‘எலிக்குஞ்சுகளோடு எனக்கு குரோதமில்லை’ தொகுப்பு குறித்து கவிஞர் திரு நக்கீரன் அவர்களின் கருத்துரை. நன்றி நக்கீரன் சார்...
******
கவிஞர் ப. தியாகு அவர்களுக்கு,
தோழர். சிவராமன் மூலமாக தங்களின் ‘எலிக்குஞ்சுகளோடு எனக்கு குரோதமில்லை’ தொகுப்பு கிடைத்தது. நேற்றுதான் வாசித்து முடித்தேன். ஒரு படைப்பாளியாகவே இன்னமும் நீடிப்பதால் விமர்சன அறிவு வாய்க்கவில்லை. எனவே கருத்துரையாகவே இத்தொகுப்பு குறித்து பேசலாம் என நினைக்கிறேன்.
அலைவுறுவதை
குறைத்துக்கொண்டே வந்து
நிலைக்கு வந்துவிட்ட ஊஞ்சலிலிருந்து
இறங்கிக்கொண்டது குழந்தை.
பாகை 90க்கு
திரும்பிவிட்டிருந்தது பூங்கா
தொடக்கநிலை கவிஞர்கள் அனைவரும் இந்த பாகை 90க்கு கவிதை சென்றுவிடாதிருக்க முயற்சித்தாலே போதும். கவிதையும் கவிஞர்களும் நின்று விடலாம். நீங்கள் நின்றுவிட்டீர்கள். அலைவுறுதலின் வேகத்தில்தான் வேறுபாடு. இது எல்லா முதல் தொகுப்புக்கும் நேருவதுதான். தொடர்ந்து அலைவுறும் பெண்டுலம்தான் கடிகாரமாய் நீடிக்கிறது. கவிஞனும் கடிகாரமும் ஒன்றுதானே?
எனக்கு நெருங்கிய சக படைப்பாளிகளிடத்து வெளிப்படையாகவே கருத்துக்களை தெரிவிப்பது எனது வழக்கம். எல்லாவற்றையும் பாராட்டுவது படைப்பாளிக்கு உற்சாகத்தை தரும் என்பது உண்மைதான். ஆனால் அது படைப்பூக்கத்தை குறைத்துவிடும் என நம்புபவன் நான். குறிப்பாக முதல் தொகுப்பில் நிறையும் குறையும் கலந்திருக்கவே செய்யும். கொஞ்சம் காலம் கழிந்தால் இக்குறைகள் மற்றவர்களைவிட எழுதிய கவிஞருக்கே நன்றாக தெரியும். வாய்ப்பு கிடைத்தால் இப்போது என்னுடைய தொகுப்பிலிருந்து நான் பத்து கவிதைகளை தயக்கமின்றி நீக்கிவிடுவேன்.
உங்கள் தொகுப்பில் ‘8 நிமிட ஒளித்தொலைவு’ ‘பாகை 90’ ’12 சதுர அடி’ ‘மைனஸ் 5.88’ என்ற எண்கள் கலந்திருக்கும் கவிதைகள் எல்லாம் சிறப்பாக வந்திருப்பதை பார்க்கிறேன்.
எண்ணும் எழுத்தும் கலக்கும் மேஜிக் உங்களை எப்படியோ ஈர்த்திருக்கிறது. அதனால் கவிமனம் அங்கு சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. இதுபோலவே பல கவிதைகள் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட இடத்தோடு முடிந்திருக்க வேண்டிய அக்கவிதைகள் இன்னும் நீண்டு நவீனக் கவிதையை புதுக்கவிதையாக சுருக்கி விடுகிறது. எடுத்துக்காட்டுக்கு சில:
தாக்கவென – 2வது பத்தியோடு முடிந்துவிட்டது
இரவு பகல் – முதல் பத்தியோடு
பைத்தியத்தின் வானம் – முதல் பத்தியோடு.
குமிழ்கள் அல்ல கிரகங்கள் – முதல் பத்தியோடு
பள்ளி பருவத்து பட்டாம்பூச்சி – 2வது பத்தியோடு
அதே சமயம் ‘என் வரவேற்பறையில்…’
‘இந்த கவிதையை’, ‘தேகம்’ போன்ற கவிதைகள் முழுமை நிலையை எட்டி நிறைவடைந்திருக்கின்றன. ‘யானை’,
‘கௌதம் ஆன சித்தார்த்’ இரு கவிதைகளையும் எழுது முறையில் கொஞ்சம் கவனம் செலுத்தி செதுக்கியிருந்தால் உங்களுக்கு பேர் சொல்லும் கவிதைகளாக மாறியிருக்கும். முதல் தொகுப்புதானே அடுத்தடுத்து சரி செய்துக் கொள்ளலாம். ஆனால் டம்ளருக்குள் சிறுநீர் பீய்ச்சும் படிமங்களை ‘மனமென்னும் வாழைக்குருத்து’ போன்ற உருவகங்கள் காலி செய்துவிடும். எச்சரிக்கை.
இத்தொகுப்பில் விரவியுள்ள ’தேங்கி கிடக்கும் நீர்’ படிமம்தான் கவிஞரின் கவிமனம். அதில் ‘கான யானை’ பிம்பத்தை நன்கு கண்டுக் கொண்டுவிட்டீர்கள்.
அதில் உங்கள் விரல் நுனிக்கொண்டு ஒரு வழி கண்டுப்பிடித்து தாருங்கள் போதும்.
ஹே குட்டி…
கண்கள் திறந்தாயிற்றா
வாழ்த்துக்கள் தியாகு…
தோழமையுடன்
நக்கீரன்