9.7.14

கவிதைகள் அடங்கா இன்பம் தரக்கூடுமா? - ச.முத்துவேல்

  .தியாகுவின் கவிதைத் தொகுப்புக்கு என் மதிப்புரையை எழுதியிருந்தபோது, பெரும்பாலான கவிதைகள் முதல் வாசிப்பில் தரும் அதிர்வுகளை அடுத்தடுத்த வாசிப்பில் தருவதில்லை என்பதை ஒரு குறையாகக் குறிப்பிட்டிருந்தேன். ஜான் சுந்தரின் தொகுப்புக்கும் இதே கருத்தையே சொல்லியிருந்தேன். ‘ கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும்வரைஎன்ற வைரமுத்துவின் பாடல்வரியை நான் துணைக்கெடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால், ஜான் சுந்தர் கவிதைகளுக்கும், தியாகு கவிதைகளுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருப்பதாகவும் உணர்கிறேன்அடுத்தடுத்த வாசிப்பில் பழைய ருசி இருப்பதில்லை என்பதை இருவரின் கவிதைகளுக்கும் பொதுவாகவே வைக்கும்போது, அப்படியானால் இருவரின் கவிதைகளுக்குள்ளும் இருக்கும் உள்வித்தியாசத்தை   அது காட்டவில்லை.


மேலும் இன்னொரு கேள்வியிருந்தது. இந்த மங்கிப்போகும் தன்மை எல்லா படைப்பு/கவிதைகளுக்குமே பொதுவானதுதானா? விடை ஆம் எனில், தேவையில்லாமல், ஒவ்வொருவரின் தலையிலும் குறைசுமத்துகிறேனா என்பதே அக்கேள்வி. ஆனால், கவிதைகளுக்கு மங்கும் தன்மை பொதுவானது இல்லை என்று என் மனம் திடமாகச் சொன்னது. ஏன் எப்படி என்று தொடர்ந்தேன். எனக்கு எப்போதுமே பிடிக்கிற கவிதையொன்றை துணைகொண்டு தேடினால் சரியாகவரும் என்றெண்ணி, சட்டென்று எனக்கு   நினைவுக்கு வந்த

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர  நெல் உயரும்
நெல் உயர குடி உயரும் குடி உயர கோல் உயரும்
கோல் உயர கோன் உயர்வான்

என்ற கவிதையை எடுத்துக்கொண்டேன்.
இவ்வளவு எளிய கவிதை  ஏன் எப்போதுமே புத்துணர்ச்சியோடு, அலுக்காத வகையில் இருக்கிறது? நான் கண்ட விடை இதுதான். ’கவிதையின் ‘’முடிவிலா சாத்தியங்கள்’’. இந்தக் கவிதை பலப்பல சூழல்களுக்கும் பொருந்திப்போகக்கூடிய எண்ணிறந்த பரிமாணங்களைக் கொண்டிருப்பதே.
’வெள்ளத்தனைய மலர் நீட்டம்’ என்ற வரி அடுத்து நினைவுக்கு வந்தது.அதற்கும் இந்த முடிவிலா பரிமாணம் இருக்கிறது. எனவே, அவை முடிவிலா இன்பம் தருகின்றன.

இப்போது நண்பர்களின் சில கவிதைகளுக்கு வருவோம். அவை ஒற்றைப்பரிமாணத்தையோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆனால் சொற்ப எண்ணிக்கையிலான சாத்தியங்களையோ கொண்டு முடிந்து போகுதல்தான் என்ற முடிவுக்கு வந்தேன்.

அடுத்து, இந்த மங்கிப்போகும் தன்மையில் ஒற்றுமையிருந்தாலும், வித்தியாசம் என்று சொன்னேனே? அது என்ன என்று யோசித்தபோது , கண்டது இது:
தியாகுவின் கவிதைகளில் காணப்படும் படைப்பூக்கத்தின் (creativity),  உயரமும்
மொழியின் ருசியும்  ஜான் சுந்தரின்  கவிதைகளைவிட  மேலோங்கியிருப்பதுதான்.

இப்போது வைரமுத்துவின்கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும்வரைஎன்ற வரிக்கு வருகிறேன்.  ’நேற்று இல்லாத மாற்றம்பாடலில் இடம் பெறும் மற்ற வரிகளோடு அர்த்தங்காணாமல், தனித்த வரியாகப் பார்த்தால் வைரமுத்துவின் வரியும் சரியாகத்தானிருக்கிறது.


No comments:

Post a Comment