2.11.14

கோடி மீன்கள்




உதறினாற்போல் விரிக்கப்பட்ட
துகில் அங்காடியின்
வெளிர் நீல நிற சீலை
உயர எழுந்தடங்கி
உறைந்த கடலானது

இங்கு
கரையோரம் அமர்ந்தபடி
அலைகளை தன்
விரல்களால் வருடும் -
இவனில் பாதியானவள்
காணாது

நெகிழ்ந்து சலம்புகின்றன
நதியொன்றின் கோடி மீன்கள்
எதிரில்
தோன்றி நிற்கும்
கடற்கன்னியுள்
நீந்திட

மது - கவிதைகள்




i)

மூடியை
எதிர்க் கடிகாரச்சுற்றில்
திருகுவதுதான்
புட்டியை திறப்பது

முடிவில்
புட்டியிடம் பிதற்றிக்கொண்டிருந்தேன்

தலை சுற்றுகிறது
நீதான் என்னை
திறந்துகொண்டிருப்பதா

ii)

கடைவாய்ப் பற்களின்
துணைகொண்டு பிளக்கிறேன்
இறுக மூடிய
தகடும் சீஸாவுமான
உதடுகளை

நீங்கள் செவி மடுக்க
மௌனம் கலைத்து
இந்த
புட்டி நிறை பியர்
பேசவும்
எத்தனை இருந்திருக்கிறது

குறிப்பாக
என் குரலில்