9.9.13

தேவதச்சன் கவிதைகள் இரண்டு



1) பரிசு

என் கையில் இருந்த பரிசை
பிரிக்கவில்லை. பிரித்தால்
மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது
என் அருகில் இருந்தவன் அவசரமாய்
அவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்
மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்
பரிசு அளித்தவனோடு
விருந்துண்ண அமர்ந்தோம்
உணவுகள் நடுவே
கண்ணாடி டம்ளரில்
ஒரு சொட்டு
தண்ணீரில்
மூழ்கியிருந்தன
ஆயிரம் சொட்டுகள்


2) கல் எறிதல்

ஆளாளுக்கு கல் எடுத்து
எறிந்தனர். என் கையிலும்
ஒன்றைத் திணித்தனர்
உள்ளங்கையை விரித்து
மலைத்தொடர் வடிவத்தில்
இருந்த கல்லைப் பார்த்தேன்
உற்று நோக்கினேன்
உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். ஓசையற்று
மலைத்தொடர் மறைந்தது
வெறுங்கையை வேகமாக
வீசினேன்.
விடைபெறும் முகமாகவும்
என்னையும்
தூக்கிச் செல்லேன் என்று
இறைஞ்சும் விதமாகவும்.


1 comment:

  1. சொட்டுகள் மனதை கவர்ந்தன...

    இரண்டும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete