30.9.11

ஸ்னேகம்தினம் ஒருபிடி தானியம் எடுத்து
வாசலில் இறைப்பேன்,
வானத்திலிருந்து இறங்கி வந்து
கொத்தித்தின்று பசியாறி
பறந்து போகும் குருவிகள்.

தினம் வாசலில் வந்து இறையும்
ஒருபிடி தானியம் போலும்,
என் மனத்தின்
முல்லை மொக்கையொத்த
மென் அலகால்
வலிக்காமல் தம்மை
கொத்தித்தின்னவிட்டு
ரசனையின் பசியாற்றி
பறந்து போகும் குருவிகள்,
அவ்வளவுதான்!


27.9.11

அவனது வானம்அனுசரித்துக்கொள்ளலாமென்றுதான்
விரித்து தெருவிலிறங்குகிறான்

ஒளிர்ந்தபின் அணையாமல்
மின்னற்கிளைகள் வியாபித்திருக்கும்,
பின்னும்,
தலைக்கு மேலிருந்து
போலி அல்லது இரண்டாம் தர
மழை பொழியும் மேகம்
உறைந்திருக்கும்
கிழிசல் வானத்தை.

26.9.11

முன்பு


முன்பு
மரமிருந்த இடத்தில்
இப்போது அலைபேசி கோபுரம்

பழகிக்கொள்ளுகிறது
ஒரு பறவை
சன்னமாய் நீளும்
நிழலிலமர்ந்தும்
இளைப்பாறுதலை

23.9.11

பிளவுபடாதவன்சித்தம் பிறழ்ந்தவன் அவன்,

பிணி
மூப்பு
மரணம்
இவை எதன்பொருட்டும்
பிளவுபடாதவனாய்
சிரித்தபடி நகர்கிறான்
அந்த
நித்திய சித்தார்த்தன்


நன்றி : யாழிசை

தேகம்அரிவாளால்
சுற்றிவர சீவி
நடுவில்
அரையங்குல ஆரத்தில்
துவாரமிட்டு
குழல் செருகி
உறிஞ்சிப்பருகி
ஆனதும் தூக்கியெறியப்படும்
இளனீர்க்கூடன்றி வேறென்ன
இந்த தேகம் 


நன்றி : சௌந்தர சுகன்                    

20.9.11

கலசங்கள்டிங் டாங்கென்று
மோத விடுகிறார்கள்
ராட்சச வடிவ கோயில் மணியை,

கோபுரத்திலிருந்து பெயர்ந்து
சிதறுகின்றன சிறகடித்து
கொஞ்சம் கலசங்கள்.

19.9.11

பனித்துளி
பனித்துளி,
புல்லின் விரலில்
வெள்ளிக்கல் மோதிரம்
அணிவிக்கும்

இலைக்கண்ணில்
ஆனந்தக்கண்ணீர் பெருக்கும்

பூவிதழின் சருமத்தில்
முத்தாய் வியர்க்கும்

கொடியில்
கொஞ்ச தூரம் சறுக்கும்.

பனித்துளி,
வயிறு நிரம்ப
வெய்யிலைத்திண்ணும்

வயிறு முட்ட
வெய்யிலைக்குடிக்கும்

வெய்யிலையுடுத்தி மறையும்
பனித்துளி.

உன்னீரிதழ் சேர்ந்தது ஓர் அட்சய பாத்திரம்

சொற்பமே கைவசமிருப்பதாய்
நம்புபவள் போல்
தயங்கி
எட்ட நிற்கும் நீ
புரிதல் வேண்டும்

உன்னீரிதழ் சேர்ந்ததுதான்
ஓர் அட்சய பாத்திரம்
என்பதை
அள்ளக்குறையாதது
அது படைக்கும் முத்தம்
என்பதை.

17.9.11

ஆர்டிஸ்ட்உன் கைவிரல்கள் செய்யும்
சாட்டையின் சாகசங்களை,
நில்லாமல் சுழலும்
நிறம் குடித்த தூரிகைப்பம்பரம்.

எழுத்து,
பலகையிலுன் கைவண்ணமென்றால்
கூடுதலாய்ப்பூரிக்கும்

விளம்பரம்,
உன் ரசனையைப்பூசி
செய்துகொள்ளும் ஒப்பனையில்
அப்படி ஜொலிக்கும்

காட்சி மாறுகிறது ப்ரிய நண்பா..

ப்ரஷ், பெய்ண்ட், ஃபாண்ட், ப்ரிண்ட்
எல்லாவற்றையும்
இந்த எலெக்ட்ரானிக் பைசாசம்
பார்த்துக்கொள்ளும்

காலி குப்பிகளையும்
வரண்ட எழுது மயிர்க்குச்சிகளையும்
சுமந்துகொண்டு
சும்மா
நீ ஆர்டிஸ்ட் என்று
பிதற்றித்திரி பித்துப்பிடித்து
போதும்.

(முத்து-க்கு)
08.11


நீயாகவிருக்கவேண்டும் ஒரு ஸ்வெட்டர் என்பது
உனக்கு புரியவில்லையா

அணிந்துகொள்ளும் கணம்
நானாகிவிடுகிறது
பின்னலூசியில் நீயுன்
பிரியம் கோர்த்து நெய்தபோதும்
இந்த ஸ்வெட்டர்

இல்லையென்றாலும்,
ஒரு வரம்புக்கும் மேல்
இறுக்கி
தேகத்தை தழுவுவதில்லை
இந்த ஸ்வெட்டர்

எதிரில் இருந்து
கேசம் கோதுகிறேனென்று
தூய உஷ்ணம் துழாவும் விரல்கள்
இதற்கில்லை

சூடான மூச்சு ஊதி
கிறங்கடிக்கும் கூர் நாசி
இதற்கில்லவேயில்லை

கழுத்தோரம் விறகடுக்கி
தீ வளர்க்கும்
இதழ்கள் இல்லை

வெறுமே ஒரு ஸ்வெட்டர்
இதனிடம்
புகையில்லை
கங்குகளில்லை
நெருப்பின் சாயல் சிறிதுமேயில்லை

போ...
நீயாகவிருக்கும் ஒரு ஸ்வெட்டர்
பின்னிக்கொண்டு வா
அல்லது
உன்னையே கூட ஒரு ஸ்வெட்டராய்
பின்னிக்கொண்டு வா.

16.9.11

புறாவானவள்வெறும் கூடுதான் அதுவெனில்
உயிர்
அவளுக்குள்ளிருந்தது போல
அப்படி துடிதுடித்துப்போனாள்,
உடல் வேறு தலை வேறென
பீங்கான் புறா உடைந்ததன் பொருட்டு.

கொஞ்சமே ஃபெவி க்விக் பிதுக்கி
மருந்திட்டதில் புறாவும்
சொஸ்தமான நொடி
அவள் றெக்கை விரிக்கத்திமிறியதையும்
இந்தயிடத்தில் குறிப்பிட்டாகவேண்டும்

முள்ளுபிள்ளைங்க சிந்தும்
உப்பு மழைச்சாரலெல்லாம்
சலவைக்கல்லு
தரையில உறையும்

கேவல்களின் வாசம் கலந்து
கூடத்துல காத்தும் அலையும்
டவுனாஸ்பத்திரி புதுசுதான்
காய்ச்ச சளின்னு வந்தா
கஷாயம் குடிச்சு சரி பண்ணிக்கும்
சரசுவதி பாட்டிக்கு

விறகொடிக்க காடு நொழையவும்
கூட வர அடம்பண்ணும்
பேரன் கிடக்குறான் படுக்கையா

மணிக்கட்டு பக்கத்துல
மறைஞ்சுகிட்ட நரம்பு
பாதத்துக்கும் மேல புடிபட்டதுன்னு
குத்தி வச்சிருக்கா செவிலி,
அவ பாடையில போக..

தூசி பட்டாலே தாங்காது - பேரன் மேல
ஊசி செருக
பொத்துக்கிட்டது கிழவிக்குத்தான்.

புலம்பறா.. புலம்பறா..

முள்ளு தைக்குமின்னு
மாட்டிவிடும் செருப்பு ரெண்டு
கழட்டி கெடக்கு - பேரன்
கட்டிலுக்கு கீழ!