17.9.11

நீயாகவிருக்கவேண்டும் ஒரு ஸ்வெட்டர் என்பது




உனக்கு புரியவில்லையா

அணிந்துகொள்ளும் கணம்
நானாகிவிடுகிறது
பின்னலூசியில் நீயுன்
பிரியம் கோர்த்து நெய்தபோதும்
இந்த ஸ்வெட்டர்

இல்லையென்றாலும்,
ஒரு வரம்புக்கும் மேல்
இறுக்கி
தேகத்தை தழுவுவதில்லை
இந்த ஸ்வெட்டர்

எதிரில் இருந்து
கேசம் கோதுகிறேனென்று
தூய உஷ்ணம் துழாவும் விரல்கள்
இதற்கில்லை

சூடான மூச்சு ஊதி
கிறங்கடிக்கும் கூர் நாசி
இதற்கில்லவேயில்லை

கழுத்தோரம் விறகடுக்கி
தீ வளர்க்கும்
இதழ்கள் இல்லை

வெறுமே ஒரு ஸ்வெட்டர்
இதனிடம்
புகையில்லை
கங்குகளில்லை
நெருப்பின் சாயல் சிறிதுமேயில்லை

போ...
நீயாகவிருக்கும் ஒரு ஸ்வெட்டர்
பின்னிக்கொண்டு வா
அல்லது
உன்னையே கூட ஒரு ஸ்வெட்டராய்
பின்னிக்கொண்டு வா.

3 comments:

  1. கழுத்தோரம் விறகடுக்கி
    தீ வளர்க்கும்
    இதழ்கள் இல்லை

    வாவ். ஸ்வெட்டர் பின்னிக் கொண்டு வந்த கவிதையில் கதகதப்பு முழுமையாய்..

    ReplyDelete
  2. உங்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் வாசிக்கும்போதே-மிக முக்கிய வேலைகளின் நடுவிலும்-அசைத்துவிட்டுச் செல்லும்.

    அநேகமாய் நான் வாசித்துவிட்டிருக்கிறேன் எல்லாக் கவிதைகளையும் மொபைலில்.

    ஆனாலும் இந்தத் தமிழ் கொடுக்கும் போதையும் சுகமும் ஒப்பற்றது.

    உங்களின் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு அனுபவம்.

    சிலர் கவிதை எழுத முயல்கிறார்கள். சிலருக்குக் கவிதை இயல்பாயிருக்கிறது.கவிதைகள் உங்கள் மூலம் வெளிப்பட ஆசை கொள்கின்றன.

    பொருத்தமான படத்தேர்வும் உறுத்தாத வண்ணங்களும் என மிகவும் நேர்த்தி உங்கள் வலைப்பூ.

    உங்களின் விசிறியாக நான் மாறிவிட்டேன் தியாகு.நிறைய எழுதுங்கள்.

    ரிஷபன் என்னை முந்திக் கொண்டுவிட்டதில் ஓர் ஏமாற்றம்.

    இன்னொரு முறை நிதானமாக ஒவ்வொரு கவிதைக்கும் என் கிளர்வுகளை எழுதுவேன்.

    ReplyDelete
  3. என் அன்பும் நன்றியும் சுந்தர்ஜி sir..

    ReplyDelete