7.5.12

இலக்கங்களால் ஆனவன்


பொத்தானை அழுத்தி
எந்திரத்தின் வாயிலிருந்து
56 என்றச்சிட்ட அட்டையை
பிதுக்கியெடுத்தது முதல்
இலக்கங்களால் ஆனவனாகிறான் அவன்

காசாளனின் அழைப்புக்காய்
காத்திருக்கும் பொழுதில்
'நீங்கள்தான் ஐம்பத்தாறா' - கேட்டுவைத்துக்கொள்கிறான்
அருகே வீற்றிருக்கும் 57

55 என்று திரையில் ஒளிரும்
திருநாமத்தவனை
தன் வசீகரக்குரலால்
ஐந்து ஐந்து என்று இருமுறை விளித்து
பரிகாசம் செய்கிறாள்
முகங்காட்டாமல்
ஒலிப்பானுள் ஒளிந்துகொண்டிருக்குமொரு
எலெக்ட்ரானிக் யுவதி

பரிவர்த்தனையை முடித்துக்கொண்டு
சற்றைக்கெல்லாம்
வங்கியின் வாயில் வழி
வெளியேறுகிறான்
சட்டை நீக்கியோர்
சர்ப்பம் வெளியேறுவதைப்போல

இப்போதவனை அழைக்கலாம் நாம்
ஹல்லோ நிர்மல்...


No comments:

Post a Comment