28.9.14

09.02.2014 அன்று குறிஞ்சி வட்டம் விமர்சன அரங்கில் திரு.அசதா அவர்களால் வாசிக்கப்பட்டது



.தியாகுவின் ‘எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை’ தொகுப்பை முன்வைத்து.
-அசதா.

மனதின் அபோதச் சேர்மானங்கள் அவற்றினாலேயே தூண்டப்படும் பிரக்ஞைப் பூர்வமான மொழியோடு அகவோட்டத்தில் கலக்கும் அபூர்வமான தருணங்களே கவிதை உருவாக்கத்தின் மூலங்கள். கவிஞனது அறிதல்கள், பார்வைகள், சாய்வுகள், எதிர்வினையாற்றும் பாங்கு போன்ற அகவய குணங்களுடன் புறவயமாக அவனை அடையும் ஒரு சொல்லதிர்வு, உணர்வுத் தெறிப்பு அல்லது ஒரு தீவிரக் காட்சி இவற்றில் ஏதாவதொன்று கலந்து இந்த அபோதச் சேர்மானங்களை தீர்மானிக்கின்றன. கவிதைக்குள்ளாக காட்சிகள் தொழிற்படும்விதம் அலாதியானது. வெளிப்பாட்டுக்கென முற்றிலும் மொழியையே பயன்கொள்ளும் கவிதை தனது உருவாக்கத்தில்  காட்சிகளை அவற்றின் பருண்மைத் தன்மைக்கு அப்பாலிருந்து நுட்பமாகப் மொழிவழியாகப் பயன்கொள்கையில்  அக்காட்சிகள் காட்சிப் படிமங்களென தமது அர்த்தத் தளங்களை விரித்துக்கொள்கின்றன. தேர்ந்த இயக்குனரின் கத்தி பார்வையாளனின் விழிச்சவ்வைக் கிழித்து திரையை நோக்கியவொரு புதிய காண்நோக்கை வழங்குகிறது. தான் காண்பவற்றின் மட்டில் தனது விழியை தொடர்ந்து புதுப்பித்தபடியிருக்கும் கவிஞன் அந்தக் காட்சிகளை மீறிய உணர்வோட்டங்களையும், அர்த்தங்களையும் வந்தடைகிறான். அவனது கவிதைகள் தூந்திரவனங்களின் பகலொளியைப்போல மாறாத புத்துணர்வோடு உருக்கொள்கின்றன.
காட்சிகளைத் துல்லியமாக கிரகிக்கும் மனமும், அனுபவத்தின் செறிவுடன் அவற்றை மொழிக்குள் மறுசிருஷ்டி செய்து கவிதையாக்கும் பாங்கும் கொண்டவராக ப. தியாகு ‘எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை’ என்ற தனது முதல் தொகுப்பில் அதிகமும் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார்.

‘கை கொள்ளுமளவு கற்கள்
தாக்கவென ஒரு கல்லை
மறு கையிலேந்தி
கண் சுருக்கி
குறி பார்த்து நிற்கும்
சிறுவனிடம்

ஒரேயொரு பாறை
ஓணாணின் வசம்…’

என்ற முதல் கவிதையே தொகுப்பின் தொனியை தீர்மானிக்கும் கவிதையாக அமைந்துவிடுகிறது. பார்வைக் கோணத்தின் வேறுபாடு ‘காட்சி விசித்திரம்’ என்பதாகச் சுருங்கி விடாமல் கவிதைக்கான அழகியலையும், நுட்பமான அரசியலையும் கொண்டு வெளிப்பட்டுள்ளது.

நிழல்-1, தோற்றப்பிழை, தேகம், ’அலைவுறுவதை…’ மற்றும் ‘ சிமெண்ட் தரையில்…’ எனத் தொடங்கும் 55ம் பக்கக் கவிதைகள், மெழுகு மரம், வெட்டுக்கிளி ஆகிய கவிதைகளும் காட்சி விவரணம் அல்லது காட்சிப்படுத்துதல் என்பதைப் பிரதானமாகக் கொண்ட கவிதைகள்.

தியாகுவின் கவிதைகள் எளிய அன்பையும், குழந்தைமையின் களங்கமற்ற அறியாமையையும், உன்னத உணர்வுகளால் சடுதியில் பூரிப்படைந்துவிடும் மனதையும், மாறாத அழகுணர்வையும் கொண்டாடும் கவிதைகளாக உள்ளன. தத்துவச் சாய்வுகளும், மெலிதான சமூக விமர்சனமும் வெளிப்படும் கவிதைகளும் உண்டு. மொழியினைப் பிசிரின்றி செப்பமாகவும் நுட்பமாகவும் பயன்படுத்தக் கற்றிருப்பதனால் கிட்டத்தட்ட தொகுப்பின் அனைத்துக் கவிதைகளுமே தம்மளவில் தளர்ந்து போகாத, வாசக ஈர்ப்பைத்  தக்கவைத்துக் கொள்ளும் தன்மையுடைய கவிதைகளாக உள்ளன. மனதில் உணர்வுகளின் இயங்குநிலையில் கவிதை வெளிப்பாடு காட்சிகளை மையமாகக் கொண்டு நிகழ்வதற்கு உதாரணமாக அமைந்திருக்கும், பெரிதும் அழகியல் சார்ந்த கவிதைகள் பல இத்தொகுப்பில் உள்ளன. ஆனால் இக்கவிதைகளில் பல தளமாற்றம் அடையாது ஒற்றை அர்த்தத்துடன் தேய் வழக்குகளைக் கொண்டு நின்றுவிடுவது  குறை. உதாரணமாக கீழ்க்கண்ட கவிதை.

‘ஒரு முனையில் குளிர்வதும்
மறுமுனையில்
ஜூவாலையில் எரிவதுமாய்
வாழ்வை போதிக்கிறது
விளக்கின் திரி.

மரணத்தை தரிசிக்கிறேன்,
திரியினூடாடி
வெளியேறிக்கொண்டிருக்கும்
உயிர் திரவத்தில்.’
(திரியினூடாடி)

எதிர்பார்ப்பை உண்டாக்கி மேலெழும்பும் கவிதையின் முதல் பாதியை திரியினூடாடி| வெளியேறிக்கொண்டிருக்கும் \ உயிர் திரவத்தில்  என்ற பின்பகுதி வரிகள் தேய் வழக்காக அமைந்து கீழ்நோக்கி இழுத்துவந்துவிடுகின்றன. தியாகுவின் கவிதைகளில் உள்ள அடிப்படையான சிக்கலாக இதைச் சொல்லலாம்.

‘முடிவுறுகிறதது
கோடி வரிகளோடு
கொட்டித் தீர்த்த
மழைக்கவிதை

வெள்ளி நிறத்தில்
மை ஊறும்
தென்னங்கீற்றின்
முள்முனை சுமக்கிறது
முற்றுப்புள்ளியை’

‘மழைக்கவிதை’ என்ற தலைப்பிலமைந்த இக்கவிதை மழையை கவிதையாக உருவகிக்கிறது. மழை வெகு நேர்த்தியாய் உருவகப்படுத்தப்படுகிற இக்கவிதையிலும் காட்சி வழியாகவே கவிதை விவரிக்கப்படுகிறது. மழைத்தாரைகள் கவிதையின் வரிகள், தென்னங்கீற்றின் முனை சுமக்கும் துளி அதன் முற்றுப்புள்ளி என்று உருவகம் துலக்கமடைகிறது. தேர்ந்த சொற்களையும், நுட்பமான கூறுமுறையையும் தாண்டிப்பார்க்க இக்கவிதையில் வாரமலரின் பின்னட்டைக் கவிதையிலிருக்கும் விஷயத்தைத் தாண்டி புதிதாக எதுவுமே இல்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. கவிதைகள் வெற்று உருவகமாக இருப்பதனைத் தாண்டி படிமங்களாகி மேலெழ வேண்டிய தேவை இருக்கிறது. அவ்வாறான கவிதைகள் இத்தொகுப்பில் இல்லாமலும் இல்லை.  தேய் வழக்கையும், வலிந்த பாவனைகளையும் உதறும்போது கவிதைகள் அடையும் கவி உச்சத்திற்கு கீழே காணும் இந்த 61ம் பக்க கவிதை உதாரணம்.

‘ஒரு கை நீரள்ளி
மேல் தெளிக்கிறாள்
துணுக்குற்றது போல
கொஞ்சமே அசைந்துகொடுக்கிறது
இன்னும்
உயிரிருக்கும் ஒரு மீன்

அதைத்தான்
தேர்ந்தெடுக்கவேண்டும் நாம்.’

தொகுப்பின் முக்கியமான கவிதைகளில் ஒன்று இது. சொல்லுதலில் பாவனை விலகிய நேரடித்தன்மை, பின்னடுக்காக அமைந்திருக்கும் நுண்ணரசியல் மற்றும் விமர்சனம் என நிறைவான ஒரு கவிதை அனுபவத்தைத் தரவல்லதாக இக்கவிதை இருக்கிறது.

‘நெய்யில் தோயும்\ திரிப் புழு\ நெளிகிறது சுடரில்.’ (பக்கம் 49) என்ற வரிகளில் வலுவுடன் எழுந்து வரும் படிமத்தைக்  காண முடிகிறது. ‘நீ’ என்ற தலைப்பிலமைந்த கவிதை ‘கயிற்றரவு’ நிலையை பிரதிபலிக்க முனையும் கவிதை. குழந்தை-கண்ணாடி என்ற சேர்க்கை கவிதைக்கான முடிவற்ற வெளிகளைத் திறந்துவிடுவது. (‘முதலாகவும் கடைசியாகவும் கடவுளை ஸ்பரிசிக்கிறது குழந்தை’ என்ற சங்கரராம சுப்ரமணியனின் கவிதை வரிகளை இங்கு நினைவுகூராமல் இருக்க முடியவில்லை). கண்ணாடியும் அதன் பிம்பங்கள் கிளர்த்தும் மனவோட்டங்களும் ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைகளாகியிருக்கின்றன. குழந்தைகள் காணும் கண்ணாடி பிம்பங்கள் குறித்த கவிதைகள் சிறப்பாக வந்துள்ளன. (மேல் நோக்கிய மெழுகுத்திரியின் ஜூவாலையைக் கண்ணாடி மீது நிறுத்தி கீழ்நோக்கி எரியவைப்பதாகக் கூறும் கவிதை மட்டும் விதிவிலக்கு.)

பக்கவாட்டில், பிள்ளைகள் ரயில், எனக்குள் அலையும் மீன், தந்தைமை, எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை, கூண்டுப்பறவை கூண்டிலில்லை ஆகியவை இத்தொகுப்பின் முக்கியமான கவிதைகள்.

பூடகங்களை பூடகங்களாகவே விட்டுச் செல்லாத தன்மை, சாத்தியங்கள் இருந்தும் கவிதைகளில் சர்ரியல் தன்மையை நெருங்கத் தயங்குவது, அதீத கிளர்ச்சி நிலைகள் கவிதைக்கு வெளியிலாக துருத்தி நிற்பது, விரிவை நோக்கிப் போகாமல் ஒற்றைத் தன்மையுடன் தன்னை நோக்கிக் குறுக்கிக் கொள்வது, சிலநேரம் செயற்கை எனத் தோன்றவைக்கும் கச்சிதத்தன்மை ஆகிய குறைகள் இருந்தாலும் கவிதைக்கான நுண்ணுணர்வும், நுட்பங்களும் முதல் தொகுப்பிலேயே கைவரப் பெற்றவராக இருக்கிறார் தியாகு. ஏறத்தாழ எல்லாக் கவிதைகளுமே மொழிசார்ந்து சீரானதொரு லயத்தைக் கொண்டிருக்கின்றன. கவிதையின் அடிப்படைகள் சார்ந்து குழப்பங்களற்றவராக இருக்கும் தியாகு அசலும் தீவிரமுமான கவிதைகளை உருவாக்கும் ஆற்றல் பெற்றவராக இருக்கிறார். அதற்கான தடயங்களும் இத்தொகுப்பிலேயே இருக்கின்றன. இன்னும் தீவிரமான கவிதைகளை நோக்கி நகர்வது அவருக்குக்கொன்றும் கடினமில்லை. சில தயக்கங்களை உதறுவதன் வழி அந்த நகர்வை அவர் தொடங்க வேண்டும், அவ்வளவே. வாழ்த்துக்கள்.

*****

(09.02.2014 அன்று செஞ்சி, குறிஞ்சி வட்டம் சார்பில் நடந்த விமர்சன அரங்கில் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான திரு.அசதா அவர்களால் வாசிக்கப்பட்டது)




No comments:

Post a Comment