31.10.13

யாவரும்.காம் - ல் என் கவிதைகள்படைப்பிலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லும் குறிப்பிடத்தகுந்த இணைய இதழ்களில் ஒன்றென என நான் கருதும் யாவரும்.காம் - ல் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. யாவரும்.காம் இணைய இதழ், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் குழுவிற்கு என் அன்பு நன்றிகள்.

இதழை பார்வையிடவும், உடன் என் கவிதைகளை வாசிக்கவும், கருத்துக்களை பகிரவும் நண்பர்கள் இந்த இணைப்பை சொடுக்கவும்

http://www.yaavarum.com/archives/145030.10.13

தகிக்கும் தார்ச்சாலையில்தகிக்கும் தார்ச்சாலையின்
தூரக்காட்சியில்
நெளிந்து நெளிந்து
மினுங்கும் நீர்

நெருங்கி நெருங்கி
ஜலீரென இசைத்துத்தெறிக்க
கடப்பேன் என் மோட்டார் சைக்கிளில்
என்றெண்ணினேனே

இவ்விடம் அடைந்திருக்கையில்
நீர் மறைந்து போகவே
நடந்தேறியது யாது

ஓஹ்..!
அருகாமை குடித்துவிட்டிருக்கிறது.


24.10.13

ஏழு கவிதைகள்


1)

நடுவே
விழியாயிருந்து மருளும்
விரிந்த இலைத்திரைமீதிலொரு
பனித்திவலை

சூரியனிடமிருந்து
நீண்டு வருகின்றன
கூர் நகங்கள்


2)

அலையோடு
பாதம் நனைத்தல் இல்லை
கரையோடு
சுவடு பதித்தல் இல்லை
சூம்பிப்போன கால்களுக்கு

கண்ணீர்த் தாரைகளில்
கன்னம் தொடும்
கடல்.

3)

செத்து மிதக்கும் மீனை
சல்லடை கொண்டு
அள்ளியெடுத்தேன்

திரும்பப்
பெற்றுக்கொள்கிறது தன்னை
நீர்.

4)

நிழலாடுகிறதென்று
எட்டிப்பார்த்தேன்

நீயில்லை
என்றானதன் நரகம்
நின்றிருந்தது வாசலில்.

5)

ரொட்டித்துண்டை விட்டெறிகிறேன்
தாவியோடி
அதைப்பற்றுகிறேன் பேர்வழி
என்றுகூட
விலகுவதில்லை
என் தனிமை எனும்
நாய்க்குட்டி.

6)

ஆதாமின் குமாரனிடமிருக்கிறது
கையளிக்கப்பட்டதொரு
குறுவாள்

தோலும்
சதையுமாயிருக்குமோர் ஆப்பிளை
அரிவதிலிருந்து அறியப்படலாம்
அதனுள்ளுமிருக்கும்
மறுக்கப்பட்ட நிர்வாணம்.

7)

துவண்டு
குப்பை மேட்டில் கிடந்ததை
முந்தியெடுத்து ஊதுகிறான்

ஆரம்பத்தில் ஆவேசமாய் விரைத்தது
அடுத்து
அவனுக்காகவும்
சற்றே விரிகிறது
அச் சேரிச் சிறுவன் வரையிலான
பலூன்.

16.10.13

கேட்நீயே முன்வந்து
சொல்வதானால்தான்
'கேட்'

இதென்ன சொல்லு...
என்றுன்னால் கேட்கப்பட்டு
நான் சொல்வேனெனில்
இல்லை டாடி, பூனை.


8.10.13

ஜாக் மற்றும் இரண்டு கவிதைகள்


 1)
 அதற்கும் முந்தைய நாள்
முந்தா நாள்
கழுத்துப்பட்டைக்கும்
சங்கிலிக்கும் பழக்கிய வரையிலும்
பொரை

நேற்று
குளிப்பாட்டி முடித்து
உண்ண
பெடிக்ரி வைத்திருந்தேன்

இன்றைக்கு
அறுந்த சங்கிலி காட்டிக்கிடக்கிறது
அது வெளியேறிய திசையை

இழுத்துப்பிடிக்க முயன்றதில்
ரத்தம் கசியுமட்டும்
சிராய்ப்பு கண்டிருக்கிறது
அதற்கு நான்
சூட்டியிருந்த பெயர் ஜாக்.

2)
எழுதப்படவில்லையெனினும்
இலைகளெல்லாம்தான்
விலைச் சீட்டு

நெல்லிக்காய்களிடம் வருவோம்,
தங்க ஜிமிக்கிகள்.

3)
பொத்தானை உசுப்பலில்
உயிர் பிடித்துக்கொள்ளும்
டார்ச் விளக்கை
சூரியனெனக் கொள்க

சுவரில் படிந்த
வட்டத்தை
சூரியனிடம் கடன் வாங்கி
ஒளிரும்
நிலவெனக் கொள்க.