26.1.12

போதி மரம் - வெய்யில் ஞானம்

 
1.
வெய்யில் சில்லிடல் தாளாது
மரத்தை போர்த்தியிருக்கிறேன்
இப்போது  பரவாயில்லை
கதகதப்பாயிருக்கிறது

2.
சூரியனுக்கு
விரித்த வலை
சிக்கிய
கொஞ்சம் நட்சத்ரங்கள்தான் சேகரம்
மரத்தடியில்.

3.
வெய்யில் தாரைகளில்
ஈரலித்துவிடாதிருக்க
மரத்தடியடைந்தால்,
தரையெங்கும்
சொட்ட விட்டிருக்கும் இதுவோ
ஓட்டைப்பந்தல்

4.
க்கம் என்பதென்ன
சிறு மரணம்

யாத்ரீகன்
ஒருக்களித்துக்கிடக்கிறான்
அரசமர மேடையில்
வெளிச்சத்தோட்டாக்கள்
தேகமெங்கும் துளைத்திருக்க.

5.
மரத்துக்கு மேலே
அண்ணாந்தும்
தேவதைகளும் தட்டுப்படவில்லை

எங்கிருந்து பாய்ச்சுகிறார்கள்
இத்தனை
டார்ச் லைட்களை

6.
சூரியனைத்தான்
மரம் படித்தது
எடுத்துக்கொண்டது
சாரத்தை மட்டும்

7.
கூசாமல் பார்க்கலாம்
சென்ஸார் முடிந்தபின்னானதுதான்
இந்த காட்சி.                                                            

21.1.12

புல்லாங்குழல் - குயிலின் குரல்
கிளைகள் மீதிலமர்ந்து 
கூவிக்களிக்கின்றன குயில்கள்
புல்லாங்குழல் காய்க்கும்
மரங்கள்
உட்கிரகித்துக்கொள்கின்றன


வேண்டுமெனில்
இச்சிறு மூங்கிலின்
வாய் திறந்து
ஒலியெழுப்பக்கேட்டுப்பாருங்களேன்

14.1.12

முதலில் ஏற்றிய அகல்


தீர்மானங்கள் 
நொடிக்கு நொடி தடுமாறும் தறுவாய்
முன் நீண்டு முன் நீண்டு
தயங்கி
பின்னுக்கு இழுபடுகிறது
காயு குட்டியின் சுட்டு விரல்

எதுவாயிருக்கும்
ஐந்தாறிலும்
முதலில் ஏற்றிய அகல்!

சுடர்களெல்லாம் பற்களாகி
ஒளிர்கிறது சிரிப்பு