29.4.12

பச்சை வானம்பந்தலோடு படர்ந்து தளும்பும்
நட்சத்திரங்களை அரும்புவிடும்
என் பச்சை வானம்

வருவாள்
கொய்வாள்
கோர்ப்பாள்
ஒளிர ஒளிர சூடிக்கொள்வாள்
நிலா.27.4.12

கரடி பொம்மைஇளவரசி
அணைத்துத்திரியாததன் வருத்தங்கள்
தன்
பஞ்சு ரோமங்களின் இடுக்குகளில்
தூசென சேகரமாவதில்
வனப்பழிந்து வருகிறது
கரடி பொம்மை

அறையின்
எந்தத்திசையில் அமர்ந்திருந்த போதும்
என்னையே வெறித்தாற்போலிருக்கும்
அதன்
பூஞ்சை படிந்த கண்களில் இல்லை
முந்தைய சோபை

தூக்கிக்கொள்ளச்சொல்லி
முன்னிரண்டு கால்களையும்
நீட்டியே பிடித்திருக்கும் இந்த
கரடிக்குழந்தையை ஏந்திக்கொள்ளவும்
வேண்டும் ஒரு குழந்தை ஆகையால்
அரசி, நாம் ஏன்......


21.4.12

உடன் வராதே குட்டி


ஒருவரை பெயர் சொல்லி அழைத்தால்
எத்தனை மரியாதையானது
அதுபோல மரியாதையானதல்ல
ஒரு நாய் குட்டிக்கு
நாய்க்குட்டி என்று பெயர் வைத்து அழைப்பது

கடுவன் பெட்டையென வகைபிரிக்க அவகாசமின்மையில்தான்
நான் உனக்கொரு அழகான பெயர் வைத்து முதலில் அழைத்தேன்
‘குட்டி’

அன்றைக்கு
என் அருகாமையை அங்கீகரிப்பது போன்று வாலாட்டியபோது
குட்டி உன் வால் உயர்ந்தது உயர்ந்ததுதான்

ஏந்திக்கொள்ள நீட்டியபோது
குட்டி நீ முன்னங்காலை
என் உள்ளங்கையில் வைத்தது வைத்ததுதான்

குட்டி எதையோ சிந்திப்பது போல
தலை சாய்த்தபோது
அதுவும் சாய்த்தது சாய்த்ததுதான்

தூங்கப்போவதாக கொட்டாவி விட்டாயா
வாயைப்பிளந்தது பிளந்ததுதான் - பார் என் காமிரா பதிவுகளை

தாயைப்பிரிந்து வந்து இங்கு சுற்றித்திரியும் குட்டி
விடுதிக்காப்பாளர் கம்பு கொண்டுன்னை அறைந்தார் என்றுதான்
மேலும் உன்னை திசை மாற்றி ஐந்தாறு தெருக்கள் தள்ளி
விட்டுத்திரும்புகிறேன் உடன் வராதே

சக்கரங்களில் சிக்கி நீ சாகாமல் வளர்ந்துவிட்டால்
குட்டி..
உன் அத்தனை பற்களும் பதிய என்னை கடி ஒரு நாள்.

16.4.12

எனக்கு:


எனக்கு :

ஒரு முழு வெள்ளரி
ஒன்றிரண்டு கீற்றுகள் தர்ப்பூசணி
இளநீர்
குவளையில் ததும்ப
த்ததும்ப
மோர் அல்லது
எலுமிச்சை கலந்த பானம்
இத்யாதி இத்யாதி.

என் அக்வாரியம் மீன்களுக்கு:

என்றுமில்லை கோடை

10.4.12

நிறை குடங்கள்


ருந்துகளைப் போலான தேன்சிட்டுகள்’ என்னும் பன்.இறை அவர்களின் முதல் கவிதை தொகுப்பைக்குறித்த ஒரு அறிமுகத்தை தன் வலைப்பூவில் தந்திருந்தார் சுந்தர்ஜி. பன்.இறையை அறிமுகத்தில் வாசித்தபோதே அவரின் தொகுப்பையும் உடன் வாசித்துவிட எழுந்த ஆவல் என்னை பரபரவென்று வைத்திருந்தது.

கோவையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடக்கும் ‘ஊஞ்சல்’ மாதாந்திர இலக்கியக்கூட்டத்தில் ‘பருந்துகளைப் போலான தேன்சிட்டுகள்’ தொகுப்பைப்பற்றிய இரண்டாம் அறிமுகத்தை (என்வரையில்) நண்பர் இளஞ்சேரல் நிகழ்த்திய அன்றுதான் தொகுப்பு கையில் கிடைக்கப்பெற்றேன்.

அத்தனை அற்புதமான அந்த தொகுப்பை வாசித்துக்கொண்டிருக்கும்போதே பன்.இறையோடு தொடர்புகொண்டு பேசியதற்குப்பிறகான என் மனநிலையைத்தான் நான் சொல்ல வருவது,

எழுதத்தொடங்கி சுமார் 15 வருட கால இடைவெளிக்குப்பிறகு இந்த முதல் தொகுப்புவெளிவந்திருக்கும் செய்தியை சொல்லி புருவமுயர்த்த வைத்தார் பன்.இறை.       சுந்தர்ஜியும் அவருக்கு சளைத்தவரில்லை என்பதுபோல வாசிப்பை மட்டும் வைத்துக்கொண்டு, எழுத 20 வருட கால இடைவெளியை எடுத்துக்கொண்டவர் என்பதுதான் இங்கே மற்றொரு சுவாரசியமான விஷயம். (அவரின் கவிதைத்தொகுப்பையும் எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன்).

யோசித்துப்பார்க்கிறேன், எத்தனை நிதானம்!
இப்போது நினைத்தால் என்னைக்குறித்தே எனக்கு வெட்கமாயிருக்கிறது. இது என்னைக்குறித்தே எழும் உணர்வு ஆகையால் எழுதத்தொடங்கி தீவிரமாய் இயங்கி வரும் நண்பர்கள் யாரும் தம்மை காயப்படுத்தியதாய்க்கருதவேண்டாம்.

தேடல்கள் இல்லை, அதிகம் வாசிப்பதில்லை, படைப்பாளிகளுடன் அவர்களின் பிரதிகள் குறித்த கலந்துரையாடல்கள், விவாதங்கள் எடுத்துக்கொள்வதில்லை, புரிதல்களை தொடர்புடையவர்களிடம் வெளிப்படுத்த அச்சம் / தயக்கம் / கூச்சம், எழுத எடுத்துக்கொள்ளும் பொருள்களின் மீது தெளிவின்மை, குறுக்குவிசாரித்தறியாமை, இத்தனை கொடிய நோய்க்கு நான் ஆட்பட்டிருந்தும், எழுத்துலகில் நான் ‘நம்புய்யா.. நானும் ரவுடி!’ என்கிற மாதிரி பாவலா காண்பிப்பதாகவே படுகிறது எனக்கு.
இந்த நிமிடம், இன்றுமுதலாவது வாசிப்பையும் தேடலையும் நேர்மையாய் மேற்கொள்ளவேண்டும், பெருக்கிக்கொள்ளவேண்டும் என்றே தோன்றுகிறது.

கற்களிடுவதன் பிரயத்தனமின்றி, பன்.இறை எனும் நிறைகுடத்தில் இந்தக்காகம் குடித்த தண்ணீரின் ஒரு மிடறு இது:

அமைதி:

இயல்பாய் எல்லாமே
போய்க்கொண்டிருக்கிறது

அதிர்ச்சியான தொலைபேசி அழைப்புகளில்லை
குழந்தைகள் எதையும் உயரத்திலிருந்து
தன்மீது இழுத்துக்கொள்ளவில்லை
திரும்பத் திரும்ப காட்டப்படும்
பேரழிவுக் காட்சிகள் இல்லை
தலையில் அடித்துக்கொண்டு
தெருவில் யாரும் ஓடவில்லை
எல்லாம் அமைதியாக சரியாக
போய்க்கொண்டிருக்கிறது
தன் பாதையில்
அமைதி எவ்வளவு மெதுவாக சாதுர்யமாக செல்கிறது
இதுதான் பயங்கரமானது.

-‘பருந்துகளைப் போலான தேன்சிட்டுகள்’
  பக்கம்-32


9.4.12

உன் கண்ணாடி வளையல்கள்


என் மனசு..
அது ஒற்றைவாக்கியம்,

பொய்த்திமிறல்களில் உடைந்து
இப்போதென் 
சேகரங்களை அலங்கரிக்கும்
உன்
கண்ணாடி வளையல்கள் செய்த
அடைப்புக்குறிகளோ ஏராளம்.

5.4.12

பிள்ளைகள் ரயில்


இந்தக்கவிதையை எழுதி முடித்தபோது இருந்த குதூகலம், என் ப்ரிய கவிஞரும் எழுத்தாளருமான திரு சுந்தர்ஜி அவர்களோடு நின்று (பதற்றத்தில் நான் ரொம்ப இறுக்கமாகவே நிற்கிறேன்) போட்டோ எடுத்துக்கொண்டமாதிரி, ஆனந்த விகடனில் பக்கத்தில் பக்கத்தில் எங்கள் கவிதைகளை பார்த்தபோதும் இருந்தது.

சுந்தர்ஜி அவர்களின் கவிதைகளை வாசிக்க சொடுக்குங்கள்: http://sundarjiprakash.blogspot.in

நன்றி ஆனந்த விகடன்! (11.04.2012)

ஓவியம்: ஹரன்


பாதங்களில்
சக்கரங்கள் பூட்டிய பாவனைகளில்
பிள்ளைகளே
பெட்டிகளும் பயணிகளுமானதில்
உருள்கிறதொரு தொடர்வண்டி

ஓட்டுநனின் மனம் போன
பாதைகளைத்
தண்டவாளமெனப்பற்றி
அனாயாசமாய் கடக்கிறது அது
மெட்ராஸ்
டெல்லி
மும்பை
கொல்கத்தா நிலையங்களை

எந்தவூரில்
அதிகம் பனிப்பொழிவு
இருந்ததெனத்தெரியவில்லை

"அவசரமா ஒண்ணுக்கு போகணும்" என்று
வெளியேறுகிறான் ஒரு பிள்ளை
அல்லது
ஒரு பயணி
அல்லது
கழன்றுகொள்கிறது ஒரு பெட்டி.

2.4.12

அருவி


a)
பல லட்சம் குவிண்டால்
சர்க்கரையை
சாய்த்துப்பிடித்தாற்போல்
சிந்துகிறது அருவி,
தித்திக்கிறது எண்ணத்தில்.


b)
நீர்தான் விழுகிறதே
கற்றை கற்றையாய்
கன அடிகளாய்,
அருவியெப்படியாகும்
நீர்-வீழ்ச்சி.

c)
இரைச்சல்
காதின் சவ்வைக்கிழிக்கிறது,
அருவி இசைத்தால்
அது
வல்லிசை போல.

d)
எந்த பெரிய கண்ணின்
விளிம்பைக்கடக்கிற கண்ணீர்,
அருவி.

e)
கலவியின் உச்சத்தில்
பீறிடும்
விந்தின் வண்ணம்
அருவி.

f)
நாளை எடுக்கவிருக்கும் நிழற்படத்தில்,
நாளை மறுநாள்
தானொரு
தீம் பார்க்கின்
செயற்கை அருவி என்றே
காண்பித்துக்கொள்ளப்போவதில்லை
ஒரு சட்டத்துக்குள் சரியும் நீர்.