரங்கினாய்
உன் மடியையே உறைவிடமாய்த்தந்தாய்
அவனுக்குமே நீ வாழ்வாதாரமானாய்

மறுக்கப்பட்ட கனியையே
மீறியும் புசித்துவிட்டவன் முன்
நிபந்தனைகளின்றியே வைக்கப்பட்டதல்லவா
உன் வளங்கள் மொத்தமும்

உன் கனிமங்களை கொள்ளையிடுகிறான்

உன்னிதயத்தினடியில் சுரங்கம் பறிக்கிறான்

உன் வாஞ்சையின் அணைப்பிலிருக்கும் விலங்குகளை
வேட்டையாடுகிறான்
புழு பூச்சிகளை கொன்றழிக்கிறான்

மலை மார்புகளிலிருந்து
பால் வண்ணத்திலிறங்கி
நீராய்ப்பெருகும் உன் கருணையில்
கழிவுகளைக்கலக்கிறான்

நச்சுக்காற்றை கிரகித்து
நல்ல காற்றைத்தரும் பச்சையம் உன்னை
உதாசீனம் செய்கிறான்.

எல்லாம் முடித்து
டிஸ்கவரி, அனிமல் பிளானட்
சானல்களை புரட்டிக்கொண்டே
அவன் புரியவும் ஒன்றுளது கானகமே

அது,
தங்க முட்டையிடும் வாத்தை
தான் அறுத்துவிட்டது.

- (கோவையில் ஒசை அமைப்பு நடத்திய
சர்வதேச வன ஆண்டு 2011 விழா கவியரங்கத்துக்காக
எழுதி வாசிக்கப்பட்டது)

28.12.11

வெற்று நதி உருவாக்கும் சித்திரம்

 


பெருக்கெடுக்கும்
ஏமாற்றமெனத்தளும்பி
கரையேறுகின்றன கிடையாடுகள்
கூழாங்கற்களில் மோதி
சலசலக்கிறது
கீதாரி
இடமிது உசிதமென்று கழிக்கும்
சிறுநீர்

உடன் வரும் மரங்கள் - 2



ஆசுவாசமளிக்கிறது,
எங்கிருந்தோ வந்து
கிளை மீதிலமரும் குருவியின்

நிழல்
போன்ஸாய்
  மரத்துக்கு.

உடன் வரும் மரங்கள் - 1



தள்ளு வண்டியோடு நகர்கிறது
சாலையின் மருங்கில்
போன்ஸாய் மரங்களடர்ந்த
ஒரு குறும் வனம்

வார்த்தைகளில்
சுள்ளி சேகரித்து
கூடு கட்டுகிறது,

பேருந்தின் சன்னலினூடே
கண்ணுறுகையில்
அம்மரங்கள்
ஒத்த திசையில் உடன் வருவதை
குறித்துக்கொண்டுவிட்ட மனப்பறவை
இக்கவிதையை

26.12.11

சூரியனை முறைக்கும் கண்கள்



1)
ஒரு மழை நாளில்தான்
நேருக்கு நேர் பார்த்துக்கொண்டோம்
இரண்டே கண்களால் நானும்
மயிலிறகுகளின்
ஆயிரம் கண்களும்

2)
புத்தகத்தில்
பதுக்கியிருப்பதையும் சேர்த்து
ரெட்டை ஜடைக்காரிக்கு
மொத்தம்
மூன்று கண்கள்

3)
கூசவுமில்லை
நிலைகுத்தி நிற்கின்றன
வயல்வெளியோடு சிதறிக்கிடக்கும்
கண்கள் சிலவற்றின் பார்வைகள்
சூரியனில்

4)
மயிலிறகின் கண்ணுக்காயும்
சிமிட்டுவாய்
என்னிமையே

5)
பேகன் தோன்றிய
- மயிலின் - நூற்றுக்கண்களில்
ஒன்றில்தான் இப்போது
நானும் தோன்றுகிறேனென்றால்
அது மிகையாகாது

- நன்றி: ரமேஷ்-பிரேம்-ன் கவிதைக்கு


21.11.11

காகிதக்கப்பல்






மழை விட்டதறிந்து
சன்னல்களூடே சந்தித்துக்கொள்கிற
எதிரெதிர் வீட்டுச்சுட்டிப்பயல்களின்
கண்களில் நிலைத்துவிட்டது
மின்னலின் ஒளி

ஆர்ப்பரித்துத்தெருவுக்கு வரும்
அவர்தம் கைகளில் தவழ்கின்றன
நூற்றுக்கணக்கில் கப்பல்களை
தம்முள் பதுக்கி வைத்திருக்கும்
எழுதித்தீர்ந்த நோட்டுப்புத்தகங்கள்

பிஞ்சு விரல்களால் தாள்கள்
கிழிபடுவதிலிருந்து துவங்குகிறது
காகிதம் தவிர
உதிரி பாகங்கள் எவையுமின்றி
கப்பல்கள் கட்டும் பணி

ஆயிற்று..
மழை நீரின் ஓட்டத்தில்
மெல்ல உந்தப்பட்டு நகர்கிறது
மாலுமியொருவன் செலுத்துவதன்
நிர்பந்தங்களேதுமற்ற கப்பல்களில்
முதல் கப்பல்

மேலும் நகர்கிறது,

சிறுவர்களின் பார்வையிலிருந்து
மறையும்வரை பயணப்பட்டு
ஈரலித்தலினிமித்தம்
அவிழ்தலில்
மழை நீருடன் தன்னை
காகிதமாகவே
சமரசம் செய்துகொள்வதை நோக்கி.


- நன்றி, சொல்வனம் இணைய (12.11.2011) இதழ்



19.11.11

எஃப் டிவி ஒளிரும் கார்காலம்



மெத்தென்ற இருக்கையில்
ஒய்யாரமாய்க் கிடந்து
பளிங்குக்கல் தரையில்
ஒருக்களித்துப் படுத்து
ஒன்றிற்கு மூன்றுமுறை
கோணங்கள் மாற்றிக் குனிந்து
கிறக்கம் கிளர்த்தும்
எஃப் டிவியின்
முக்கால் நிர்வாண வானத்தின்
மேகங்கள் மீது வெட்டுகின்றன
காமிரா மின்னல்கள்
 
இடியோசையை
இதயத்துடிப்பில் வைத்திருப்பவனிடமிருந்து
எந்த நிமிடமும் பொழியலாம்
கனமழை.

- நன்றி உயிரோசை (உயிர்மை.காம்) 14.11.2011 இதழ்

6.11.11

சஞ்சாரம்



காணவில்லை என்பதற்கும்
கண்டுபிடித்துத்தர
உருகியுருகி கேட்டுக்கொண்டதற்குமிடையில்
வெகு இயல்பாய்
குறுநகைத்தவாறிருக்கிறான்
மார்பளவு நிழற்படத்தில் அவன்


சடை விழத்துவங்கிவிட்ட
தலையோடும்
அதீதமாயொளிரும் கண்களோடும்
பின்னும்
பிறந்த மேனியோடும்
அதே நகரத்தின்
தெருக்களில் திரிந்தாலும்


வேறெவரும் கண்டறியாதபடிக்கு
அவன் சஞ்சரிப்பது
தம்மை கண்டடைந்தவர்களின்
உலகிலாயிருக்கலாம்

-
நன்றி சௌந்தர சுகன்

2.11.11

நிறமில்லாத இரத்தம்

முன்னதாக :

அரிமா...முருகேசன் அவர்களை ஆசிரியராய்க்கொண்டு, கோவையிலிருந்து வெளிவரும் சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய விழிப்புணர்வு மாத இதழ் அகிலம். (தொடர்புக்கு: பேசி: 9842291116 ; தொடர்புடைய படைப்புக்களை அனுப்பி வைக்க, மின்னஞ்சல்
முகவரி: editor@agilam.org)

நீர் நிலைகளை, காடுகள் மற்றும் விளை நிலங்களை பாதுகாத்தல், இயற்கையோடு இணைந்த உணவு, மருத்துவ முறைகளை ஏற்றல் குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதற்கென தொடங்கப்பட்டிருக்கும் இந்த இதழ், இதே நோக்கத்தோடே வெளிவந்துகொண்டிருக்கும் ஏனைய இதழ்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாயும் தரமாயுமிருக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட, வாசக மனத்தில் வினையாற்றக்கூடிய கட்டுரைகள், (பிரச்சார) கவிதைகள் மற்றும் தன்னம்பிக்கை தொடர்கள், பகத்சிங், திப்புசுல்தான் போன்றோரின் வரலாற்றுத் தொடர்கள், இன்னபிற சிறந்த பகுதிகளையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் அகிலம் இதழில் - குறிப்பாக - இக்கவிதை அச்சேறியிருப்பதில் மகிழ்கிறேன்.
 


இன்றோடு
அறுந்து தரை வீழ்கிறது
உன் தாய்மையின் தலை

இன்றுதான்
சிதறியுடைந்து பாழாகிப்போனது
கிளைகள் நீட்டி
இலைகளை வேய்ந்து
நீ கட்டிய அந்த பிரம்மாண்ட வீடு

நேற்றுவரை
புழு பூச்சி பறவைகளின்
பிரசவம் நிகழ்ந்த
இலவச மகப்பேறு மருத்துவமனையாயிருந்தது
உன் மனை

பிராணிகளின் பிராண வாயு
சுதந்திரம் என்பதால்
அவை
தாவி ஓடி விளையாடும்
தடகளப்போட்டி மைதானமாயிருந்தன
உன் தோள்கள்

சுவற்றில் சிறு கீறல் விழுந்தாலே
அலறும்
வீட்டு உரிமையாளர்கள் மத்தியில்
வாடகையேதும் வாங்காமல்
குருவிகளையும் காக்கைகளையும்
குடிவைத்தவள் நீ

உன் தேகமெங்கும்
நாங்கள்
ஆணிகளால் அறைந்தோம்
கூரான ஆயுதம் கொண்டு
காதலரின் பெயர்கள் வரைந்தோம்

ரணமானதே மேனியென்று
ரௌத்திரம் கொள்ளாமல்
கனமான உன் சோகங்களை
எங்களுக்கு
காட்டாமல் மறைத்த
கண்ணியக்காரி நீ

நாங்கள்
உழைத்துக்களைத்து
உன் மடி தேடி வந்தால்
வெயிலை வடித்துவிட்டு
நிழல் தேனீர் தந்தாய்

பசி பொறுக்காமல் உன்
புகலிடம் தேடி வந்தாலோ
உயிரைக்கனியாக்கி
உண்ணக்கொடுத்தாய்

இறுதியாய்,

நீ மரித்து வீழ்ந்த பின்புதான்
மிச்சமான உன் எலும்புகள்
எங்கள் வீட்டின்
மேஜை நாற்காலிகளாயின

மனிதர்கள் எங்களை நீ
மன்னித்துவிடு

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்
என்று சூளுரைத்தோம்
பின்பு
எங்கள் பேருந்துகள் பயணிக்க
சாலைகளில்
நாங்களே
உன்னை வேரோடு அறுத்தோம்

ஆம்..

ஈன்ற அன்னையருக்கே
முதியோர் இல்லத்தில்
கல்லறை தயாரிக்கும் நாங்கள்
அறியவில்லை

வாள் கொண்டு கிழித்தபோது
வழிந்த
நிறமே இல்லாத உன் ரத்தம் பற்றி

காற்று மொத்தமும் நிறையும்படி
பெருங்குரலெடுத்து அழுத
உன்
சத்தம் பற்றி..


- 'அகிலம்' - செப்டம்பர் இதழில்

18.10.11

நிழல்

 

வண்ணங்கள் படைத்தலின்
பிதா நான்
என்னும்
கர்வம் கொண்டிருந்த என்னை
அதனியல்பிலிருந்து
பரிகாசம் செய்கிறது
தூரிகையில் எடுத்த
நிறத்தின் நிழல் 

              

17.10.11

தற்கொலையை விவரித்தல்



உடைந்து
சிதறி
தெறித்து
சரிந்து
கலந்து
தத்தளித்து
துடிதுடித்து
கொப்பளித்து
குமிழியிட்டு
மூச்சுத்திணறி
மெதுமெதுவாய் அடங்கி
மீட்டுருக்கொண்டு
மிதக்கிறது கிணற்றில்
அம்புலியின்
மரணத்தின் கறை படிந்த
ஒரு பிரதிபிம்பம்.

13.10.11

சீதைப்பாஞ்சாலி



இன்று
நாடகத்தில் சீதை பாத்திரமெனக்கு

என் கண்ணீர் குடித்தே வளர்ந்துவிட்டது
மேடையோடு வீற்றிருக்கும்
அசோகவனத்தின் மரமொன்று

இராமனுக்காகவே காத்திருந்து காத்திருந்து
தேய்ந்துகொண்டிருக்கிறது காலம்

கதைப்படி,
ஆகாரம் கொண்டுவரும் அரக்கிகளை
தவிர்க்கிறேன்
புராணச்சீதையின்
புதுப்பித்த கோபத்தோடு

என் அபயக்குரல்
அரங்கெங்கிலும் ஒலித்த நேரம்
ஒப்பனை அறையிலிருந்து
ஓடிவந்தான் அனுமன்

சிந்தும் விழிநீர்
உதட்டோரம் உப்புக்கரிக்க
வசனம் பிசகி
வார்த்தை வந்தது இவ்வாறு

அனுமனே
இராவணன் கூட கண்ணியன்தான்
எனவேதான்
என் கற்பு இன்னும் களவுபோகாதிருக்கிறது

விந்தை காண் வாயுபுத்ரனே,
பார்வையாளர் பார்வையெல்லாம்
என் மேலாடயை கிழித்தல்லவோ
மேனியை புசிக்கிறது!

அவையில்
ஆயிரம் துச்சாதனர்கள் இவர்கள்
ஒரேயொரு பாஞ்சாலி நான்
சீதையல்ல

அதனாலே செப்புகிறேன்
எனை மீட்க
இராமனை வரவழை பிற்பாடு
மானம் காக்க
கண்ணனை அழை இப்போது

- நன்றி, U M T.ராஜாவுக்கு

12.10.11

ஆறு கவிதைகள் நிரப்பப்பட்ட துப்பாக்கி




1)
பின் மண்டையில் அழுத்தி
சுடப்பட்டவன் நெற்றியை
துளைத்துக்கொண்டு
வெளியேறுகிறது குண்டு

முன்னதாக
தெறித்து விழுந்தது
நெற்றிக்கண்

2)
புதிதாய்
நான் வாங்கியிருக்கும்
கைத்துப்பாக்கியில் சுட்டுப்பழக
ஆட்கள் தேவை

3)
தற்கொலை செய்துகொள்ளப்போவதாக
மிரட்டி நிற்கும்
அவனின் விரல்
எப்போது சுண்டும் ட்ரிக்கர்-

துப்பாக்கியில் எழும்பும்
டுமீல் இசை
எனக்கு ரொம்ப பிடிக்கும்

4)
இறந்துபோனதென்று
தகவல் வந்தது,
பேட்டரி வாங்கிச்செல்லவேண்டும்
நிஷித்-தின் துப்பாக்கிக்கு

5)
அன்புள்ள திருடனுக்கு
என் தலையணையின் கீழ்
ஒரு பிஸ்டல்-ஐ வைத்துக்கொண்டே
உறங்குகிறேன்,
பின்னும்,
தூக்கத்தில் சுடும் நோயும்
எனக்குண்டு

6)
அரிசியில் போலவே
எழுதப்பட்டிருக்கலாம்
துப்பாக்கியின் ஒவ்வொரு குண்டிலும்
நம் பெயர்களும்


30.9.11

ஸ்னேகம்



தினம் ஒருபிடி தானியம் எடுத்து
வாசலில் இறைப்பேன்,
வானத்திலிருந்து இறங்கி வந்து
கொத்தித்தின்று பசியாறி
பறந்து போகும் குருவிகள்.

தினம் வாசலில் வந்து இறையும்
ஒருபிடி தானியம் போலும்,
என் மனத்தின்
முல்லை மொக்கையொத்த
மென் அலகால்
வலிக்காமல் தம்மை
கொத்தித்தின்னவிட்டு
ரசனையின் பசியாற்றி
பறந்து போகும் குருவிகள்,
அவ்வளவுதான்!


27.9.11

அவனது வானம்



அனுசரித்துக்கொள்ளலாமென்றுதான்
விரித்து தெருவிலிறங்குகிறான்

ஒளிர்ந்தபின் அணையாமல்
மின்னற்கிளைகள் வியாபித்திருக்கும்,
பின்னும்,
தலைக்கு மேலிருந்து
போலி அல்லது இரண்டாம் தர
மழை பொழியும் மேகம்
உறைந்திருக்கும்
கிழிசல் வானத்தை.

26.9.11

முன்பு


முன்பு
மரமிருந்த இடத்தில்
இப்போது அலைபேசி கோபுரம்

பழகிக்கொள்ளுகிறது
ஒரு பறவை
சன்னமாய் நீளும்
நிழலிலமர்ந்தும்
இளைப்பாறுதலை

23.9.11

பிளவுபடாதவன்



சித்தம் பிறழ்ந்தவன் அவன்,

பிணி
மூப்பு
மரணம்
இவை எதன்பொருட்டும்
பிளவுபடாதவனாய்
சிரித்தபடி நகர்கிறான்
அந்த
நித்திய சித்தார்த்தன்


நன்றி : யாழிசை

தேகம்



அரிவாளால்
சுற்றிவர சீவி
நடுவில்
அரையங்குல ஆரத்தில்
துவாரமிட்டு
குழல் செருகி
உறிஞ்சிப்பருகி
ஆனதும் தூக்கியெறியப்படும்
இளனீர்க்கூடன்றி வேறென்ன
இந்த தேகம் 


நன்றி : சௌந்தர சுகன்                    

20.9.11

கலசங்கள்



டிங் டாங்கென்று
மோத விடுகிறார்கள்
ராட்சச வடிவ கோயில் மணியை,

கோபுரத்திலிருந்து பெயர்ந்து
சிதறுகின்றன சிறகடித்து
கொஞ்சம் கலசங்கள்.

19.9.11

பனித்துளி




பனித்துளி,
புல்லின் விரலில்
வெள்ளிக்கல் மோதிரம்
அணிவிக்கும்

இலைக்கண்ணில்
ஆனந்தக்கண்ணீர் பெருக்கும்

பூவிதழின் சருமத்தில்
முத்தாய் வியர்க்கும்

கொடியில்
கொஞ்ச தூரம் சறுக்கும்.

பனித்துளி,
வயிறு நிரம்ப
வெய்யிலைத்திண்ணும்

வயிறு முட்ட
வெய்யிலைக்குடிக்கும்

வெய்யிலையுடுத்தி மறையும்
பனித்துளி.