21.11.11

காகிதக்கப்பல்






மழை விட்டதறிந்து
சன்னல்களூடே சந்தித்துக்கொள்கிற
எதிரெதிர் வீட்டுச்சுட்டிப்பயல்களின்
கண்களில் நிலைத்துவிட்டது
மின்னலின் ஒளி

ஆர்ப்பரித்துத்தெருவுக்கு வரும்
அவர்தம் கைகளில் தவழ்கின்றன
நூற்றுக்கணக்கில் கப்பல்களை
தம்முள் பதுக்கி வைத்திருக்கும்
எழுதித்தீர்ந்த நோட்டுப்புத்தகங்கள்

பிஞ்சு விரல்களால் தாள்கள்
கிழிபடுவதிலிருந்து துவங்குகிறது
காகிதம் தவிர
உதிரி பாகங்கள் எவையுமின்றி
கப்பல்கள் கட்டும் பணி

ஆயிற்று..
மழை நீரின் ஓட்டத்தில்
மெல்ல உந்தப்பட்டு நகர்கிறது
மாலுமியொருவன் செலுத்துவதன்
நிர்பந்தங்களேதுமற்ற கப்பல்களில்
முதல் கப்பல்

மேலும் நகர்கிறது,

சிறுவர்களின் பார்வையிலிருந்து
மறையும்வரை பயணப்பட்டு
ஈரலித்தலினிமித்தம்
அவிழ்தலில்
மழை நீருடன் தன்னை
காகிதமாகவே
சமரசம் செய்துகொள்வதை நோக்கி.


- நன்றி, சொல்வனம் இணைய (12.11.2011) இதழ்



1 comment:

  1. நூற்றுக்கணக்கில் கப்பல்களை
    தம்முள் பதுக்கி வைத்திருக்கும்
    எழுதித்தீர்ந்த நோட்டுப்புத்தகங்கள்

    அப்படியே சின்ன வயசு.. நோட்டு புத்தகம் மழை நீர் என்று சாரல் அடித்துப் போன கவிதை

    ReplyDelete