22.12.13

குழந்தைமையில் மிதக்கும் கவித்துவம் – சமயவேல்


குழந்தைமையில் மிதக்கும் கவித்துவம்: ப.தியாகு கவிதைகள் 
திரு.சமயவேல் அவர்கள் என் கவிதை நூலுக்கு எழுதிய முன்னுரை
                                  
வெகு எதார்த்தமான உண்மையான காட்சியெனினும், ஒரு குறிப்பிட்ட காட்சியை ஏற்றுக் கொள்ள முடியாத படைப்பாளி, அந்தக் காட்சிக்குள்ளேயே பிறிதொரு எதார்த்தத்தைக் காட்சிப்படுத்த முனைகிறான். பார்த்ததில் பார்க்காததையும், கேட்டதில் கேட்காததையும் உணர வைப்பது கலையின் அடிப்படைச் செயல்பாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இதைக் கதைப் பரப்பில் தமிழில் கோணங்கி போன்ற படைப்பாளிகளால் மீயெதார்த்த, மாய எதார்த்த வழிகளில் சாதிக்க முடிந்தது. செவ்வியல் இசைக் கலைஞர்கள் இதை ஆதிகாலம் தொட்டே, இசையின் உட்புறம் வெகுதூரம் பல அண்டவெளிகள் தாண்டி, பயணம் செய்து ஸ்தூலமற்ற அதன் மூல நாதவிந்துக்களுடன் உரையாடுதல் அல்லது விளையாடுதல் மூலம் சாதிக்க முடிந்ததுடன் அவர்கள் எப்பொழுதுமே எதார்த்தமற்ற எதார்த்தத்தில் உலவுபவர்களாகவும், தங்கள் பயணத்தில், கேட்கிறவர்களையும் இணைத்துக் கொள்பவர்களாகவும் இருந்து வருகிறார்கள். கட்புலனில் தீ மூட்டும் வண்ணங்களில் மூச்சைவிடும் ஓவியர்களின் கோதுமை வயல்களுக்குள் முற்றாக உலவ முடிந்தவர்கள் ஒருவரும் இல்லை. ஆனால் கவிஞர்கள் இதை மிக எளிதாக, மொழியின் கட்டுமான அலகுகளில் ஒன்றான சொற்றொடர் இயலின் அடைப்படை இலக்கணத்திற்குள் ஊடுருவி, அதை அடியோடு புரட்டிசொல்லின் பின்புறம் உள்ள சொல்லின்மையை உணர்த்துவதின் மூலம் சாதிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் புதுமையுறும் மனிதம் போலவே, கவிஞர்களால் கவிதையை ஒவ்வொரு நாளும் புதுமைப்படுத்திக் கொண்டே வர முடிகிறது. ஒரு முழு வாக்கியத்தில் வினையை மாற்றாமல் எழுவாய் பயனிலை இரண்டையும் இடம் மாற்றுவதின் மூலம் மொத்தக் காட்சியே தலைகீழாய் மாறிவிடும் கற்பனாதிசயம் நிகழ்த்துபவனாகக் கவிஞன் இருக்கிறான். அவனது பிரத்யேகக் கற்பனை வெளிகளில் சொந்தமாய் உருவாக்கும் ஒருசில சொற்கள் அல்லது ஒரு சொற்றொடர் மூலமே பிறிதொரு எதார்த்தத்தைப் படைக்க முடிகிறது. இவர்கள் மொழியின் செல்லக் குழந்தைகள். மொழியை இவர்கள் ஏமாற்றுவதும், மொழி இவர்களை ஏமாற்றுவதும் கவிதையைச் செழிப்பாக்குவதுதான் விந்தை.

எழுவாய், பயனிலையை இடம் மாற்றும் உத்தியைப் பயன்படுத்தி குறைந்தபட்சம் ஒரு வரியாவது எழுதாத கவிஞர்கள் இருக்க முடியாது. ஆனால் இந்த உத்தி, எதார்த்தத்திற்குள்ளும் ஒரு எதார்த்தமாய், இயல்புக்குள்ளும் ஓர் இயல்பாய், ஒரு கவித்துவ அறத்தை வினைப்படுத்தும், பேராச்சர்யம் கொண்ட கவித்துவ மாயத்தை  எழுப்ப முடிகிற போது மட்டுமே கவிதையாகிறது. ஏனெனில் கவித்துவ அறம் என்பது பேரளவில் பிரபஞ்ச ஒழுங்குகளிலிருந்தும், சிற்றளவில் நுண்மையின் நுண்மையான அடிப்படை உயிர்த்துகள்களாலும் கட்டமைக்கப்படுகிறது. இன்னுமொரு எளிய தளத்தில் ஆள்பவன்-ஆளப்படுபவன், அடிக்கிறவன்-அடிபடுகிறவன் என்னும் சமூக எழுவாய் பயனிலை இலக்கணங்களை உடைத்தெறியும் அறமாகவும் இருக்கிறது. இன்னும் பற்பல தளங்களில், பல்லடுக்குகளில்அமைப்புகளின் அமைப்பாகவும், அதே விசையில் எல்லா அமைப்புகளின் எதிர் அமைப்பாகவும் கவிதை செயல்படுகிறது.

மிகுதியும் குழந்தைகள் உலகில் வாழும் ப.தியாகுவின் இக் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதையே இந்த ரீதியிலான கவிதையாக அமைந்துவிட்டிருக்கிறது. முதல் பத்தியில் எறிவதற்காகக் குறிபார்த்து நிற்கும்  சிறுவன். ஆனால் அடுத்த பத்தி ஒரேயொரு பாறை/ ஓணானின் வசம்என்று  நம்மைத் திடுக்கிட வைக்கிறது. சிறுவர்கள் ஓணான்களை கல்லடித்துக் கொன்று, அதன்மேல் சிறுநீர் கழித்து விளையாடுவது இயல்புதானே என்பவர்கள் தான், வளர்ந்தபிறகு அணுசக்தியைப் பயன்படுத்துவதும் இயல்பு என்பார்கள். சாதியத்தை வெகு இயல்பு என்பார்கள். கலவரங்களை உண்டாக்கி அப்பாவிகளைத் தீ வைத்துக் கொளுத்துவதும் கற்பழிப்பதும் கூட இயல்பென்பார்கள். ஓணான்கள் பாறைகளைத் தூக்கி எறியும் அறத்தைக் கவிஞர்கள் மட்டுமே படைக்க முடியும்.

எப்போதும் ஏதேனும் ஒரு  பிம்பத்தை உள்ளடக்கிய கண்ணாடிகள் ஒருபோதும் உறங்குவதில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட ஆடிகள் கூடி நிகழ்த்தும் பிம்பங்களின் கூத்தில் மயங்காத மனிதக் கண்கள் இருக்க முடியாது. ஆடி மாயை (optical illusion), காண் மாயை  (visual illusion) மற்றும்           மெய்மாயம் (virtual reality) போன்றவை சலனிக்கும்  மாயத்தருணங்கள் கவிஞனின் வட்டப்பாதையில் நுழையும்போது  கவிதையாக மாறுவது இயல்பாக இருக்கிறது. பிம்பங்களின் உலகில் நாள்முழுவதும் சஞ்சரிக்கும் இன்றைய இளம் கவிஞர்கள் இப்பரப்பில் நிறையவே எழுதும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. இத்தகைய தருணங்கள் இத்தொகுப்பில்  சில அற்புதமான கவிதைகளாகி இருக்கின்றன.  அலமாரிக் கதவில்/பதிந்திருக்கும் கண்ணாடிக்குள்ளிருந்து/கைகள் நீட்டி அழைத்து வைக்கிறாள்/நேற்றுத்தான் நிஷித்/ பெயர் சூட்டியாகிவிட்ட/ கண்ணாடி அம்மா’  வருகிற 10வது கவிதையில் காண்மாயையோடு குழந்தைமையும் கலந்துவிடுகிறது. குழந்தைகளுக்குக் கண்ணாடியைக் காட்டக் கூடாது என்று பெரியவர்கள் கூறுவதில் பொருளில்லாமல் இல்லை. இந்த பிம்ப மாயக் குழப்பங்களைப் புரிந்து கொள்ளும் பக்குவம் குழந்தைகளுக்குக் கொஞ்சம் வளர்ந்தபிறகே கிட்டும். இன்னும் அவர்கள் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் ஏராளமான வினோதங்கள் காத்திருக்கின்றன. ஆனால் கவிஞன் எப்போதும் வளர விரும்பாத குழந்தையாக இருந்து எல்லாப் புரிதல்களிலிருந்தும் அதைத் தொடரும் பொறுப்புகளிலிருந்தும் தப்பிக்க விரும்புகிறான். 91வது கவிதையில் இருப்பது நாம் அடிக்கடி காண்கிற காட்சிதான். இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகளில் குருவிகள் தங்களைத் தாங்களே கொத்திக் கொஞ்சும் காட்சிகளை எல்லோரும் பார்த்திருக்கிறோம். ஏற்கனவே இதை யாரோ எழுதியிருந்து படித்த ஞாபகம் இருக்கிறது. ஆனால் 92வது கவிதை முழுக்க, காண்-மாயை சார்ந்தது. இதுவும் ஒரு பழைய காண்படிமம் எனினும் ப.தியாகு, இக் கவிதையில் பச்சைப் பாம்பை சிறு கொடியாக அங்கீகரிப்பதின் மூலம் தற்கால இளைஞர்களின் அக உலகை வெளிப்படுத்திவிடுகிறார்.  இவர்கள் தர்க்கங்களின் பிளவுக்குள் சிக்கிக்கொள்ளாமல், மிக நுட்பமாகப், பார்த்ததைப் பார்த்ததாக ஏற்றுக் கொள்ளும் அக்கண நியமத்தை வரித்தவர்களாக இருக்கிறார்கள். 106வது கவிதையில், இருக்கும் ஒரே டீவியில் நிஷித்தும் ப.தியாகுவும் சோட்டா பீமையும் ஏலியன் அணி கிரிக்கட் ஆட்டத்தையும் ஏககாலத்தில் பார்க்கும் வினோதம் நிகழ்கிறது. டீவிக்குள் டீவியை, கவிஞன் எப்போதோ உருவாக்கிவிட்டான்.

மேலே வருகிற நிஷித் என்ற குட்டிப்பையன் மற்றும் ஜனு, இஸபெல்லா முதலிய குழந்தைகள் மூலமாக இத் தொகுப்பில் நிறையக் கவிதைகள் விளைந்திருப்பதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. நிறைய இளம் கவிஞர்கள் திருமணம் ஆன கையோடு காணாமல் போவதை வருத்தமுடன் பார்த்து வருபவன் நான். எப்படியும் அவர்கள் மீண்டும் எழுத வந்துவிடுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அவர்கள் தங்களது மீள்வருகையை  ‘நிஷித்தைப் போன்ற குழந்தைகள் மூலம் நிகழ்த்திவிட முடியும். குழந்தைகள் ஒவ்வொன்றையும் வினோதமாய்ப் பார்த்துப் பார்த்து, தங்களது வளர்ச்சியின் ஒவ்வொரு அசைவையும் ஒலியெழுப்பி, ஒரு படைப்பெனவே நிகழ்த்தும் அதிசயங்களை பெற்றோர்கள் அவர்களது உடல் வழியாகவும் உயிர்வழியாகவும் அனுபவம் கொள்ளும் அற்புதக் கணங்கள் பல சமயங்களிலும் கவித்துவத் தருணங்களாகவே இருக்கின்றன. இந்த உலகம் புத்தம் புதுசாக நமக்கு மீண்டும் ஒருமுறை குழந்தைகள் வழியாகக் காணக்கிடைக்கிறது. வாழ்க்கை பற்றிய உங்கள் அடிப்படைக் கருத்துக்களை ஒரு மீள்பார்வைக்கு உட்படுத்தும் தருணமாகவும் இது அமையலாம். அப்படியே வாழ்வின் வழியாகவே சென்று மறைந்து விடாமல், மீண்டும் நம்மைப் படைப்பாளியாக நிலை நிறுத்தும் சக்தியை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டிய, வாழ்வின் ஒரு முக்கிய திருப்பமாகவும் இது அமையக்கூடும். ப.தியாகு இந்த வாய்ப்பை மிக அருமையாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

ப.தியாகுவின் கவிதைகளில் இரு முக்கியமான கிளைகள்  அசைவதைப் பார்க்கிறோம். ஒன்று குழந்தைகள் நிஷித் மற்றும் ஜனுவின் மூலமாகக் காணும் வினோத உலகம். இரண்டாவது, குழந்தைகள் நிரம்பிய வீட்டில் வாழ்தலின் போதம், மொழி அழகியலாகத் துளிர்க்கும் கிளை. முன்பகுதியில் நாம் பார்த்த கண்ணாடி அம்மாகவிதை நிஷித்தின் வினோத உலகம் சார்ந்ததுதான். அதற்கு அடுத்த கவிதைபள்ளி நிமித்தம் நிஷித்-ஐ பிரிதல்கொஞ்சம் பழைய வரிகளில் ஆகியிருந்தாலும்பெயருக்குக் கூட/ பொம்மை வானமொன்று/ இருந்திருக்காது/சரிதானே பையாஎன்னும் 4வது பத்தி காப்பாற்றிவிடுகிறது. ஆட்டுக்குட்டி-மேய்ப்பன், விரல்களில் படும் பட்டாம்பூச்சியின் வண்ணங்கள் போன்ற தேய்சொற்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். மான்மரம்என்னும் தலைப்பு உள்ள கவிதையில் கணத்துக்குக் கணம் தன்னிலையைப் புதுப்பித்துக் கொள்ளும் குழந்தைமையின்  படைப்பு அழகியல், மிக எளிமையாக ஆனால் அற்புதமாக வெளிப்படுகிறது. இச்சிறிய கவிதை மானில் தொடங்கி, இலையுதிர்காலம் கடந்து, தளிர்விட்டு  வசந்த காலத்தை அடைந்துவிடுகிறது வண்ணச்  சாக்கட்டிகளின் கோடுகளால். வாசிக்கும் மனம் நிரப்பும் கவிதை இது. குமிழ்கள் அல்ல கிரகங்கள்கவிதையில் முதல் பத்தியிலிருந்து  இரண்டாவது பத்திக்கு ஒரு கவித்துவ/தத்துவப் பாய்ச்சல் நிகழ்கிறது. சோப்புக் குமிழ்விடும் சிறுவனின் உலகத்திலிருந்து கவிதைஉடைந்து சிதறும் அவைகளில்/ நீங்கள் எதையும் பார்க்கலாம்/ பார்க்க முடியாமல் முற்றாக உங்களை/ நீங்கள் துண்டித்தும் கொள்ளலாம்.என்று முடிகிறது. இதில் சிறப்பு என்பது நீங்கள் துண்டித்தும் கொள்ளலாம்என்னும் ஆசுவாசம் தான். இதுதான் படிப்பவரையும் கணக்கிலெடுத்துக் கொள்ளும்  இன்றையக் கவிதையாகவும் இருக்கிறது. கௌதம் ஆன சித்தார்த்கவிதையில், விபத்துக்குள்ளான  நிழலுக்குக் களிம்பு தடவும் அபூர்வமான சித்தார்த்தைச் சந்திக்கிறோம். குழந்தைமையின் பித்தில் வெளிப்படும் உச்சபட்ச அழகியலை இக் கவிதை கண்டடைகிறது. சத்தியம், ஞானம் போன்ற சொற்களைத் தவிர்த்திருந்தால் இக்கவிதை, ஒரு அற்புதச் சிற்பமாகிவிட்டிருக்கும். விடுபடலின் மந்திரம்கவிதையில் நிஷித்தோடு நாமும் சேர்ந்து நல்ல நல்ல ரொம்பதுஎன்று கூறத் தோன்றுகிறது. பாவம் தவளைஎன்று பாம்புக்கு வழி வரைய மறுத்து அடம் பிடிக்கும்  இஸபெல்லாவை நம் தோழியாக்கிவிடுகிறது வழிகவிதை. இறுதிக் கவிதையாக வரும் பக்கவாட்டில்மேலும் ஒரு சிறிய கவித்தெறிப்பு. தாய் யானையின்/ நிழலிலேயே நடக்கின்றன/ குட்டி யானைகள்/ வனாந்திரத்தில் // மின் துண்டிப்பு // இப்போது/டி.வி.பெட்டியின் பக்கவாட்டில்/ பார்வையைச் சுழற்றுகிறான் நிஷித்.இந்தக் கவிதையையும் அந்தக் காண்_மாயை வகைக் கவிதைகளோடு சேர்க்கலாம். ஆனால் நிஷித் மட்டுமே இப்படிப் பக்கவாட்டில் பார்வையைச் சுழற்ற முடியும்.  இக் கவிதை பார்த்தல், யானைகளைப் பார்த்தல், அதுவும் டி.வி.யில் பார்த்தல், பார்க்காமலே பார்த்தல்  என்று இன்னும் பல தளங்களில் நமது புரிதலின் எல்லைகளை விரிவுபடுத்தும் கவிதையாகவும் இருக்கிறது. தந்தைமைஎன்னும் கவிதை தந்தைக்கும் குட்டிமகளுக்குமான உறவில் இருக்கும் ஒருவிதப் புரியாமையை என்னதான் கோருகிறது/ இரண்டு வயது மகளே/ உன்னிடமிருந்து/ எனதிந்த தந்தைமைஒரு கேள்வியாய் எழுப்புகிறது. நாம் உடனேஈடிபஸ் சிக்கல்என்று கூறிவிட்டு நகர்ந்துவிடலாம். ஆனால் இது இன்னும் கொஞ்சம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய சிக்கலாகவே தெரிகிறது. அன்பின் அல்லது காதலின் அல்லது உறவின் விதைகள் பலப்பல வடிவங்களாய்த் தளிர்க்கும் புள்ளிகளில், நமது பண்பாடு தானாக வெளிப்பட்டு மிக நுட்பமானதொரு எல்லைக்கோட்டை  நமக்குக் காண்பிக்கிறது. இன்றளவும் இதை வெகு இயற்கையாகவும் இயல்பாகவும் நாம் பின்பற்றி வருகிறோம்.

இரண்டாவது கிளையான வாழ்தலின்  போதமும் கவித்துவ போதமும் பல கவிதைகளில் வெகு இயல்பாய் நிறைந்து கிடக்கின்றன. ப.தியாகுவின் இத் தொகுப்பின் எல்லாக் கவிதைகளின் நிலமும் அவரது வீடாகவே இருக்கிறது. குழந்தைகளும் நிறைவுகளும் கொண்ட இந்த வீட்டின் எல்லாக் காட்சிகளும், நிகழ்வுகளும், சலனங்களும் கவிதைகளாகிவிடுகின்றன. சிமெண்ட் தரையில்/ கையளவு தேங்கிய/கடலின்/கரையோரத்திலிருந்து/ இழுத்துவிட்டேன்/ விரல் நுனி கொண்டு// வேகமாய் வெளியேறுகிறது ஒரு சிறு நதிஎன்று கடலும் நதியும்கூட இவரது வீட்டுக்குள்ளேயே வந்துவிடுகிறன. எலிக்குஞ்சுகளோடு எனக்கு குரோதமில்லைகவிதையில் வீட்டுக்குள் வளையவரும் பூனையை விரட்டி பிதுக்கிய பற்பசை நீளமே இருக்கும்எலிக்குஞ்சுகளைக் காப்பாற்றிவிடுகிறார்.இதற்குள்என்ற கவிதையில் கண் திறந்தவுடனேயே துறுதுறுவென்றிருக்கும்அப்பொழுதுதான் பிறந்த நாய்க்குட்டிகள் இவரது கனவுக்குள் நுழைந்து கவிதையாகிவிடுகின்றன. வெகு இயல்பாகவே மனிதன் மீன்களுக்குச் செய்யும் துரோகம் இரண்டு கவிதைகளில் பதிவு செய்யப்படுகிறது. எனக்குள் அலையும் மீன்கவிதையில் முழுமீனின் முள்ளை உள்ளங்கைக்குள் வைத்து மூடியவுடன் அஃது உடலாகிறது/ எனக்குள் அலைந்து/ நானே/ மீனாகிறேன்.அழித்துப் படைக்கும் இந்தியக் கடவுளின் இடத்தை, தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும்  கவிஞன் மிக எளிதாகக் கைப்பற்றி விடுகிறான். இக் கவிதையின் பின்புறத்தில் கவிஞனும் கடவுளும் பகடிக்குள்ளாவது பிறிதொரு வாசிப்பில் நிகழ்கிறது. இன்னொரு மீன் கவிதை: ஒரு கை நீரள்ளி/ மேல் தெளிக்கிறாள்/ துணுக்குற்றது போல/ கொஞ்சமே அசைந்து கொடுக்கிறது/இன்னும் உயிரிருக்கும் மீன்// அதைத்தான்/ தேர்ந்தெடுக்க வேண்டும் நாம்.இரக்கமற்ற உண்மையை நம் முகத்தில் வீசுகிறது இக் கவிதை. நானும் மீன் சாப்பிடுகிறவன்தான். போலிமை மிக்க இந்திய மனம் இங்கு பகடிக்குள்ளாகிறது.  “இன்னும் பருகவே இல்லைகவிதையில் தேயிலைப் பொட்டலத்தை விளையாட்டுப் போலவே மூழ்கடித்து மூழ்கடித்து கரைக்கும்’  இவர் தேநீர் பருகாமலே, பருகிய நிறைவடைந்துவிடுகிறார். கவிஞனுக்கு மட்டுமே கிட்டும் வாழ்தலின் போதம் இதுதான். மறந்து விடுகிறேன்கவிதையில் கண்ணாடித் தொட்டிக்குள் நீந்திக் கொண்டிருந்த மீன்கூட்டம் பறந்து கொண்டிருப்பதாகக் காண்பதும் இந்த போதத்தால்தான். அழகியலின் ஒரு பிரிவாய் இயங்கும்  கவித்துவ போதமும் வாழ்தலின் போதமும் ஒன்றுதான். இவை எல்லாவற்றின் ரகசியமும் ஒரு சிறிய கவிதைக்குள் அடங்கி இருக்கிறது. முதல் பத்தி:சுருண்டு கழி போலிருப்பதின்/ இறுக்கம் குறைய/ அவிழ்ந்து வருகிறது/ என்/  மனமென்னும் குருத்து.கவிதையின் அடுத்த பத்தியில்  “ஆசுவாசத்தின்/ ருசி பற்றி/ இலையானபின் எழுதுகிறேன்என்கிறார். குருத்து விடுவதைப்போல ஆசுவாசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர், இலையாகி, கவிதையின் அடுத்த கட்டத்திற்கு நகர்வார் என்று நம்புவோம். வாழ்த்துக்கள்.

- சமயவேல்
     03-11-2013.

13.11.13

இரண்டு ஆடுகள்


சிறுகதைகள் குறித்த அறிவு போதாத ஒரு காலகட்டத்தில் (இப்போ மட்டும் என்ன முன்னேற்றம் நிகழ்ந்துவிட்டது?!) எழுதி கோவையில் வெளிவந்துகொண்டிருந்த அமுதம்’ சிற்றிதழில் வெளியான என் சிறுகதையிது. ஒரு பதிவுக்காக இங்கே பதிகிறேன் நண்பர்களே. வேறெந்த சூழலிலும் ஆட்கொள்ளாத பீதியும் நிலைகுலைவும் குறித்த நேரத்தில் வரவேண்டிய வசுந்தராவின் அழைப்பு வராத இந்தப்பொழுதில் மட்டும் ரங்கராஜனை பாடாய்ப்படுத்தியது.

ரங்கராஜன் கண்பார்வையற்றவர். கண்பார்வையில்லாததை காரணமாய்க் கொண்டு என்றுமே முடங்கி விடாமல், தன்னம்பிக்கையுடன் ஊதுவத்தி, சாம்பிராணி, மெழுகுவர்த்திகள் விற்று பிழைப்பு நடத்துபவர்.

மனைவி இந்திராணி, தலைப்பிரசவத்தில் ஈன்றெடுத்ததோடு மண்ணுலக வாழ்வை முடித்துக்கொண்டு விடைபெற்று சென்றபின்தான் குழந்தை வளர்ப்பில் மிகுந்த நெருக்கடிக் காலகட்டங்களை ரங்கராஜன் அனுபவித்தார். அக்கம்பக்கத்தினரின் வாஞ்சையின் உதவி கொண்டே, வசுந்தராவை ஆறு வயதுவரை வளர்த்தெடுத்தவர், அதன்பின் வெளியூரில் விடுதியோடமைந்த பள்ளியொன்றில் அவளை சேர்த்துவிடுவது  உசிதம் என முடிவெடுத்தார்.

ஆயிற்று, இன்றோடு 19 வருடங்கள் முடிவடைந்து, கல்லூரியின் மூன்றாமாண்டை துவக்கியிருக்கிறாள் வசுந்தரா.

தேர்வு விடுமுறைக்காலங்களை மட்டும் தந்தையுடன் கழித்துவிட்டுத் திரும்பும் அந்த துயர்மிகு தருணங்கள் பிரிந்து சென்றும் ஓரிரு நாட்கள் வரை அங்கும் இங்குமாய் இருவர் கண்களும் குளமாய் பெருகித்தான் பின் நாட்பட வற்றும். இடைப்பட்ட தினங்களில் இருவரையும் சமாதானத்தில் வைத்திருப்பது, தொலைபேசி அழைப்புக்களும், உசாவல்களும்தான்.

தனியாய் வளர்கிற பெண், தான்தோன்றித்தனமாய் வளர்ந்துவிடக்கூடாது என்கிற கவலை ரங்கராஜனின் மனதிலிருந்தாலும், அதையும் கடந்து அவள் திருத்தமாய் வளர்வதை கல்லூரி ஆசிரியர்கள் மூலமும், விடுதி நிர்வாகிகள் மூலமும் அறிய வருவதுதான் அவருக்கு நிம்மதி தருவது.

வசுந்தராவும் ரங்கராஜனின் அன்புக்கும் பேணுதலுக்கும் சற்றும் சளைத்தவளல்ல. எவ்வித மனச்சிதறல்களுக்கும் இடங்கொடுக்காமல் தந்தையின் ஆசைகள் குறித்தும் தன் கல்வி குறித்துமே இலக்குகளை உருவாக்கிக் கொண்டு, தன் வழியில் அடிகளை முன்னெடுத்துச்செல்பவள். தோள்பைகளில் சுமந்து, கடை கடையாய், வீடு வீடாய் ஊதுவத்திகளும், மெழுகுவர்த்திகளும் விற்று ரங்கராஜன் அனுப்பி வைக்கும் ரூபாய்த்தாள்களில் அவரின் அன்பும் பிரியமும் ஒருசேர சுகந்தம் கிளப்புவதை அவள் அறிவாள். அதுமட்டுமன்றி அச்சுகந்தத்தை ரங்கராஜன், தனது தூதாக்கி அவளிடத்தில் நன்னடத்தையையும், நேர்மையையும் வலியுறுத்துவதாய் தானே கற்பனை செய்தும் கொள்வாள்.

எல்லா மாணவிகளும் எடுத்துச்செல்வது போல் வசுந்தராவுக்கும், கைப்பேசி மீது விருப்பமிருக்கும் என்றுதான் சென்ற முறை விடுமுறையில் வந்திருந்த வசுந்தராவிற்கு மாதத்தவணையில், அதிகம் விலைமதிப்புள்ள நிழற்படமெடுக்கும் வசதி பொருந்திய கைப்பேசி ஒன்றை வாங்கித்தந்தார் ரங்கராஜன். ஆயினும், அழைப்புக்களின்போது தொலைபேசி நிலையத்தை அணுகுவதில் ரங்கராஜனுக்கிருக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு ரங்கராஜன் எவ்வளவு சொல்லியும் கைப்பேசியை அவர் வசமே திருப்பித்தந்திருந்தாள் வசுந்தரா.

நாளும் காலை மாலை இரு வேளையும் பேசிக்கொள்வது வழக்கம். ஆனால் இன்று காலையிலிருந்து மாலை வரை அழைப்பு வராததில், ரங்கராஜன் மனம் தவித்தது. என்ன ஆயிற்றோ எனத்துவங்கி பலவாறாகச் சிந்தித்து மனம் குழம்பியபடி அமர்ந்திருக்க, விற்பனை முடித்து வீடு திரும்புகையில் தெருவோரக் கடையில் வாங்கி வந்திருந்த இட்லிப் பொட்டலத்தை பிரித்து சாப்பிடவும் மனம் வரவில்லை.

வாசலில் யாரோ மிதிவண்டி நிறுத்தும் அரவம் கேட்டு நுழைவாயிலின் திசை உணர்ந்து திரும்பினார் ரங்கராஜன்.

யாரு முருகேசனா… என்றார் கணித்தவராய்.

‘ஆமாம் அண்ணே, வசுந்தரா கண்ணு ஏழெட்டு தடவை போனில் அழைச்சும் நீங்க எடுக்கலையாம். பதறிப்போய் எனக்கு போன் போட்டுது. ன்னு அழுது பாவம். என்ன விபரம்னு கேட்டுட்டு போகத்தான் வந்தேன்…’ - முருகேசன் சொல்லி முடிக்கவும் துணுக்குற்றார் ரங்கராஜன்.

அப்படியா… இல்லையேப்பா, அழைப்பு வந்தமாதிரியே தெரியலையே… நானும் பதறித்தான் போருக்கேன் முருகேசா…என்றவாறே தன் சட்டைப்பையிலிருந்த கைபேசியை பரபரப்பாய் துழாவி எடுத்து முருகேசனிடம் நீட்டினார்.

வாங்கிக்கொண்ட முருகேசன், கைப்பேசியின் திரையில் தவறிய அழைப்புக்களின் எண்ணிக்கை ஏழு என்று காண்பித்ததை கண்டதும், ‘பாப்பா அழைச்சிருக்கு அண்ணே…என்றார்

அப்போ ஏன் மணியடிக்கலை முருகேசா…?

சரிதான் போன் ‘சைலண்ட் மோட்’-ல் இருக்கு, அது தெரியாம, அப்பா எடுக்கலையேன்னு பாவம் அந்தப் பொண்ணு துடியா துடிச்சிருச்சு…

முருகேசன் அந்தக் கைபேசியிலிருந்தே வசுந்தராவிற்கு அழைப்பு விடுத்தார்.

இந்தாங்கண்ணே பேசுங்க…

முருகேசனின் கையைத்தடவி கைப்பேசியை வாங்கிக்கொண்ட ரங்கராஜன் அவசர அவசரமாய் தன் காதில் பொருத்திக்கொண்டு எதிர்முனையில் வசுந்தரா இணைப்பில் வருமுன்னே ‘வசுந்தரா வசுந்தரா..என அரற்றினார். இணைப்பில் வந்த வசுந்தராவும், தழுதழுக்க ‘அப்பா… அப்பா..என பேசத்திணறுவது புரிந்தது முருகேசனுக்கு.

அழுவது தவிர அவர்களால் வேறெதுவும் பேசிக்கொள்ள முடியாவிட்டாலும், மந்தையிலிருந்து பிரிந்த இரண்டு ஆடுகள் மீண்டும் ஓரிடத்தில் சந்தித்துக்கொள்ளும்போது அவைகளுக்கிடையே உணர்ச்சிப் பெருக்கில் நிகழும் பரிபாஷையிருந்தது அவர்களின் விசும்பலில்.

நன்றி: அமுதம் - திங்களிதழ்
செப்டம்பர்-2010