13.10.11

சீதைப்பாஞ்சாலி



இன்று
நாடகத்தில் சீதை பாத்திரமெனக்கு

என் கண்ணீர் குடித்தே வளர்ந்துவிட்டது
மேடையோடு வீற்றிருக்கும்
அசோகவனத்தின் மரமொன்று

இராமனுக்காகவே காத்திருந்து காத்திருந்து
தேய்ந்துகொண்டிருக்கிறது காலம்

கதைப்படி,
ஆகாரம் கொண்டுவரும் அரக்கிகளை
தவிர்க்கிறேன்
புராணச்சீதையின்
புதுப்பித்த கோபத்தோடு

என் அபயக்குரல்
அரங்கெங்கிலும் ஒலித்த நேரம்
ஒப்பனை அறையிலிருந்து
ஓடிவந்தான் அனுமன்

சிந்தும் விழிநீர்
உதட்டோரம் உப்புக்கரிக்க
வசனம் பிசகி
வார்த்தை வந்தது இவ்வாறு

அனுமனே
இராவணன் கூட கண்ணியன்தான்
எனவேதான்
என் கற்பு இன்னும் களவுபோகாதிருக்கிறது

விந்தை காண் வாயுபுத்ரனே,
பார்வையாளர் பார்வையெல்லாம்
என் மேலாடயை கிழித்தல்லவோ
மேனியை புசிக்கிறது!

அவையில்
ஆயிரம் துச்சாதனர்கள் இவர்கள்
ஒரேயொரு பாஞ்சாலி நான்
சீதையல்ல

அதனாலே செப்புகிறேன்
எனை மீட்க
இராமனை வரவழை பிற்பாடு
மானம் காக்க
கண்ணனை அழை இப்போது

- நன்றி, U M T.ராஜாவுக்கு

1 comment:

  1. விந்தை காண் வாயுபுத்ரனே,
    பார்வையாளர் பார்வையெல்லாம்
    என் மேலாடயை கிழித்தல்லவோ
    மேனியை புசிக்கிறது!

    முழுக் கவிதையையும் கனத்த மனசுடன் தான் வாசிக்க முடிகிறது.. மனிதருள் ஒளிந்திருக்கும் சபலங்கள் வினோதம்

    ReplyDelete