25.11.12

சேராக்காதலில் சேர வந்தவன்

                                                                                                                                                                                                                    
சேராக்காதலில் சேர வந்தவன் - தொகுப்பு புனைகதைகள் என்றொரு உப தலைப்போடு தரப்பட்டிருக்கும் சிறுகதைத்தொகுப்பு. புனைகதைகளில் நடப்பியல் சார்ந்த புனைகதைகள், நடப்பியல் சாராத புனைகதைகள், அரைப் புனைகதைகள் வகைமைகளில், நடப்பியல் சாராத புனைகதைகளாக நண்பர் ஆத்மார்த்தியால் எழுதப்பட்டிருக்கின்றன இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் அனேக்கதைகள்.

நான் ஒரு பொய்க்காரன். எப்போதும் எனக்கு பொய்களின்மீது நாட்டமிருந்தது. பொய்களற்ற வாழ்க்கையை நான் வாழ விரும்புவதே இல்லை. அதீத ஆழங்களிலும் சதா அலைந்துகொண்டே இருந்த பல தனிமைகளை நான் கடந்துயிர்க்க என் பொய்கள் என்னை கைவிடாத தேவன். என் பொய்களுக்கு நானும் எனக்கு அவைகளுமாக மாறாக்காதலும் மறைவுயிர் விஸ்வாசமுமாக கழிந்த பெருங்காலத்தின் ஒழுங்கற்ற மீள்தல் கணங்கள் எனக்குள்ளிருந்து கதைச்சர்ப்பங்களாக விரிந்து கிளம்பின -  என்பதாக முன்னுரையில் குறிப்பிட்டிருக்கும் ஆத்மார்த்தி, பொய்களை சரியாய் கையாள்வதன் மூலம் பொய்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கும் பேணிச்செல்கிறார் என்றே சொல்லத்தோன்றுகிறது.

இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதைகள் மொத்தம் பத்தில், கண்களின் நடனம், ஷரீமா, சேராக்காதலில் சேர வந்தவன், துவாரகா முதலானவை முன்பே நான் சிற்றிதழ்களில் வாசித்தறிந்தவை என்றபோதும், கதைகளின் கட்டமைவு, நுட்பங்கள், உத்திகளை அப்போதைய வாசிப்பில் முழுக்கவும் கண்டடையாமல் விட்டதை இந்த மறுவாசிப்பின்போது தெளிகிறேன்.

அவற்றில் முக்கிய அம்சமாக, ஆத்மார்த்தி என்னும் கதாசிரியர் தனது கதாபாத்திரங்களின் பெயர்களை தேர்ந்தெடுப்பதிலிருந்து மற்ற கதாசிரியர்களிடமிருந்து முற்றிலும் வேறுபடுகிறார் என்பது இவரின் ஒவ்வொரு கதை மாந்தர்களையும் பெயர்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளும்போது புலனாகிறது.

உதாரணமாக, ஒற்றை தேவதை கதையில் வரும் முதல்’, ’சேராக்காதலில் சேர வந்தவன்கதையில் வரும் மேகன், யமி. கண்ணாடிப் புத்தகம்கதையில் வரும் யாமா, நன்னிலா, சித்தாந்தன். கடவுள் சிறைகதையில் வரும் கனா. கண்களின் நடனம்கதையில் வரும் அதிதி, விண்மி, ஆகிருதி போன்ற பெயர்களை சுட்ட முடிகிறது.

கண்களின் நடனம் கதையில், அதிதி என்பவளின் தனிமை நினைவுகளின் பிரிண்ட் அவுட் கிடைக்கப்பெறுவது, அழுவதற்கான கண்ணீர்த் துளிகள் இருப்பில் / கணக்கில் இல்லாதபோது தன் தோழி விண்மியிடம் கடனாய் பெறுவது, ஆகிருதி என்பவள் தனது இருநூற்றைம்பதாவது பிறந்த நாளை கொண்டாடுவது இப்படியாக சாத்தியமற்ற சாத்தியங்களை அனாயாசமாக உருவாக்க ஆத்மார்த்தியால் முடிந்திருக்கிறது.

சேராக்காதலில் சேர வந்தவன் கதையில் இவர் கற்பனையாக உருவாக்கும் மழை நகரம், சாரல் கோவில் போன்றவை நம்மை நம் சொந்த நிலத்திலிருந்து துண்டித்து வேற்று கிரகத்தில் உலவும் அனுபவத்திற்கு இட்டுச்செல்கின்றன.

மனசுத் தொலைபேசியை அணைத்து வைத்துவிடாதே என்று மேகன் யஷ்வந்தியிடம் கேட்டுக்கொள்வதாகட்டும், என்னை உனக்கு தெரியாது, ஆனால் உன்னை எனக்கு தெரியும். உன் வருங்காலத்திலிருந்தே உன்னை பின்தொடர்ந்து வருகிறேன்என்று யமி யஷ்வந்தியிடம் மொழிவதாகட்டும், புனைவின் அதிகபட்சமாகயிருந்து இவற்றை இன்னமும் இன்னமும் என்று அனுபவித்துவிட்டே வாசிப்பவர் நகர வழிவிடுகின்றன. காற்றுக் கேமரா, காதுகளின் பதிவுச் செதில்கள், அந்தர கட்டிடக்கலை, யஷ்வந்தியின் 38-ம் வகை குரல் முதலானவையும் எண்ணிப்பார்க்கவே பரவசம் கொள்ள வைக்கின்றன.

தொகுப்பின் இரண்டாவது கதையாக வரும் கதை ஷரீமா, மற்ற கதைகளிலிருந்து வேறுபடுவது. சொல்வதெனில் புனைவு இன்றி யதார்த்தத்தில் எழுதப்பட்டிருக்கும் கதை. அடைக்காத கடன் பொருட்டு பறிமுதல் செய்யப்பட்ட தன் மோட்டார் சைக்கிளை மீட்க வேண்டி, வேறெங்கும் பணம் கிடைகாத நிலையில், வேறு வழியின்றி தம்பியானவன் திருநங்கையாய்ப்போன தன் சகோதரனை நாடிச்செல்லும் கதை.

இறுதி வரை கதையை காட்சி விவரிப்புக்களாக நகர்த்தி, முடிவில் தொலைபேசி உரையாடலில் என் உடம்பை விட்டு ஓடத்தான் நான் முயற்ச்சி பண்ணினேன். குடும்பம் மொத்தமும் சேர்ந்து அடிச்சு தொரத்திட்டீங்க, இன்னிக்கு என்னை மாதிரியே ஒரு கூட்டத்துக்குள்ளே நிம்மதியா வாழ்ந்துட்டிருக்கேன். உனக்கு என்னை அக்கான்னு கூப்பிட மனசில்லைன்னா கூட நீ என் தம்பிங்குறது மாறாதுடா.. பணத்துக்காகத்தான் வந்தேன்னாலும், அதுக்காகவாச்சும் வந்தியேன்னு இருந்துச்சுடா.. என்று பெருங்கேவலோடு அழத்துவங்கிய சந்திராவை மறுமுனையில் யார் யாரோ சமாதானப்படுத்துவது தெரிந்தது – இப்படி சந்திராவின் குரல் வழி நம்மை உருகவும் குறுகவும் வைத்துவிடுகிறது ஷரீமா என்கிற உன்னதமான கதை.

அடுத்த கதை துவாரகா. செக்ஸ் மேனியாக், கணவனுடன் சில நாள் மட்டும் வாழ்ந்தவள், ஆண்களை அடிமையாக்கி விடுபவள்,  என்றெல்லாம் அனைவராலும் தூற்றப்பட்ட போதும் துவாரகாவோடு நெருங்கிப்பழகும் நாயகன் பற்றிய கதை. கனவில் ஒலிக்கும் குரல் நிமித்தம் துவாரகாவை சந்தேகிக்கவும் அவளோடு அவன் முரண் படவும், துவாரகா அவனைப் பிரிகிறாள். துவாரகா அவனுக்கு பரிசளித்த பொம்மைகளை வைத்துக்கொண்டு அது தொடர்பான நினைவுகளை தன் கனவோடு இணைப்பதன் மூலம் துவாரகாவை கனவுக்குள் கொண்டுவருவதில் மகிழ்ந்திருக்கிறான். கதையின் இறுதியில் பொம்மைகள் உயிர் பெற்று அவனை கொல்ல வருவதோடு நிறைவு பெறுகிறது அமானுஷ்யங்கள் நிறைந்த இந்த கதை.

ஊழிக்காலமொன்றில் கொள்ளை நோயும், போரும் பூசலுமாக முடிவுக்கு வந்துவிட்ட உலகில் எஞ்சிய வாத்தியக்காரனொருவன், பெண்ணொருத்தி தான் சாகுந்தருவாயில் அவனிடத்தில் சேர்க்கும் குழல் கருவி, ஒரு மர நாய், ஒரு செந்நிற நாய். இவர்கள்தான் வாத்தியக்காரன் கதை பாத்திரங்கள். கதையில் வரும் வாத்தியக்காரனும், மர நாயும் போர் ஓய்ந்த நிலத்தை கடந்து வருகையில் மர நாய் செந்நிற நாயை கண்டுகொண்டு கூடித்திரும்புகிறது. பயணத்தின் விளிம்பில் வாத்தியக்காரனும் தனக்கான இணையை கண்டடைவதை ஊழியை முடிவுக்கு கொண்டுவருவதன் குறியீடாக்கி கதையை முடிக்கிறார்.

கதாசிரியரை கண்டுகொள்வதற்கான தடயம் போல இத்தொகுப்பின் அனேக கதைகளில் மழை இடம் பிடித்திருப்பதை பார்க்க முடிகிறது. ஆத்மார்த்தி, கவிஞனாகவும் தானிருப்பதற்கு சாட்சியமாக கருப்பு வெள்ளை நகரம்கதையில் மழை ஓய்ந்த பின்னான காட்சியை – தரையில் ஆங்காங்கே தேங்கி நின்ற நீர், வரையத்தெரியாத குழந்தைகள் இட்ட ஒழுங்கற்ற வட்டங்களாய் வீதியெங்கும் இறைந்து கிடந்தனஎன்று அழகாக எழுதிச்செல்கிறார்.

கருப்பு வெள்ளை நகரம் கதையில், மனித மனங்களை பழுது பார்க்கும் கடை, குழந்தைகளுக்கு வண்ணம் மாற்றும் கடை, தர்ஷவர்ஷிணி கதவை திறக்கும் முகமாக சிறிய சதுரத்திரையில் தன் உள்நாக்கை நீட்டித் தொடுதல். ஒற்றை தேவதையில் 3098-ம் ஆண்டின் உலகம், அன்பும் காதலும் அரும்வார்த்தையகத்தில் வைத்து பேணப்படல். இரண்டு கனவு மூன்று காதல் கதையில் சர்வசகியும் செந்திலகனும் வயலட் நகரத்திலிருந்து செம்பழுப்பு நகரத்துக்கு இடம் பெயர்தல் முதலான புனைவுகளை தர்க்க ரீதியாக கதைகளோடு ஒன்றிப்போகச்செய்திருப்பது ஆசிரியரின் வெற்றியென்றே ஆகிறது.

கோவில்களில் கட்டணம் வசூலித்து சிறப்பு தரிசனத்துக்கு வழிவிடும் இன்றைய முறையை, கொஞ்சம் ஹைடெக் சமாச்சாரங்களை கலந்து, ஹைடெக் கோவிலின் 5-ம் மாடியில், சரக்கு அறையில் கிடத்தப்பட்டிருக்கும் மிகப்பழமை வாய்ந்த கடவுள் சிலையை, நாயகன் லஞ்சம் கொடுத்தே பார்த்துவிட்டு திரும்புகிறான் என்பதாக முடிக்கப்படும் கடவுள் சிறை கதையை நான் அவதானித்த வரையில் தொகுப்பின் மற்ற கதைகளின் தீவிரத் தன்மையிலிருந்து விலகி நிற்பதாகவே படுகிறது.

மற்றபடி ஆத்மார்த்தி என்கிற கதாசிரியர் தனக்கான ஒரு படைப்பு மொழியை, கதை சொல்லலில் மாறுபட்ட பாணியொன்றை கைக்கொண்டிருக்கிறார் என்பதை வாசிப்பனுபவமாக பெறமுடிகிறது.

OOOOOOOO

சேராக்காதலில் சேர வந்தவன்  (புனைகதைகள்)
ஆத்மார்த்தி

ஆழி பப்ளிஷர்ஸ் வெளியீடு.

3 comments:

 1. நல்ல கதைகளை எல்லோரும் வாசித்தல் அவசியம்
  இது போன்ற நல்ல நூல்களை எல்லோரும் வாசிக்க அண்ணனின்
  விமர்சன உரை நேர்த்தி

  ReplyDelete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_30.html) சென்று பார்க்கவும்...

  நன்றி...

  ReplyDelete