2003-ல் ’காதல் கொண்டேன்’ திரைப்படம் வந்த புதிது. அதில் ஒரு பாடல் ’மனசு
ரெண்டும் பார்க்க’ என்று தொடங்கும் உயிரைப் பிழியும் பாடல், பழனிபாரதி
எழுதியது. அந்த பாடல் தந்த தாக்கம் இந்தக் கவிதையாக என்னில் உருவெடுத்ததை
என்றைக்கும் மறக்க முடியாது. ரொம்பவும் நீளம் என்பதாலேயே
(பத்திரப்படுத்தவும்) காகிதங்களாக இருந்ததை இங்கே பதிந்து வாசிக்கத் தருகிறேன். காதல்,
காமம், வஞ்சகம், ஏமாற்றம் போன்ற அனுபவ நிலைகளிலிருந்து எழுதியதில் இந்தப்
படைப்பின் சரி தவறுகளை குறுக்கு விசாரித்தறியாமலேயே தொடர்ந்து எழுதி
முடித்தேன். எழுதியதை அப்படியே பதிந்திருக்கிறேன். அனேகமாக நிறைய பிழைகளும்
அறியக்கிடைக்கலாம். பொறுத்துக்கொண்டேனும் வாசிக்க நண்பர்களே.
இந்தக் கவிதை என் முன்னாள் காதலிக்கும், எழுத்தத் தூண்டிய பாடலை தந்த திரு.பழனிபாரதிக்கும் சேர்வது.
***
நான் உன்னை
முதலில் சந்தித்தது
திறந்திருந்த சொர்க்க வாசல்
எனக்கென்ன தெரியும்
காதல்
நரகத்துக்கு குறுக்குப் பாதை
என்று
என் காதல் சபிக்கப்பட்டது
அவ்வாறு இல்லையெனில்
என் புல்வெளி
பனித்துளி விடுத்து
கண்ணீர் சுமந்திருக்குமா
அவ்வாறு இல்லையெனில்
என் மலர்களில்
தேன் விடுத்து
ரத்தம் கசிந்திருக்குமா
எத்தனை இரவுகளாய்
நான்
கண்ணுறங்காது
காதல் ஓவியம் படைத்தேன்
இப்படியா
என் கனவுகள் மீது
நெருப்பை மூட்டி
என்னைக் கதற விடுவது
நெடுந்தூரம் நடந்து
தள்ளாடுகிறேன்
ஆனாலும் உன்
நியாபகப்பொதியை
இறக்கி வைக்க
சாத்தியப்படாமலே போகிறது
வந்து
மரணத்திற்கப்பாலும்
உன் சுவடுகள் என்னை
தொடர்வதைத் தவிர்க்க
மாற்றுபாயம் சொல்லிப் போ
உண்மை இதுதான்
வாலிபக் குளத்தில்
மீனாயிருந்தேன்
தவளை உன்னை நம்பி
தரைக்கு வந்தேன்
இப்போது நான்
கல்லறைக் கடைவீதியில்
விற்பனைக்கு வந்த
கருவாடு
பழைய கடிகாரத்தின்
பெண்டுலம் போல்
கனவுகளுக்கும்
நிஜங்களுக்கும் இடையே
அலைந்துகொண்டிருந்தேன்
இப்போது உன்னால்
நிர்சலனமாய்
நிலத்துள் கிடக்கிறேன்
என்னைப்போல்
என் கவிதைகளையும்
என்னில் உன் நினைவுகளையும்
நீ
அழிக்கவோ
ஒழிக்கவோ முடியாது
காரணம்
என் படைப்புக்களின் எழுத்துக்களை
நான்
நட்சத்திரங்களால் நிர்ணயித்திருக்கிறேன்
முதலில்
மெழுகுவர்த்தியை அணை
இந்த விட்டில் பூச்சியின் விதி
இதுபோல்
பிரகாசத்தை பார்த்துத்தான்
முடிந்து போயிற்று
நீ இத்தனை கொடுமைக்காரியா
ஆராய்ச்சிக் கூடத்தில்
அறுப்பதற்கு
இந்த
பட்டாம்பூச்சியை ஏன்
சிறை பிடித்தாய்
பார்
இதயம் கிழிந்து
கிடக்கிறேன் நான்
நீ என் பிரேதத்தின் மீதே
கால் பதித்து
கடந்து போகிறாய்
நான்
கல்லறைக்குள்ளே கிடக்கும்போதும்
ஓநாய் உருவில்
நீ என் அமைதியை கீறுகிறாய்
காதல்!
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட
முட்பாதை
நான்
மதுபோதையில் கடந்து வந்த
பாதசாரி
இல்லையெனில்
என் மேனியில்
ரத்தத் தீற்றல்களை
நீ முத்தமிட்டு படிந்த
உதட்டுச் சாயமென்று
எண்ணியிருப்பேனா
என் சமாதியருகே நீரூற்று
என்று
யாரேனும் சொன்னால்
நம்பாதே
கொப்பளிக்கும் என்
ஆன்மா வடிக்கும்
கண்ணீர் அது
உள்ளே கனன்றுகொண்டிருக்கும்
என் சோகங்களை
வெளிக் கொணரும்
எரிமலைக் குழம்பு
அது
இந்த வழியில் வரும்போது
நிச்சயம் கவனி
மெல்லிய இழையோட்டத்தில்
காதல் முகாரி ஒன்று
உன் காதுகளை
ஸ்பரிசிக்கும்
நீ ஏற்படுத்திய
காதல் ரணங்களில்
சீழ் பிடித்த நாற்றம்
உன் மூக்கைத் துளைக்கும்
கண்ணீர் வளர்த்த கடலில்
என்
பிணம் அழுகி மிதப்பது
உன் பார்வைக்குக் கிடைக்கும்
இப்படியேன் செய்தாய்
காதல் சுடுமணலில்
என்னை
கல்லறைக்கு இழுத்து வந்தாய்
நான் அறியவில்லை
குளிரெடுக்கும் இரவொன்றின்
பயணத்தில்
உன் முதல் ஸ்பரிசம்
என்
மரணத்திற்கே தொடுக்கப்பட்ட
மலர் வளையமென்று
நான் அறியவில்லை
உன் சிணுங்கலும்
சிரிப்புக்களும்
என் சடலத்திற்கே தயாரான
பிண ஊர்தி என்று
மல்லிகைதானே
எனக்கு மிகவும் பிடித்தம்
வா
உன் பூனை ரோமக் கழுத்தில்
என் நாசி பட்டு
நசுங்கிய மல்லிகைகளை
எனக்கே படைத்துவிட்டுப்போ
ஏனெனில்
வேற்று காதலன்களுக்கும்
நான் அறிவிக்கக் கடவேன்
இப்படி
பெண்கள் சூடும்
ஆண்கள் பூக்கள்
கல்லறைக் காட்டிலே
உதிருகின்றன
சதா இரைந்துகொண்டேயிருக்கும்
சமுத்திரம் போல
அவை
அழுது புலம்புகின்றன.
- ப. தியாகு
2003
காதல் ஓவியம்... நல்ல ஆக்கம்...
ReplyDeleteஆராய்ச்சிக் கூடத்தில்
ReplyDeleteஅறுப்பதற்கு
இந்த
பட்டாம்பூச்சியை ஏன்
சிறை பிடித்தாய்
காதல் ஓவியம் பளிச்சிடுகிறது !