ரசனைக்கு
இணக்கமாயிருக்கும் அனேகக் கவிதைகள்
[செல்வராஜ் ஜெகதீசனின் ’ஞாபகங்கள் இல்லாது
போகுமொரு நாளில்’
நூலை முன்வைத்து]
இன்னும் சற்று மேம்பட்டதாக
இன்னும் சிறிது சுரத்துள்ளதாக
இன்னும் கொஞ்சம் உவப்பானதாக
இன்னும் எப்படியெல்லாமோ
இருந்திருக்கலாம் என்கிறீர்கள்
இந்த ஒரு சிறு வாழ்வில்
இந்தளவாவது இயன்றதே என்கிறேன்
இதையும் எப்படியாவது
புரிந்துகொள்ளுங்கள்
ஏனைய பிற யாவற்றையும் போல.
செல்வராஜ் ஜெகதீசனின் ’ஞாபகங்கள் இல்லாது
போகுமொரு நாளில்’ கவிதைத் தொகுப்பில் இடம்பெறும்
கவிதைகளில் ஒன்று ’இதையும்’
என்னும் தலைப்பின்கீழ் வரும் இக்கவிதை. தொகுப்பின் இரண்டாவது கவிதையான இக்கவிதையை
வாசிப்பில் கடந்து சென்று, கடைசி கவிதையையும் வாசித்து முடித்து, அடுத்து நாம்
அவர்முன் வைக்கவிருக்கும் தொகுப்பின் மீதான விமர்சனங்களுக்கான அவரின் மொத்த பதிலாக
முன்கூட்டியே அமைந்துவிடுவதில் தனிச்சிறப்பு பெறும் கவிதை இது.
சரிதான், இனி பேச
ஒன்றுமில்லை என்று அமைதி காத்திடவும், ரசனைக்கு இணக்கமாயிருக்கும் அனேகக் கவிதைகள்
விட்டுவிடுவதில்லை.
நிச்சலன முகமோடு
நின்று அசைபோடும்
யாதொரு மந்தையை
விட்டும்
எளிதில் பிரிந்து
செல்லாத
கட்டி இழுத்து
வரும்போதும்
கம்பீரமாய்
நடந்துவரும்
ஏனிந்த
கழுத்தறுப்பு என்று
எதிர்கேள்வி
கேட்காத
கிடை ஆடுகள்
அத்தனை
ருசியானவையும் கூட.
இக்கவிதையின் கடைசி
வரி தரும் அதிர்ச்சியிலிருந்து மீளவும் சிறிது நேரமாகிறது. முந்தைய வரிகளில்
இழையோடும் கிடை ஆடுகள் மீதான ஜீவகாருண்யம், பரிவு, கருணை எல்லாவற்றையும் ’அத்தனை
ருசியானவையும் கூட’ என்னும் கடைசி வரி கலைத்துப்போடுகிறது.
முந்தைய வரிகள்வரை அன்பு, வாஞ்சையின் பாற்பட்டிருந்தவரை ஓரிரு கணம் தடுமாறச்செய்கிறது.
அடுத்து ’ரயில்
கவிதைக’ளில் முக்கியமானதும் முகத்திலறைவதுமான
கவிதை ஒன்று,
வழித்து உட்கார
ஏலாமல்
வழியில் நின்ற
ரயிலை
வசைபாடியபடி
நின்றுகொண்டிருக்கிறாள்
வயக்காட்டு ஓரம்
இன்னும் அடிப்படை
வசதிகள் காணாத புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களின், கிராமப்புற வாசிகளின்,
குறிப்பாக பெண்களின் பயன்பாட்டிலிருக்கும் மலங்கழிக்கும் காடுகளை, குறுக்கிடும் பாதையில்
ரயில் எதிர்பாராதவிதமாக நின்றுவிடுகையில் ஒரு பெண் அடையும் குற்றவுணர்ச்சியை, சங்கடத்தை
துல்லியமான காட்சியாக்கித் தரும் சிறந்த கவிதை. இதுமட்டுமின்றி அவர்களின் இந்த
பரிதாப நிலை, வரும் போகும் நேரங்களை கருத்தில் கொண்டு தாம் மலங்கழிக்கும் நேரத்தை
திட்டமிட்டுக்கொள்ளும் அவர்களின் அவஸ்தை என்று பலவாறாக சிந்தனையில் ஆழ்த்துகிறது
இக்கவிதை.
ஆண்களேதுமின்றி
அழகிய
பெண்ணொருத்தியோடு
ஆறேழு மாடி வரை
பயணிக்க
நேர்ந்திருக்கிறது
இடைவிடாமல்
பேசிக்கொண்டிருந்த
இரண்டு
பெண்களுக்கிடையிலும்
இருக்க
நேர்ந்திருக்கிறது
எத்தனையோ முறை
முழுக்கவும்
பெண்கள் சூழ
மேற்கொண்ட
பயணங்களுமுண்டு
ஆகக்கூடி வாய்த்த
அத்தனை லிப்ட்
பயணங்களிலும்
அடியேன் கண்டெடுத்தது
நண்பர்களே
இயல்பாய்
இருப்பதில்
இருக்கும் அத்தனை
சிரமங்களையும்.
ஆண், பெண் எனக்
கலந்து அன்னியர்களோடு லிஃப்ட்-ல் மேற்கொள்ளும், ஒரு நிமிடமே காணும், மூன்று
மாடிகள் வரையிலான பயணமே சிலபேரான நம்மை நெளியவிடும், வெட்கம் போலவொன்று
பிடுங்கித்தின்னும். தன்னைத்தவிர வேறு ஆண்களின்றி பெண்ணோடு / பெண்களோடு அதுவும்
ஆறேழு மாடிகள் வரை பிரயாணம் பண்ணுவதின் சிரமத்தை சொல்லும் இக்கவிதை, நம்மில் பலரின்
/ சிலரின் அனுபவத்தொடு பொருந்தி ரொம்பவும் ரசிக்கவைக்கிறது.
மேலும் சொல்லத்தகுந்த
கவிதைகள் பல இருக்கின்றன தொகுப்பில், பின்னும், சமரசம் செய்துகொள்ளமுடியாத சில
கவிதைகளை மட்டும் ஞாபகங்கள் இல்லாது
போகுமொரு நாளில் வைக்கவே விரும்புகிறேன்.
*****
ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் (கவிதைகள்)
செல்வராஜ் ஜெகதீசன்
வெளியீடு:
அகநாழிகை
எண்: 33, மண்டபம் தெரு,
மதுராந்தகம் – 603306
தொடர்பு எண்: 9994541010
/// ஏனிந்த கழுத்தறுப்பு என்று
ReplyDeleteஎதிர்கேள்வி கேட்காத
கிடை ஆடுகள் ///
தடுமாற வைத்தது...
ஆழ்ந்த விமர்சனம்... பாராட்டுக்கள்... நன்றி...