சாலையை
குறுக்கில் கடப்பதற்குள்
இரண்டு மூன்று கனரக வாகனங்கள்
ஐந்தாறு மோட்டார் சைக்கிள்கள் மோத
தன் நிழல் விபத்துக்குள்ளானதாகவே
நம்புகிறான் சித்தார்த்
அவன் வரையிலும்
மூர்ச்சையடைந்துவிட்ட நிழலை
இழுத்துக்கொண்டு வீடடைந்தவன்
சொஸ்தமாக்கவென
அதற்கு களிம்பு தடவ முற்படுகிறான்
ஒருசமயம் சுவருக்கும்
ஒரு சமயம் தரைக்குமேயன்றி
தான் களிம்பு தடவுவது
நிழலுக்கில்லை எனும் சத்தியத்தினூடாய்
ஞானமடைந்ததற்கும் பின்னாட்களில்
தனக்கு வரும்
அலைபேசி அழைப்புக்களுக்கு
தான் கௌதம் என்றும்
சித்தார்த் குறித்த விசாரணைகளுக்கு
அவன் தன்னிலிருந்து வெளியேறிவிட்டதாயுமே
விடை பகர்கிறான்
கௌதம் (எ) சித்தார்த்.
ஒருசமயம் சுவருக்கும்
ReplyDeleteஒரு சமயம் தரைக்குமேயன்றி
தான் களிம்பு தடவுவது
நிழலுக்கில்லை //
நவீன சித்தார்த்(!) ஞானமடையத் தேவையற்ற போதி மர நிழலுடன் தன் நிழலையும் இழந்த பரிதாபத்துக்குரிய கெளதம்... அலைபேசிகள், கனரக வாகனங்கள், அணுவுலைகள் நிறைந்ததவன் அரச போகம் :(
இந்தக் கவிதை மனதுக்கு நெருக்கமானதாக இருக்கிறது.
ReplyDeleteசித்தார்த்துக்கு கௌதம் ஆவது எந்நாளும் சாத்தியப்படுகிறது. இந்த சித்தார்த்துக்காவது யசோதரையுடனான அறிமுகம் இல்லாமல் இருக்கவேண்டும். கவிதை எழுப்பும் தேடல் அற்புதம்.
ReplyDelete