30.12.11

என்னுள் வாழும் வனம்




மலைகள் காடுகள் நீர்நிலைகளென்று
எவற்றைக்குறிப்போம் இனி,
வரைபடத்தில்தான் நீ வருவதாயில்லையே.

அடவி வாழ் உயிரிகளென்று
எவற்றை வகைப்படுத்துவோம் இனி,
அருகி வருகின்றனவல்லவா அவைகள்.

கல்லோடு கல்லைக்கொண்டு மோதினால்
என்ன கிடைக்குமென்று
நெருப்பைக்கண்டடைந்தவன்
இன்று
காடுகளோடு தான் மோதுகிறான்,
போதிய தளவாடமோ உன்னிடமில்லை
தாக்குப்பிடிக்க

ஜீவராசிகளோடு இணக்கம் காணாத
அவனுக்குமாய்த்தானே இரங்கினாய்
உன் மடியையே உறைவிடமாய்த்தந்தாய்
அவனுக்குமே நீ வாழ்வாதாரமானாய்

மறுக்கப்பட்ட கனியையே
மீறியும் புசித்துவிட்டவன் முன்
நிபந்தனைகளின்றியே வைக்கப்பட்டதல்லவா
உன் வளங்கள் மொத்தமும்

உன் கனிமங்களை கொள்ளையிடுகிறான்

உன்னிதயத்தினடியில் சுரங்கம் பறிக்கிறான்

உன் வாஞ்சையின் அணைப்பிலிருக்கும் விலங்குகளை
வேட்டையாடுகிறான்
புழு பூச்சிகளை கொன்றழிக்கிறான்

மலை மார்புகளிலிருந்து
பால் வண்ணத்திலிறங்கி
நீராய்ப்பெருகும் உன் கருணையில்
கழிவுகளைக்கலக்கிறான்

நச்சுக்காற்றை கிரகித்து
நல்ல காற்றைத்தரும் பச்சையம் உன்னை
உதாசீனம் செய்கிறான்.

எல்லாம் முடித்து
டிஸ்கவரி, அனிமல் பிளானட்
சானல்களை புரட்டிக்கொண்டே
அவன் புரியவும் ஒன்றுளது கானகமே

அது,
தங்க முட்டையிடும் வாத்தை
தான் அறுத்துவிட்டது.

- (கோவையில் ஒசை அமைப்பு நடத்திய
சர்வதேச வன ஆண்டு 2011 விழா கவியரங்கத்துக்காக
எழுதி வாசிக்கப்பட்டது)

28.12.11

வெற்று நதி உருவாக்கும் சித்திரம்

 


பெருக்கெடுக்கும்
ஏமாற்றமெனத்தளும்பி
கரையேறுகின்றன கிடையாடுகள்
கூழாங்கற்களில் மோதி
சலசலக்கிறது
கீதாரி
இடமிது உசிதமென்று கழிக்கும்
சிறுநீர்

உடன் வரும் மரங்கள் - 2



ஆசுவாசமளிக்கிறது,
எங்கிருந்தோ வந்து
கிளை மீதிலமரும் குருவியின்

நிழல்
போன்ஸாய்
  மரத்துக்கு.

உடன் வரும் மரங்கள் - 1



தள்ளு வண்டியோடு நகர்கிறது
சாலையின் மருங்கில்
போன்ஸாய் மரங்களடர்ந்த
ஒரு குறும் வனம்

வார்த்தைகளில்
சுள்ளி சேகரித்து
கூடு கட்டுகிறது,

பேருந்தின் சன்னலினூடே
கண்ணுறுகையில்
அம்மரங்கள்
ஒத்த திசையில் உடன் வருவதை
குறித்துக்கொண்டுவிட்ட மனப்பறவை
இக்கவிதையை

26.12.11

சூரியனை முறைக்கும் கண்கள்



1)
ஒரு மழை நாளில்தான்
நேருக்கு நேர் பார்த்துக்கொண்டோம்
இரண்டே கண்களால் நானும்
மயிலிறகுகளின்
ஆயிரம் கண்களும்

2)
புத்தகத்தில்
பதுக்கியிருப்பதையும் சேர்த்து
ரெட்டை ஜடைக்காரிக்கு
மொத்தம்
மூன்று கண்கள்

3)
கூசவுமில்லை
நிலைகுத்தி நிற்கின்றன
வயல்வெளியோடு சிதறிக்கிடக்கும்
கண்கள் சிலவற்றின் பார்வைகள்
சூரியனில்

4)
மயிலிறகின் கண்ணுக்காயும்
சிமிட்டுவாய்
என்னிமையே

5)
பேகன் தோன்றிய
- மயிலின் - நூற்றுக்கண்களில்
ஒன்றில்தான் இப்போது
நானும் தோன்றுகிறேனென்றால்
அது மிகையாகாது

- நன்றி: ரமேஷ்-பிரேம்-ன் கவிதைக்கு