10.4.12

நிறை குடங்கள்


ருந்துகளைப் போலான தேன்சிட்டுகள்’ என்னும் பன்.இறை அவர்களின் முதல் கவிதை தொகுப்பைக்குறித்த ஒரு அறிமுகத்தை தன் வலைப்பூவில் தந்திருந்தார் சுந்தர்ஜி. பன்.இறையை அறிமுகத்தில் வாசித்தபோதே அவரின் தொகுப்பையும் உடன் வாசித்துவிட எழுந்த ஆவல் என்னை பரபரவென்று வைத்திருந்தது.

கோவையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடக்கும் ‘ஊஞ்சல்’ மாதாந்திர இலக்கியக்கூட்டத்தில் ‘பருந்துகளைப் போலான தேன்சிட்டுகள்’ தொகுப்பைப்பற்றிய இரண்டாம் அறிமுகத்தை (என்வரையில்) நண்பர் இளஞ்சேரல் நிகழ்த்திய அன்றுதான் தொகுப்பு கையில் கிடைக்கப்பெற்றேன்.

அத்தனை அற்புதமான அந்த தொகுப்பை வாசித்துக்கொண்டிருக்கும்போதே பன்.இறையோடு தொடர்புகொண்டு பேசியதற்குப்பிறகான என் மனநிலையைத்தான் நான் சொல்ல வருவது,

எழுதத்தொடங்கி சுமார் 15 வருட கால இடைவெளிக்குப்பிறகு இந்த முதல் தொகுப்புவெளிவந்திருக்கும் செய்தியை சொல்லி புருவமுயர்த்த வைத்தார் பன்.இறை.       சுந்தர்ஜியும் அவருக்கு சளைத்தவரில்லை என்பதுபோல வாசிப்பை மட்டும் வைத்துக்கொண்டு, எழுத 20 வருட கால இடைவெளியை எடுத்துக்கொண்டவர் என்பதுதான் இங்கே மற்றொரு சுவாரசியமான விஷயம். (அவரின் கவிதைத்தொகுப்பையும் எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன்).

யோசித்துப்பார்க்கிறேன், எத்தனை நிதானம்!
இப்போது நினைத்தால் என்னைக்குறித்தே எனக்கு வெட்கமாயிருக்கிறது. இது என்னைக்குறித்தே எழும் உணர்வு ஆகையால் எழுதத்தொடங்கி தீவிரமாய் இயங்கி வரும் நண்பர்கள் யாரும் தம்மை காயப்படுத்தியதாய்க்கருதவேண்டாம்.

தேடல்கள் இல்லை, அதிகம் வாசிப்பதில்லை, படைப்பாளிகளுடன் அவர்களின் பிரதிகள் குறித்த கலந்துரையாடல்கள், விவாதங்கள் எடுத்துக்கொள்வதில்லை, புரிதல்களை தொடர்புடையவர்களிடம் வெளிப்படுத்த அச்சம் / தயக்கம் / கூச்சம், எழுத எடுத்துக்கொள்ளும் பொருள்களின் மீது தெளிவின்மை, குறுக்குவிசாரித்தறியாமை, இத்தனை கொடிய நோய்க்கு நான் ஆட்பட்டிருந்தும், எழுத்துலகில் நான் ‘நம்புய்யா.. நானும் ரவுடி!’ என்கிற மாதிரி பாவலா காண்பிப்பதாகவே படுகிறது எனக்கு.
இந்த நிமிடம், இன்றுமுதலாவது வாசிப்பையும் தேடலையும் நேர்மையாய் மேற்கொள்ளவேண்டும், பெருக்கிக்கொள்ளவேண்டும் என்றே தோன்றுகிறது.

கற்களிடுவதன் பிரயத்தனமின்றி, பன்.இறை எனும் நிறைகுடத்தில் இந்தக்காகம் குடித்த தண்ணீரின் ஒரு மிடறு இது:

அமைதி:

இயல்பாய் எல்லாமே
போய்க்கொண்டிருக்கிறது

அதிர்ச்சியான தொலைபேசி அழைப்புகளில்லை
குழந்தைகள் எதையும் உயரத்திலிருந்து
தன்மீது இழுத்துக்கொள்ளவில்லை
திரும்பத் திரும்ப காட்டப்படும்
பேரழிவுக் காட்சிகள் இல்லை
தலையில் அடித்துக்கொண்டு
தெருவில் யாரும் ஓடவில்லை
எல்லாம் அமைதியாக சரியாக
போய்க்கொண்டிருக்கிறது
தன் பாதையில்
அமைதி எவ்வளவு மெதுவாக சாதுர்யமாக செல்கிறது
இதுதான் பயங்கரமானது.

-‘பருந்துகளைப் போலான தேன்சிட்டுகள்’
  பக்கம்-32


1 comment:

  1. உங்களின் நேர்மையான இடுகை என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை. மாறாக உங்கள் மேல் நான் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் மதிப்பையும் அதிகப்படுத்தியது.

    நிசப்தத்துக்கு மிக அருகாமையிலும் அகந்தைக்கு வெகு தொலைவிலும் நின்று கொண்டு பேசும் எந்தக் கவிதையையும் -அது உங்களதோ பன்.இறையுடையதோ இன்று எழுதத் துவங்கியிருக்கும் வேறு யாருடையதோ ஆயினும்- சந்திக்க நேரும்போது என் எழுத்துக்களைக் குறித்தும் அதன் நேர்த்தி குறித்துமான கூச்சத்தை ஏற்படுத்துகிறது. அந்தக் கூச்சம் ஒன்றுதான் நம்மை நாமே சரி செய்துகொள்ள உதவும் அளவுகோல் என நான் நம்புகிறேன்.

    அந்த அளவுகோல் என்னிடம் இருக்கிறது. உங்களிடமும் இருக்கிறதென்று அறியும்போது இயல்பாகவே மகிழ்ச்சியாயிருக்கிறது.

    வாழ்த்துக்கள் தியாகு.

    ReplyDelete