20.9.13

ஜி.எஸ்.தயாளன் கவிதை

அழியும் ரப்பர்

 

இந்த ரப்பர் யார் தந்தது ஞாபகமிருக்காப்பா
எதையோ அழிக்கும் போது சஹானா கேட்டாள்
யோசித்து ‘இல்லை’ என்றேன்
ஆன்டனி மாமா தந்தது என்றாள்
பலத்த அதிர்வுடன் ஒரு மின்னல் கோடு கிழித்து மறைந்தது
நண்பன் ஆன்டனி இறந்து ஒராண்டு
இருபத்தைந்து ஆண்டுகள்
நினைவுகளைப் பின்னோக்குகிறது.

மரத்தை கொண்டிருக்கும் சிறு விதை போல்
எத்தனை பெரிய காலம்
ஒரு ரப்பரில்
ஒரு சொல்லில்

திரும்பவும் சஹானா அழிக்கிறாள்
எழுத்துக்களை
காலத்தை
ரப்பரை

- ஜி.எஸ்.தயாளன்
(சிலேட் - 2013 இதழில்)19.9.13

ராணிதிலக்-ன் கவிதை


எழுதிக்கொண்டிருந்தேன்

என்
இருக்கையில் அமர்ந்தபடி
எழுதிக்கொண்டிருந்தேன்
நான்கு
ஐந்து
வார்த்தைகளை
மனம்
வலை வீசிக்கொண்டிருக்க
வெளியே
ஆந்திமந்தாரை மரத்தின்
கீழே
முற்றத்தில்
நான்கு
ஐந்து
மலர்கள்
வீழ்ந்துகொண்டிருந்ததைப்
பார்த்துக்கொண்டு
இருந்தேன்.


17.9.13

காலத்தச்சனின் ஒரு கவிதை

கடவுளாதல்

விடுதி அறை எண் 16 ல்
வன்கலவி நடைபெறுகிறது
அறை எண் 17 ல் நீங்கள் 
தொலைக்காட்சிப் பெட்டியின்
ஒலி அளவை உயர்த்திக்கொள்கிறீர்கள்.

அந்த நெரிசல் பேருந்தில் 
அந்த பள்ளி சிறுமியிடம் 
அந்த வயோதிகர் 
அத்துமீறுகிறார்
உங்கள் நிறுத்தத்துக்கு முன்னமே 
இறங்கிக்கொள்கிறீர்கள்.

பார்க்கப்படாமால் கதறுகிறது 
ஏ+ ரத்தம் யாசிக்கும் குறுந்தகவல் 
புது மோஸ்தர் அலைபேசியில் 
புதிய நீலப் படங்களை 
சேமிக்கத் தெரியாமல் அல்லாடுகிறீர்கள்.

பெருநோய்  மூட்டை ஒன்று 
ஒன்றே கால் விரல்களுடன்
ஒரு கை ஏந்துகிறது
செருப்பில் பசை மிட்டாய் 
ஒட்டியதாக 
கள்ள லாவகத்துடன் 
நிலம் தேய்த்தபடியே கடந்து செல்கிறீர்கள் .

அண்டைத் தீவில் 
அழுகிய நரகலாய் வாழ்வு 
அவசரமாய் பக்கம் திருப்பி
சினிமா செய்திகளுக்குத் தாவுகிறீர்கள்.

இதில்  கவலைப்பட 
ஒன்றுமில்லை நண்பர்களே,
நீங்கள் தவணை முறையில் 
கடவுளாகிக்கொண்டிருக்கிறீர்கள் !

- காலத்தச்சன்

9.9.13

தேவதச்சன் கவிதைகள் இரண்டு1) பரிசு

என் கையில் இருந்த பரிசை
பிரிக்கவில்லை. பிரித்தால்
மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது
என் அருகில் இருந்தவன் அவசரமாய்
அவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்
மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்
பரிசு அளித்தவனோடு
விருந்துண்ண அமர்ந்தோம்
உணவுகள் நடுவே
கண்ணாடி டம்ளரில்
ஒரு சொட்டு
தண்ணீரில்
மூழ்கியிருந்தன
ஆயிரம் சொட்டுகள்


2) கல் எறிதல்

ஆளாளுக்கு கல் எடுத்து
எறிந்தனர். என் கையிலும்
ஒன்றைத் திணித்தனர்
உள்ளங்கையை விரித்து
மலைத்தொடர் வடிவத்தில்
இருந்த கல்லைப் பார்த்தேன்
உற்று நோக்கினேன்
உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். ஓசையற்று
மலைத்தொடர் மறைந்தது
வெறுங்கையை வேகமாக
வீசினேன்.
விடைபெறும் முகமாகவும்
என்னையும்
தூக்கிச் செல்லேன் என்று
இறைஞ்சும் விதமாகவும்.


4.9.13

பார்க்கலாம் நாம்
வர்ணங்களின் நெரிசலில்
சிக்கித்திணறுகின்றன
அலகும் கண்களும் கால்களும் குதமும்
கொஞ்சம் உயிரும்
வாய்க்கப்பெற்ற பஞ்சுகள்

கண்கள் திறக்கும் வேளை
காட்சிகள் மாறிப்போகும் இவற்றின்
கீச்..கீச்..
அலறலென பெருகுகிறது காற்றில்

இங்கேயே உண்டு
இங்கேயே கழித்து
இங்கேயே உழன்றிருப்பவைகள் போக
பெயர்ந்தவண்ணமிருக்கின்றன
குஞ்சுகள் சிலவும்

விரும்பிய நிறங்களைத்தேர்ந்து
அள்ளுகிற
பிஞ்சு விரல்கள் தவிர
வியாபாரி உட்பட
பற்றுவதில் பார்க்கலாம் நாம்
வல்லூறின் லாவகத்தை.