28.8.13

மான் மரம் மான் வரைந்ததைத்தொடர்ந்து
கிளர்ச்சியுற்றதில்
மரம் வரைவதென முடிவாயிற்று

கொம்பு விடுத்து
மானை முற்றிலும் அழித்துவைக்கிறாள்
எஞ்சுகிறது ஒரு இலையுதிர்கால மரம்

இலையுதிர்கால மரத்தின் வெறுமையை
பச்சை நிற சாக்கட்டி கொண்டழிக்கிறாள்
தளிர் விடுகிறது
ஒரு வசந்த கால மரம்.


21.8.13

ஒன்பது கவிதைகள்

1
மெல்லத் தலைகோதுவதில்
துவங்குவாய்
நிதானமாய்
முள்ளைத் திருகி
ரேடியோவில்
அலைவரிசையைக்
கைப்பற்றுவதைப் போல.

2
அவ்வளவு ஒன்றும்
கசந்ததில்லை
பசுமையை அரித்து
பின்
புழுக்கள் மிச்சம் வைக்கும்
வெறுமையைக் காட்டிலும்
அந்த
வேப்ப மரத்தின் இலைகள்.

3
இடர் வருமென்றஞ்சி
உடைந்து சிதறிய
சர்க்கரை அடைத்த ஜாடியை
ஒரு சில்லும் விடாமல்
சேகரித்துப் பதுக்கியாயிற்று

ஒன்றைக் கொல்லலாம்
எறும்பை
ஒரு நூறை என் செய்ய?

4
மெர்குரி வெளிச்சத்தை
கடக்கிற சமயம்
சிறு விசும்பலோடு
விட்டு விலக
யத்தனிக்கிறது என் நிழல்
சவ்வுபோலத் தன்னை
இழுத்தும் பார்க்கிறது

நிழல் என்னைவிட்டு விலகுவதுமில்லை
நான் கைவிடுவதுமில்லை.

5
உன்
கண்ணின் விளிம்பைக்
கடந்துவிட்ட கண்ணாடித்தாரை
சிதறும் சில்லுச்சில்லாய்
என்னில் தைக்க.

6
அழுந்த முத்தமிட்டு
திளைத்து விலகுகிறது
பட்டாம்பூச்சி
காற்றில் இதழ்களை
துடைத்துக் கொள்கிறது
அந்தப் பூ.

7
கற்கண்டை நினைவூட்டும்
இறைந்து கிடக்கும்
வாகனத்தின் கண்ணாடிச்
சில்லுகளும்

கசப்பாய்க் கசக்கும்
ஆனாலும்.

8
அரிந்து
எலுமிச்சையை
அரைக் கோளமாக்கிப்
பிழிந்தேன்
இப்படியாக
என், உங்களின்
நாவின் உமிழ்நீரை.

9
உன் வெறும் மூச்சை
இலையென
வாங்கிச் செழிக்கும்
என் தாபம்
அனல் மூச்சில்
சுடராகி நெளிகிறது
இருப்பு கொள்ளாமல்.


16.8.13

இரண்டு கவிதைகள்
1)
பிரியும் தறுவாய்
நெற்றியில் அழுந்தும்
முத்தம் தாண்டி
என் முகம் ஊர்கிறதுன்
கண்ணீர்

கொஞ்சம் கொஞ்சமாய்
செத்துக்கொண்டிருக்கும்
மீன் ஒன்று
ஆவலாய் அசைந்துகொடுக்கிறது
என்னுள்.

2)
நிலவென்று
உன்னை எழுதியெழுதி
பிரித்துவிட்டதன்
நிராதரவில் தேம்பும்
இவ்விரவை
ஒரு
கருப்பு ஸ்டிக்கர் பொட்டை
அணிவதில் தேற்றுகிறாய்.


12.8.13

இரண்டு கவிதைகள்1)

முழு நீளத்திலிருந்து
ஒரு முழத்தை
அறுத்தெடுக்கிறது
அவளின்
கை கொண்ட பிளேடு

கண் சிமிட்டும் நேரம்
துடித்தடங்குகிறது சரம்

2)

உலகமே
எனக்கு எதிராய்
திரும்பிவிட்டதைப் போல
எதிர்த்தாற்போலன்றி
முன்
பின்
இடம் வலம்
உடன் வருபவர்
யாரும் இல்லை
இந்த நெடுஞ்சாலையில்
என்
மோட்டார் சைக்கிள்
பயணத்தில்.2.8.13

மூன்று கவிதைகள்


காற்றில் சுழல்வது
என நினைத்தேன்

நாவாகிப் புரளும்
அந்த இலை
இறுதியாய்
என்னவோ சொல்ல வருகிறது.மோதிக் கலையவேண்டும்
மௌனம்
இக்கணம்
எங்கிருந்தபோதும்
எதிரில் வா!


உன் வெளிநடப்புக்குப் பின்னான
வெறுமையின் சுவடுகள்
கரை மணலில்

பித்துப்பிடித்தாற்போல்
விரைந்து வந்து
அழித்தபின்புதான்
கிட்டுகிறது ஆறுதல்
இந்த அலைக்கு.

எனக்குத்தெரிந்து சிறுமிகள்:
எனக்குத்தெரிந்து சிறுமிகள்:

உள்ளங்கை மருதாணி காட்டி
தான் சிவப்பார்கள்


புத்தகத்திடை தோகை பதுக்கி
குட்டி கனவு வளர்ப்பார்கள்

அரிசி மாவில்
பிஞ்சுவிரல் தோய்த்தெடுத்து
வராத கோலத்தையும்
வராந்தா முழுக்க இழுத்து வருவார்கள்

பள்ளி வேன்களின்
சன்னல் தாண்டி கையசைத்து
விடைபெறுகிறேனென்று
உள் பிரவேசிப்பார்கள்,

இன்னும்...

சிறுமிகளைத் தெரிந்திராத
ஒன்றிரண்டு சிறுமிகள்:

சமன் செய்ய கையில்
கழியொன்று பிடித்து
சிதறாது கவனம் முழுவதையும்
ஓரிடம் குவித்து
இப்படி கயிற்றின்மீது நடப்பார்கள்.