21.4.12

உடன் வராதே குட்டி


ஒருவரை பெயர் சொல்லி அழைத்தால்
எத்தனை மரியாதையானது
அதுபோல மரியாதையானதல்ல
ஒரு நாய் குட்டிக்கு
நாய்க்குட்டி என்று பெயர் வைத்து அழைப்பது

கடுவன் பெட்டையென வகைபிரிக்க அவகாசமின்மையில்தான்
நான் உனக்கொரு அழகான பெயர் வைத்து முதலில் அழைத்தேன்
‘குட்டி’

அன்றைக்கு
என் அருகாமையை அங்கீகரிப்பது போன்று வாலாட்டியபோது
குட்டி உன் வால் உயர்ந்தது உயர்ந்ததுதான்

ஏந்திக்கொள்ள நீட்டியபோது
குட்டி நீ முன்னங்காலை
என் உள்ளங்கையில் வைத்தது வைத்ததுதான்

குட்டி எதையோ சிந்திப்பது போல
தலை சாய்த்தபோது
அதுவும் சாய்த்தது சாய்த்ததுதான்

தூங்கப்போவதாக கொட்டாவி விட்டாயா
வாயைப்பிளந்தது பிளந்ததுதான் - பார் என் காமிரா பதிவுகளை

தாயைப்பிரிந்து வந்து இங்கு சுற்றித்திரியும் குட்டி
விடுதிக்காப்பாளர் கம்பு கொண்டுன்னை அறைந்தார் என்றுதான்
மேலும் உன்னை திசை மாற்றி ஐந்தாறு தெருக்கள் தள்ளி
விட்டுத்திரும்புகிறேன் உடன் வராதே

சக்கரங்களில் சிக்கி நீ சாகாமல் வளர்ந்துவிட்டால்
குட்டி..
உன் அத்தனை பற்களும் பதிய என்னை கடி ஒரு நாள்.

1 comment:

  1. உன் அத்தனை பற்களும் பதிய என்னை கடி ஒரு நாள்.

    in the last line there is really a bite..

    ReplyDelete