30.8.12

இந்நன்னயம்


கழுவிக்கொள்வது
அல்லால்
நிலமாகிவிடுவதில்
நான் தேர்வது நிலமாகிவிடுவதை,
மேலும்
என்மீது
எச்சமிட்டு விலகும் பறவை
நாண இல்லை
இந்நன்னயம்.

21.8.12

தந்தைமை


ஒரு போழ்துன்
இதழ்களோடு உதடுகள் கலக்காது
முத்தஞ்செய்தல்

ஒரு போழ்துன்
காது மடல் நோகாது
மென் கடி கடித்தல்

ஒரு போழ்துன்
பூனை ரோமத்திடை
நாசி செலுத்தி இழைதல்

ஒரு போழ்துன்
சிறு கழுத்தில்
கன்னமுரசிக்களித்தல்

எதில் சேர்த்தி
இந்தக்கிறக்கம்,

என்னதான் கோருகிறது
இரண்டு வயது மகளே
உன்னிடமிருந்து
எனதிந்த தந்தைமை!