7.11.12

நாமும் நவீன யுகமும்
அன்பு நண்ப..! - என்று
நட்பு நாடவும்
பயனர் பெயரோடு
கடவுச்சொல்லும்
அனுமதிக்கும் காலம்

கள்ளச்சாவிகளும்தான்
என்ன செய்யும் -
மனனத்திலிருக்கும்
ரகசியக்குறியீட்டு
எண் போதும்

கை ரேகையை இனங்கண்டு
கதவு திறந்து வழி விடும் -
வேறென்னதான் வேண்டும்
கண்காணிப்பு

குரலின் தன்மையறிந்து
ஏற்றுக்கொண்டால் அதுதான்
ஆகச்சிறந்த பாதுகாப்பு

ரோபோக்களை
மனிதன் வடித்தல் போய்
மனிதனே ரோபோவாகி வருவதல்லவா
முரண் நகை

சகலமும் வரவு
சாட்டிலைட்டில்
என்பது போய்
ரகசியக்காமிராக்களில் நம்
அந்தரங்கங்களின் கதை

பொத்தானில் இயங்கும் உலகம்
இதற்கு
பசியும் தாகமும் ஒரு பொருட்டா

சக்தியேற்றிக்கொண்டால்
சரியாய் போகும்
என்றே நினைக்கும்
கொஞ்சம் பகட்டாய்

காற்றின் அறைதலையொத்து
சற்றேனும் பிசகினாலும்
சரிந்துபடும் சீட்டுக்கட்டு கோபுரம்
நவீன யுகம்

இயற்கையின் காருண்யம் ஒதுக்கி
செயற்கையின் பின்
ஓடுகிறோமே
நிஜத்தில் இதுதான் நரகம்!


(04.11.12 அன்று கோவையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் சார்பில், நண்பர் இளஞ்சேரல் தலைமையில் நிகழ்ந்த கவியரங்கத்தில் வாசிக்கப்பட்டது)


3 comments:

 1. //
  காற்றின் அறைதலையொத்து
  சற்றேனும் பிசகினாலும்
  சரிந்துபடும் சீட்டுக்கட்டு கோபுரம்
  நவீன யுகம்
  // நிதர்சனம் உங்கள் நடை சிறப்பு எதார்த்தத்தின் எல்லையில் சிறகு விரிக்கும் உங்கள் எழுத்தோடு நானும் பறக்கிறேன் ......உண்மையில் அந்தரங்கம் என்பது பொது வெளியாகிபோனது நவீன யுகத்தில் சிறப்பாக சொல்லும் உங்கள் கவிதைக்கு என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ஆம்.... இதுதான், உண்மையான நரகம்...

  கவிதை, அருமை...

  ReplyDelete
 3. வணக்கம்,
  பா,தியாகு(அண்ணா)

  24,11,2012இன்று உங்களின் கவிதை வலைச்சரம் கதம்பத்தில் அறிமுகமாகியுள்ளது கவிதை அருமை வாழ்த்துக்கள்
  http://blogintamil.blogspot.com

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete