1.10.15

வெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை



வெள்ளி இழைகளை
விழிகளையுரசும்  நெருக்கத்தில்
காணப்பிடிக்கும்

சேரும் இடைவெளியில்
தம்மை
வலுவற்றவையாய் மாற்றிக்கொண்டு
குழந்தையின்
மென்கரங்களில் மோதி முறியும்
வெள்ளிக் கம்பிகளை அறிவேன்

ரயிலின்
ஜன்னலோர இருக்கையை
வேண்டிப் பெற்று
உச்சியில்
பரந்திருக்கும் வானை
தாங்கி நிற்கும் வெள்ளித் தண்டை
வியந்துகொண்டிருக்கையில்

தாழ மறுக்கும் என் இமைகளுக்கப்பாலும்
திணிப்பதற்கேயொரு திரையிருப்பதை
இருக்கையில்
அடுத்திருந்தவன்தான்
அறியத் தந்தான்

'மழை தெறிக்கிறதே
கண்களை
மூடிக்கொள்ளலாமா?'


(கணையாழி /அக்டோபர்-2015 இதழ் கவிதைகளில்
பரிசுக்குத்தேர்வான கவிதை)

நன்றி: கணையாழி / அக்டோபர்-2015 இதழ்




9.9.15

இரண்டு கவிதைகள்



1)

தேவன்
வானுலகிலிருந்து ஏவிய
மழையில் தொடங்கி,
வலுத்து
வெளியே
தெருக்கள்தோறும் புரளும்
பெருவெள்ளம்.

நோவாவின் பேழையென
மிதந்திருக்கும்
பலமற்ற அஸ்திவாரத்திலான
ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த வீட்டில்
உறைந்திருக்கிறோம் பிழைத்து,
நீ
நான்
குழந்தைகள்
சுவரில் பல்லி
சிலந்தி
மற்றும்
தரையில் சிற்றெறும்புகள் சில.

கூரை விரிசலில் ஒழுகி,
சரியாக
நெகிழியில்
சரியும் நீர்,
சற்றுமுன்தான்
சந்தையில் துள்ளி
இந்த சமையலறையில்
விழுந்த மீன்களை,
நீந்தப்பண்ணிவிட
பரபரப்பதை கவனித்தாயா...


2)

நிலவை
குடைந்து செய்த கோப்பையோடு
நீ பரிமாறிய
நீர்ம இரவில்
போதாமை என்கிறேன்

சிறு கரண்டி துருத்திக்கொண்டிருக்கும்
கிண்ணத்தை
என் பக்கமாக நகர்த்துகிறாய்

கொஞ்சமும் நக்ஷத்திரங்களைச் சேர்...


- நன்றி: ‘காலச்சுவடு’ செப்டெம்பர் 15 இதழ்


நண்டுகளில் அலைவுறும் சிசுவின் பாதங்கள்



உறைந்த இருளென
நீலக்கடற்
கரைகொண்டிருக்கும் பாறை.

பிரித்தறியவியலா
அவயமே போல்
அதன்
வண்ணத்திலேயேயிருந்து
பற்றி நிற்கும்
ஒன்றிரண்டு நண்டுகள்.

அளவில்
பெரியதும் சிறியதுமான அலைகள்
மோதி மோதி
நுரைக்கக் கழுவியும்
வெளுத்திடாத நண்டுகள்
பெயர்வது அவ்வப்போது,

உள்ளிருந்து அலைவுறும்
கர்ப்ப கால சிசுவின்
பாதங்களைப் போல

மற்றும்

பாறை வயிறு
அங்கங்கே புடைக்கும்படியாக.

-  நன்றி: ’படிகம்’ கவிதைகள் இதழ்

28.5.15

கல் கவிதைகள்


1)

தழுவலின் போதெல்லாம்
தளர்த்திய ஆடைகளை
தன்போக்கில் அடித்துப்போனது
நதியே

கூழாங்கல்லோடு நாம்
காண்பதுதான் என்ன
கல்லொன்றின்
அம்மணம் அல்லவா

2)

கல் தேவதை
கல் ஸ்தனங்கள்

இரங்கவே இரங்காத மனசு
கல்
                                                          
3)

கல் மேலெழும்பவென
குடத்தினுள்
நீர்மேல் நீராய்
வார்த்துக்கொண்டிருக்கிற
மடக் காகம் நான்தான்

கல்
கல்தான்


21.5.15

இரண்டு கவிதைகள்


1)

கனன்றுகொண்டிருக்கிற
சிறு கங்கு போல
மேலிருந்து
சுடர்ந்திருக்கும் இரவு விளக்கு
ஆரஞ்சு வர்ணம்

அடுத்தடுத்து
உடைகள் நீங்கிய
உடல்களை பார்க்கையில்
தோலுரித்த
சுளைகளேதான் நாம்.


2)

பிளந்து வைக்கப்பட்ட
மாதுளம் பழம்

சிதறி உருளும் எனில்
ந.பெரியசாமியின்
சிவந்த கண்ணீர்த்துளிகள்

அதனறைகளிலேயே வைத்து
பார்த்துக்கொண்டிருக்கிறேன்

தேனடை.

6.5.15

கரப்பான் கவிதைகள்


1)

அடுத்தடுத்த வரிகளோடு
அலையாது
கவிதையின்
முதல் வரியெனவே
உறைந்து நிற்குமொரு
கரப்பான்

முன்விரியும்
தாளே
தன்னைக் கொல்லும்
சாக்கட்டித் தீற்றலோவெனத்
திகைத்து

2)

தனக்கு
முழுநீளக் கையாக ஆன
துடைப்பம்
ஒன்றில்தான் அறைந்தாள் ஓங்கி

சிறகுகள் நடுங்க
செத்துப்போன கரப்பான்
சற்றைக்கெல்லாம்
சில நூறு கால்களால்
நடந்து
இடம்பெயர்ந்தபோதும்
ஒரு வீறிடல்



26.3.15

சுதந்திர பிரியத்தை அள்ளித் தரும் கவிதைகள் - பொன்.இளவேனில்



ப.தியாகு-வின் -
“எலிக் குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை”
- கவிதைத் தொகுப்பின் வசீகரத்தில்


பொன்.இளவேனில்
ஒரு கை நீரள்ளி
மேல் தெளிக்கிறாள்
துணுக்குற்றது போல
கொஞ்சமே அசைந்து கொடுக்கிறது
இன்னும்
உயிரிருக்கும் ஒரு மீன்
அதைத்தான்
தேர்ந்தெடுக்க வேண்டும் நாம்   -  (பக்கம்-61)

ஒரு நிதர்சனமான ஒளியைத் தொலைத்து விட்டதன் இருப்போடும் ஏக்கத்தோடும் அதன் அறிகுறிகள் தென்படும் திசைகளை நோக்கி ஒரு பைத்தியத்தின் வெறியோடு காலமெல்லாம் கவிஞனென்பவன் தேடிக் கொண்டே இருக்கிறான். அதன் ஊமைக் குரல்கள் காலமெல்லாம அவனை அழைத்துக் கொண்டே செல்லும் உணர்வு போலவும் இருக்கத்தான் செய்கிறது. இடையில் எந்த ஆறுதல்களும் எந்த திருப்திகளுக்கும் ஆற்றுப் படாத கவிமனம். படாத பாடுபடும். அவனை குறைந்து விடாத ஆகிருதியோடு பயணிக்கவும் செயல்படவும் வைக்கிறது.

அவன் தொலைத்திருக்கும் ஒளியென்பது ஒளிவடிவமாகவோ, கடவுள் வடிவமாகவோ, சிறு பறவை வடிவமாகவோ ஏதாவது ஒரு உருவமாகவும் மாறியிருக்கக் கூடும். அல்லது மாறிவிடவும் கூடும். ஆனால் அவன் என்றென்றும் தன் நிலையிலிருந்து அதனை அடைந்துவிடக்கூடிய பயணத்தை அல்லது நெருங்கி விடக்கூடிய உத்வேகத்தை  குறையாது தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தான் ஒரு கவிஞனாக தீராத கவிதைகளின் மூலம் அவனுக்கான உலகத்தை அமைத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறான். கவிஞன் புற உலகத்தால் ஆமோதிக்கப் படுவதில்லை, காரண காரியங்களுக்குள் லாப நஷ்ட விதிகளுக்குள் சிறைபடுத்திக் கொள்ள எத்தனிக்காதவன். அவனுக்கு ஒப்பனைகளாலான தீனிகள் செல்லுபடியாகாது.


சொற்களின் கூட்டிலிருந்து வெளியேறும் பதட்டத்தின் எந்தத் தடயங்களும் இந்தக் கவிதைப் பரப்புகளில் படிந்திருக்கவில்லை. ஒரு நீண்ட இருப்பின் கிளைகளிலிருந்து பச்சை பிடித்திருக்கும் காட்சிப் பின்னலை எதேச்சையாக அமைத்திருக்கிறது தியாகுவின் கவிதைகளுக்கான கலன்கள். எந்த கவ்வுதலுக்கும் முன்னான பதைபதைப்புகளை செரித்து நிகழ்தலில் இறையாகிப் உருப்பெரும் ஆசுவாசத்தின் மீண்ட நிசப்தத்தை  சொற்களுக்குப் பின்னால் வழியவிடும் நுட்ப வியூகத்தை விரிவுப்படுத்தும் யுக்தியை கையாளும் விதம் தான் கவிஞனின் தனித் தன்மையெனப் புலனாகிறது.  இந்த தொகுப்பில் தெளிந்திருக்கும் கவிதைகள். இம்மாதிரியான வடிவ நிலைகளிலேயே பயணித்திருக்கிறது.

தன் முழுமைக்கு பின்னான ஒளிக் கோடுகள் பல தோரணைகளைக் கொண்டிருக்கின்றன. பல விதமான வாசனைகளை ஏந்தியுள்ள இந்த வடிவ தோற்றங்கள் பரவலாக்கப்பட்ட ஆழங்களின் வசப்படுத்தப்பட்டிருக்கும் தருணங்களைக் கண்டுணர்ந்திருக்கின்றன. ஒருபோதும் இவைகள் அதன் பிறப்பின் சூழல்களுக்கான பிரியங்களையோ, தழுவும் குரல்களையோ ஒப்பிட்டபடி நகர்ந்து செல்லவுமான இயக்க விசைகளை சுருக்கிக் கொள்ளவுமில்லை. 

இந்தக் கவிதையை

மூடியே கிடக்கும்
கைவிடப்பட்ட வீட்டின்
ஜன்னல் கண்ணாடியுடைத்து
கம்பியில் பட்டு
மீள்கிறதொரு பந்து
கதிர்ப் பாதம் வைத்து
சூரியன்
உட்பிரவேசித்ததும்
இந்தக் கவிதையை
நீங்கள் அழித்துவிடலாம். - (பக்கம்-29)

தெளிவால் கோர்க்கப் பட்டிருக்கும் அற்புதமான கணங்களால் இக்கவிதை பூரணமாகியிருக்கிறது. வலியின் இறுக்கங்களுக்கு கருணையால் நிரப்பப்படும் சுதந்திர பிரியத்தை அள்ளித் தரவியலும்  முனைப்பில் கவிஞன் சூழலோடு நிறைந்திருந்த தருணம் அழகாகவே வாய்த்திருக்கிறது. கவிஞனின் பட்டயம் என்றாகவும் முன்னிற்கத்தான் செய்கிறது.

பயணத்தை எந்தவொரு திசையையும் பற்றிக் கொள்ளாதிருத்தல் அல்லது தீர்மானிக்கவியலாத அல்லது தனி விருப்ப வெறுப்பமே இல்லாத நடைமுறையில் பயணிப்பது அல்லது பயணத்தை தொடங்குவது என்பதான இடத்திலிருந்து நகரும் மையப் புள்ளியிலிருந்து படிந்திருக்கும் கவிதைகள் பூர்த்தி பெறுகிறது. என்னைப் பொறுத்தவரையில் கவிதைக்கான மனம் பார்த்தீனியா செடிகளுக்கும்,  நந்தியாவட்டை பூக்களுக்கும்,  ரோஜாச் செடிகளுக்கும், அருகம்புல் கூட்டத்திற்குள்ளும் நகரும் பயண அனுபவத்தை கவிஞனென்பவன் கடந்து செல்லவேண்டியவனாக இருப்பதாலேயே, பார்த்தீனியா பூக்கள் தெறித்த கண்களின் உருத்துதலோடு மீதியைப் பார்க்கும் சிறு நடுக்கமே கூட கவிதைகளாக வேண்டிய அவசியமாகவும் ஆகிறது என்பேன்.

ஸ்நேகம்

தினம் ஒருபிடி தானியம் எடுத்து
வாசலில் இறைப்பேன்
வானத்திலிருந்து இறங்கி வந்து
கொத்தித்தின்று பசியாறி
பறந்து போகும் குருவிகள்

தினம் வாசலில் வந்து இறையும்
ஒருபிடி தானியம் போலும்
என் மனத்தின்
முல்லை மொக்கையொத்த
மென் அலகால்
வலிக்காமல் தம்மை
கொத்தித் தின்னவிட்டு
ரசனையின் பசியாற்றிப்
பறந்து போகும் குருவிகள் -  (பக்கம்-43)

ஒரு வெட்டுக் கிளியின் துள்ளலும், ஒரு தும்பியின் பறத்தலும், படபடக்கும் ஒருசிட்டுக் குருவியின் பரவசமும் கவிஞனுக்கு ஒன்றுதானென்றாலும் அதன் குணாம்சத்தை அவனுடைய கவிதைகள் பிரதிபலிக்கவேண்டும். தியாகுவின் கவிதைகளில் பிரதிபலித்திருப்பதை உணரவும் முடிகிறது.

பொதுவாக எனக்கான வேலைப்பளுக்களோடு இயந்திரத்தனமான
வேகத்திற்கிடையில் என் முன்னால் உயர்ந்து நிற்கும் அல்லது நெருங்க நெருங்க தொலைவாகிக் கொண்டேயிருக்கும் இடைவெளியை பூர்த்தி செய்வதற்கான ஓட்டநிலைகளில் நண்பர் தியாகுவோடு கவிதைகளுக்கான தரிசன நெருக்கங்கள் பற்றி நேரடியான, அதிகப்படியான, பரிமாறுதல்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புகள் அமைந்திருக்கவில்லை. எங்களின் சந்திப்புகள் அவசரகால, பதற்றகால நிலைகளிலேயே பெரும்பாலும் சாத்தியமாகியிருக்கிறது.

முழுக்க முழுக்க இலக்கிய உணர்ச்சி வயமான ஓட்டங்களை அல்லது ஓட்டங்களுக்கான விதிகளை விரும்பி ஏற்றுக் கொண்ட சூழலோ, தண்டனையோ, எதுவானாலும் ஓடுவது தான் நிர்பந்தமாகவும் அதுவே இயல்பானதாகவும் என் வாழ்வியலோடு இணைந்திருப்பதை கடந்த கால சாட்சியங்களாக, ஆறுதலாக முன் நிற்கிறது என்பதில் ஓரளவேனும் மனம் நிம்மதி கொள்கிறது.  

தியாகுவுடனான முதல் சந்திப்பை நினைவுபடுத்திப் பார்க்கிறேன். சுமார் அய்ந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன்னால்,  யாழி என் வீட்டிற்கு அழைத்துவந்து  அறிமுகப்படுத்திய கவிஞர்களில்  தியாகும் ஒருவர். அன்று தான் அதிகப்படியான நேரம் அவரோடு கவிதைகளைப் பற்றியான உரையாடல் சாத்தியமாகியிருந்தது. இந்த பெரும் இடைவெளியின் தாக்கம் மற்றும் அவருடனான தொகுப்பும் அதற்கான பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கும் இந்தநெகிழ்வான தருணமும். என்னை முழுதும் நிறைவடையச் செய்திருக்கிறது என்பதில் மகிழ்சியே.

***

வெளியீடு - வெயில்நதி
எண்-1-டி, சந்தைமேடு,
சிறுகடம்பூர்,
செஞ்சி - 604202


23.12.14

ப. தியாகு அவர்களுக்கு - தோழமையுடன் நக்கீரன்





‘எலிக்குஞ்சுகளோடு எனக்கு குரோதமில்லை’ தொகுப்பு குறித்து கவிஞர் திரு நக்கீரன் அவர்களின் கருத்துரை. நன்றி நக்கீரன் சார்...

******

கவிஞர் ப. தியாகு அவர்களுக்கு,

தோழர். சிவராமன் மூலமாக தங்களின் ‘எலிக்குஞ்சுகளோடு எனக்கு குரோதமில்லை’ தொகுப்பு கிடைத்தது. நேற்றுதான் வாசித்து முடித்தேன். ஒரு படைப்பாளியாகவே இன்னமும் நீடிப்பதால் விமர்சன அறிவு வாய்க்கவில்லை. எனவே கருத்துரையாகவே இத்தொகுப்பு குறித்து பேசலாம் என நினைக்கிறேன்.

அலைவுறுவதை

குறைத்துக்கொண்டே வந்து

நிலைக்கு வந்துவிட்ட ஊஞ்சலிலிருந்து

இறங்கிக்கொண்டது குழந்தை.



பாகை 90க்கு

திரும்பிவிட்டிருந்தது பூங்கா

தொடக்கநிலை கவிஞர்கள் அனைவரும் இந்த பாகை 90க்கு கவிதை சென்றுவிடாதிருக்க முயற்சித்தாலே போதும். கவிதையும் கவிஞர்களும் நின்று விடலாம். நீங்கள் நின்றுவிட்டீர்கள். அலைவுறுதலின் வேகத்தில்தான் வேறுபாடு. இது எல்லா முதல் தொகுப்புக்கும் நேருவதுதான். தொடர்ந்து அலைவுறும் பெண்டுலம்தான் கடிகாரமாய் நீடிக்கிறது. கவிஞனும் கடிகாரமும் ஒன்றுதானே?

எனக்கு நெருங்கிய சக படைப்பாளிகளிடத்து வெளிப்படையாகவே கருத்துக்களை தெரிவிப்பது எனது வழக்கம். எல்லாவற்றையும் பாராட்டுவது படைப்பாளிக்கு உற்சாகத்தை தரும் என்பது உண்மைதான். ஆனால் அது படைப்பூக்கத்தை குறைத்துவிடும் என நம்புபவன் நான். குறிப்பாக முதல் தொகுப்பில் நிறையும் குறையும் கலந்திருக்கவே செய்யும். கொஞ்சம் காலம் கழிந்தால் இக்குறைகள் மற்றவர்களைவிட  எழுதிய கவிஞருக்கே நன்றாக தெரியும். வாய்ப்பு கிடைத்தால் இப்போது என்னுடைய  தொகுப்பிலிருந்து  நான் பத்து கவிதைகளை தயக்கமின்றி நீக்கிவிடுவேன்.

உங்கள் தொகுப்பில் ‘8 நிமிட ஒளித்தொலைவு’ ‘பாகை 90’ ’12 சதுர அடி’ ‘மைனஸ் 5.88’ என்ற எண்கள் கலந்திருக்கும் கவிதைகள் எல்லாம் சிறப்பாக வந்திருப்பதை பார்க்கிறேன். எண்ணும் எழுத்தும் கலக்கும் மேஜிக் உங்களை எப்படியோ ஈர்த்திருக்கிறது. அதனால் கவிமனம் அங்கு சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. இதுபோலவே பல கவிதைகள் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட இடத்தோடு முடிந்திருக்க வேண்டிய அக்கவிதைகள் இன்னும் நீண்டு நவீனக் கவிதையை புதுக்கவிதையாக சுருக்கி விடுகிறது. எடுத்துக்காட்டுக்கு சில:

தாக்கவென – 2வது பத்தியோடு முடிந்துவிட்டது
இரவு பகல் – முதல் பத்தியோடு
பைத்தியத்தின் வானம் – முதல் பத்தியோடு.
குமிழ்கள் அல்ல கிரகங்கள் – முதல் பத்தியோடு
பள்ளி பருவத்து பட்டாம்பூச்சி – 2வது பத்தியோடு

அதே சமயம் ‘என் வரவேற்பறையில்…’ ‘இந்த கவிதையை’, ‘தேகம்’ போன்ற கவிதைகள் முழுமை நிலையை எட்டி நிறைவடைந்திருக்கின்றன. ‘யானை’, ‘கௌதம் ஆன சித்தார்த்’ இரு கவிதைகளையும் எழுது முறையில் கொஞ்சம் கவனம் செலுத்தி செதுக்கியிருந்தால் உங்களுக்கு பேர் சொல்லும் கவிதைகளாக மாறியிருக்கும். முதல் தொகுப்புதானே அடுத்தடுத்து சரி செய்துக் கொள்ளலாம். ஆனால் டம்ளருக்குள் சிறுநீர் பீய்ச்சும் படிமங்களை ‘மனமென்னும் வாழைக்குருத்து’ போன்ற உருவகங்கள் காலி செய்துவிடும். எச்சரிக்கை.

இத்தொகுப்பில் விரவியுள்ள ’தேங்கி கிடக்கும் நீர்’ படிமம்தான் கவிஞரின் கவிமனம். அதில் ‘கான யானை’ பிம்பத்தை நன்கு கண்டுக் கொண்டுவிட்டீர்கள். அதில் உங்கள் விரல் நுனிக்கொண்டு ஒரு வழி கண்டுப்பிடித்து  தாருங்கள் போதும்.

ஹே குட்டி…

கண்கள் திறந்தாயிற்றா

வாழ்த்துக்கள் தியாகு…

தோழமையுடன்
நக்கீரன்

எனதன்பு தியாகு - சுந்தர்ஜி

 எனது முதல் கவிதை நூல் ’எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை’க்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் விருது அறிவிக்கப்பட்டதறிந்து எனது பிரியத்துக்குரிய ஆசான் திரு சுந்தர்ஜி அவர்கள் எழுதியது. குறிப்பாக சுந்தர்ஜியிடமிருந்து வரும் அபிப்பிராயங்களே முக்கிய விருதென நினைக்கும் என்னை கீழ்காணும் வரிகள் இப்பவும் பரவசத்தில் வைக்கின்றன. இந்த கடிதத்தை பத்திரப்படுத்த இன்றைக்குத்தான் தோன்றியது  சற்றே  வருத்தம் தருகிறது என்றாலும், இதை செய்துவிட்டது நிறைவையும் மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. நன்றி ஜி..!

*******
எனதன்பு தியாகு,

உங்கள் நூல் ”எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை”க்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் விருதைப் பெற்றிருப்பதான செய்தியை மிகத் தாமதமாக அறிகிறேன். விருதுகளோடு படைப்பாற்றலை நான் ஒருகாலத்திலும் பொருத்திப் பார்ப்பவன் இல்லை என்ற போதும், மிகச் சரியான பருவத்தில், மிகவும் தகுதியான படைப்புகளுக்கு மிக அபூர்வமாகவே கௌரவமும், அங்கீகாரமும் வாய்த்திருக்கின்றன.

உங்கள் தொடர்பு வாய்த்த நாட்களில் இருந்தே பார்க்கும் கோணங்களாலும், எழுதும் மொழியாலும் புதுத் தடம் அமைத்ததை நான் வாசிக்க நேர்ந்த முதல் கவிதையிலிருந்தே உணர்ந்திருக்கிறேன். உருவாக்கும் பிரயத்தனத்தை உடைத்து, பாசாங்கில்லாத சொற்களால் கவிதையை மெருகூட்டும் உங்கள் படைப்பாற்றலுக்கும், உங்கள் பணிவுக்கும், மேன்மைக்கும் தகுதியானது இந்த விருது.

புத்துணர்வால் மலர்த்தும் செறிவான உங்கள் கவிதைகள் பயணிக்கும் பாதையில் நானும் உடன் வந்து கொண்டிருப்பேன். நிறைவான உடல்நலத்தையும், மனநலத்தையும், நல்ல சூழலையும் இறைவன் உங்களுக்கு அருளட்டும்.
  
- சுந்தர்ஜி ப்ரகாஷ்
   13.10.2014

22.12.14

நான்கு கவிதைகள்



1)
நுழைந்தது தவிர
வெளியேறுவதற்கென்று
கதவைக் கொண்டிராத
புறத்தேயும்
இருளண்டிய வீடு

பற்றியெரியும் அறையொன்றிலிருந்தெழும்
கூக்குரலை உள்ளுணர்ந்து
நோக்குகையில்
எதிர்ப்படும்
முகமற்ற முகம்

கம்பிகளற்ற ஜன்னலுக்குள்
ஒடுங்கும்
மருளும் ஜோடி விழிகள்


2)
யாருக்கும்தான் அது
வர்த்திச் சுருள்

நானதை
முள்ளொன்றுக்கே
கிரீடம் வைத்தேன்

வட்டப்பாதையில்
கனன்று கனன்று
இந்த இசைத்தட்டு கசியும்
பாடலில்லையேல்

கொசுக்கள் பாய்ச்சும்
முள் கரண்டிகளுக்கு அலறி
கெடுத்திருப்பேன்
எவரது உறக்கத்தையும்


3)
தீண்டலுக்கு ஆட்பட்ட
உணர்கொம்புகள் இயக்க
கூட்டிலிருந்து வெளிவரும்
நம் நத்தைகள்


4)
வருடித் திளைக்க
வாய்க்காதபடி
மலைகள் மீது தவழ்ந்திருக்கும்
ஓர் மேகம்

என்
ஐந்து கதிரிடமும்
கேட்டுக்கொண்டேன்

பாலாடையைக்
களைவதுபோல் இருக்கட்டும்