26.12.12இருள் தளும்பும் குளம்
பொலிவில்லை
பௌர்ணமி நிலவின் முகத்தில்.


நெய்யில் தோயும்
திரிப் புழு
நெளிகிறது சுடரில்.

18.12.12

பறக்கும் முத்தம்


கை விரல்களோடு
இதழ்கள் ஒற்றி
ஈரத்தின் சிறகுகளோரம்
மெல்ல ஊதி
வழியனுப்பி வைக்கிறாய்
எனக்கான
பறக்கும் முத்ததை

பாதி வழியிலேயே
திசைமாறி விரைகிறது,
திடும்மென ஓர்
பட்டாம்பூச்சியாக
ரூபங்கொள்ளும் அது.

17.12.12

கனவு


சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறேன்
இறகுகளாலான
கிரீடம் தரித்தவர்களின்
ஈட்டி முனைகளால்

தப்பித்தலுக்கான வழிகளை
மூடியபடி
தொடர்கிறது
என் கண்களின் கனவு.

16.12.12

மூன்று கவிதைகள்


1)
எத்தனை இணக்கமாயிருக்கிறது
இந்த இருள்
இந்த நிசப்தம்
என்றுதான் எண்ணியிருந்தேன்

மின்தடை விலகும் நொடி
அந்தகாரம் இமை விலக்க
கண் திறந்து கூசுகிறது
குமிழ் விளக்கு

க்றீச் க்றீச் என
அலறித் தொலைக்கிறது
பறந்து
வெளியேறவும் வெளியேறாத
மூன்று றெக்கை பறவை.

2)
கிராமொஃபோனென
விரிந்திருக்கும் செம்பருத்தி

உள்ளிருந்து வெளியேகும்
ஒரு பாடல்
உடன் கொஞ்சம் இசைத்துணுக்குகள்.

3)
விமானம் என
கூவிச் சுட்டுகிறாய்

பரந்த வான்வெளியில்
நீந்திச் செல்லும்
உலோக திமிங்கல
மீனாகத் தெரிகிறது
என் கண்ணில்.

14.12.12

மரமல்லி


1)
மரமல்லி மரம்
நிழல் என்னவோ
வெள்ளை நிறம்!

2)
வாசலில்
மரமல்லிக் கோலம்
இதுதான்
என்
வீட்டை அறியவான
அடையாளம்.

3)
உதிர்ந்திருந்த
மரமல்லிகளில் இரண்டெடுத்து
கையிலேந்தும் கணம்
நானும்
மரமல்லி மரம்.

4)
ஆழமாக சுவாஸிக்கிறேன்
மறுபடி மறுபடி,
விடாமல் பிடித்துவைப்பதெப்படி
மரமல்லியின் வாசத்தை.

10.12.12

பின்தொடர்கிறதுஅடர்ந்த கருமையை விலக்கியபடி
வழி நடத்துகிறது
வாகனத்து விளக்கின் வெளிச்சம்

என்னை

பின்தொடர்கிறது இருள்.

4.12.12

நான் ஏன் இதை நினைத்துக் கொள்கிறேன்


i)
அசையாத விழியோடு
நிழலாடும்
கிளையிலிருந்து
நீங்கியும் நெடு நேரமாயிற்று
பட்சி.

ii)
குழந்தைகள் போடும்
கூச்சலுமே
அமைதியிழக்கச் செய்வது
உன்னை

நான் ஏன் இதை
நினைத்துக் கொள்கிறேன்

விறைப்பேற்றிய பறை
துவங்குகிறது வாசலில்.