30.12.11

என்னுள் வாழும் வனம்




மலைகள் காடுகள் நீர்நிலைகளென்று
எவற்றைக்குறிப்போம் இனி,
வரைபடத்தில்தான் நீ வருவதாயில்லையே.

அடவி வாழ் உயிரிகளென்று
எவற்றை வகைப்படுத்துவோம் இனி,
அருகி வருகின்றனவல்லவா அவைகள்.

கல்லோடு கல்லைக்கொண்டு மோதினால்
என்ன கிடைக்குமென்று
நெருப்பைக்கண்டடைந்தவன்
இன்று
காடுகளோடு தான் மோதுகிறான்,
போதிய தளவாடமோ உன்னிடமில்லை
தாக்குப்பிடிக்க

ஜீவராசிகளோடு இணக்கம் காணாத
அவனுக்குமாய்த்தானே இரங்கினாய்
உன் மடியையே உறைவிடமாய்த்தந்தாய்
அவனுக்குமே நீ வாழ்வாதாரமானாய்

மறுக்கப்பட்ட கனியையே
மீறியும் புசித்துவிட்டவன் முன்
நிபந்தனைகளின்றியே வைக்கப்பட்டதல்லவா
உன் வளங்கள் மொத்தமும்

உன் கனிமங்களை கொள்ளையிடுகிறான்

உன்னிதயத்தினடியில் சுரங்கம் பறிக்கிறான்

உன் வாஞ்சையின் அணைப்பிலிருக்கும் விலங்குகளை
வேட்டையாடுகிறான்
புழு பூச்சிகளை கொன்றழிக்கிறான்

மலை மார்புகளிலிருந்து
பால் வண்ணத்திலிறங்கி
நீராய்ப்பெருகும் உன் கருணையில்
கழிவுகளைக்கலக்கிறான்

நச்சுக்காற்றை கிரகித்து
நல்ல காற்றைத்தரும் பச்சையம் உன்னை
உதாசீனம் செய்கிறான்.

எல்லாம் முடித்து
டிஸ்கவரி, அனிமல் பிளானட்
சானல்களை புரட்டிக்கொண்டே
அவன் புரியவும் ஒன்றுளது கானகமே

அது,
தங்க முட்டையிடும் வாத்தை
தான் அறுத்துவிட்டது.

- (கோவையில் ஒசை அமைப்பு நடத்திய
சர்வதேச வன ஆண்டு 2011 விழா கவியரங்கத்துக்காக
எழுதி வாசிக்கப்பட்டது)

1 comment:

  1. கவியரங்க கவிதையிலும் எங்கள் தியாகு
    கலக்குவார் அற்புதமான ஏக்கத்தின் பதிவுகள் தோழர்
    எனினும் உங்கள் அடர்வான பயணத்திற்கு
    இந்த வேகம் பொருந்தாமல் இருக்கிறது
    அன்புடன்
    -இயற்கைசிவம்

    ReplyDelete