25.5.12

தாக்கவெனகை கொள்ளுமளவு கற்கள்
தாக்கவென
ஒரு கல்லை மறு கையிலேந்தி
கண் சுருக்கி
குறி பார்த்து நிற்கும்
சிறுவனிடம்

ஒரேயொரு பாறை
ஓணானின் வசம்

நான்கு காலிலும்
பற்றித்தூக்கி
அவனை நோக்கி
எப்படி எறியப்போகிறதென்றுதான்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்.21.5.12

குமிழ்கள் அல்ல கிரகங்கள்:


 சூரியனிலிருந்து
8 ஒளி நிமிடத் தொலைவில்
பூமியில் சுற்றித் திரிகின்றன
சிறுவன்
சோப்பு நீரில் தோய்த்த
குழல் வழி சிருஷ்டிக்கும்
எண்ணிலடங்கா கிரகங்கள்

சொற்ப நிமிஷங்களே சஞ்சரித்து
பின்
உடைந்து சிதறும் அவற்றில்
வாழ்ந்து பார்ப்பதெனில்
முற்றாக உங்களை 
துண்டித்துக் கொள்வது உசிதம்,
வாழ்வது பற்றிய கற்பிதங்களிலிருந்து
வாழ்வாதாரங்கள் பற்றிய
குறுக்கு விசாரணைகளிலிருந்து.

- நன்றி: கல்கி (27.05.2012)

7.5.12

இலக்கங்களால் ஆனவன்


பொத்தானை அழுத்தி
எந்திரத்தின் வாயிலிருந்து
56 என்றச்சிட்ட அட்டையை
பிதுக்கியெடுத்தது முதல்
இலக்கங்களால் ஆனவனாகிறான் அவன்

காசாளனின் அழைப்புக்காய்
காத்திருக்கும் பொழுதில்
'நீங்கள்தான் ஐம்பத்தாறா' - கேட்டுவைத்துக்கொள்கிறான்
அருகே வீற்றிருக்கும் 57

55 என்று திரையில் ஒளிரும்
திருநாமத்தவனை
தன் வசீகரக்குரலால்
ஐந்து ஐந்து என்று இருமுறை விளித்து
பரிகாசம் செய்கிறாள்
முகங்காட்டாமல்
ஒலிப்பானுள் ஒளிந்துகொண்டிருக்குமொரு
எலெக்ட்ரானிக் யுவதி

பரிவர்த்தனையை முடித்துக்கொண்டு
சற்றைக்கெல்லாம்
வங்கியின் வாயில் வழி
வெளியேறுகிறான்
சட்டை நீக்கியோர்
சர்ப்பம் வெளியேறுவதைப்போல

இப்போதவனை அழைக்கலாம் நாம்
ஹல்லோ நிர்மல்...


4.5.12

உமிழ்நீர்சரித்துக்கொண்ட கொஞ்சம் உப்போடு
சரிவிகிதமாய்ச்சேர்க்கிறாள்
மிளகாய்த்துகள்களையும்

கொஞ்சமும் கொள்ளையாய்த்தெரிய
தன் குட்டியூண்டு உள்ளங்கையில் ஏந்தி
அதில்
தோய்த்தெடுத்துத்தின்கிறாள்
குவியல் சிறியதின் முதல் நெல்லிக்காயை

பிறகான அவளின்
முகக்கோணல்களைத்தொடர்ந்து
மேகங்கள் திரண்டு
உமிழ்நீர் சுரந்து வருகிறது
ஆகாசத்துக்கு.