31.5.13

மழை1)
தூறல் கணங்களில்
நீர்த்தூவி - மழை,

சிலிர்க்கச் சிலிர்க்க

எதிர்கொள்ளும்

சிறு செடி அவள்.


2)
கூரைச் சரிவில்
வழியும் மழை பிடிக்க

உள்ளங்கை விரிக்கிறாள்

அகப்படுவது போல் இறங்கி

பின்னும்
குதித்து தப்பிக்கும்

கொஞ்சம் மழை.


3)
விரைந்து சார்த்திய
சன்னலின்

கண்ணாடியினூடே காண்கிறேன்

மழை

மோதி

கண்ணீராகிச் சரிவதை.


4)
குடைபிடித்து வருகிறாய்
மழை சூழ,

நீதான்

குளிரூட்டப்பட்ட கூண்டுக்

கிளி.


5)
ஜனுவின் கண்ணின்
வெண்திரை வானம்

விழி கார்மேகம்,

மின்னி இறங்கும் மழை,

இடியென்றாகும் என்

அதட்டலைத் தொடர்ந்து.


6)
மூர்க்கமாய் மோதி
தேகம் நோக

பொழியும் திட மழை,

தன்னோடு கரைக்கும்

மெல்ல

அந்நேரத்தின்

என் சினத்தை.


7)
தூறலிடுவதில் துவங்குகிறது
தன் தழுவலை

மழை

புள்ளிப் புள்ளியாய்

சிவந்து

நாணுகிறது நிலம்.

 

அணில் மனம்கிளைகள்
கிளைகளிலிருந்து

பிரிந்த கிளைகளெனப்
பரந்திருக்கும் எண்ணங்கள்
இறந்த
நிகழ்
எதிர் காலங்களில்
 

ஒரு நிமிடமும்
ஒரு காலத்தில் நின்றிடாத
இந்த மனம்

அணில்.

29.5.13

ஏழு கவிதைகள்

 
பத்து எறும்புகள்
அணிவகுக்க
ஒரு புழு,
இப்போது ஊர்வது
நூறு புழுக்கள் சேர்ந்ததொரு
சர்ப்பம்.


இறகொன்றின் முனை செலுத்தி
காது குடைய
பறவையொன்று திமிறி
சிறகடிக்கும் சத்தம். புறத்தே
விரிந்த மலர்,
நழுவி விழுகிறது
பீங்கான் கோப்பை
உதிர்கிறதொரு இதழ்.
 
தரை வீழ்ந்த
பழுத்த இலையென
விட்டதில்லை
நடுவில் விழி வரைந்து
கண் செய்து
காணத்தருவேன்
என் கலை மனதை. 
தொங்கு பாலம்
கடக்கத் திணறுகிறேன்
மனம் அசைகிறது. 

யு எழுத உதவுகிறேன்
நிஷித்க்கு
நிஷித் உதவுகிறான்
நான்
கொண்டை ஊசி வளைவொன்றை
கடக்க.

உச்சியிலிருக்கும்
நெளியும் சூரியன்
கீழிருந்து
சிறுகச் சிறுகக்
கரையும் பனிமலை
என் தேசத்தில்

உங்கள் ஊரில்
ஒற்றை வார்த்தை
இந்த
மெழுகுவர்த்தி.