24.2.13

சின்னச் சின்ன சிதறல்கள் - அகிலாவின் கவிதைத் தொகுப்பை முன்வைத்து:சங்க காலம் தொட்டு இன்று வரை இலக்கிய வகைகளில் கவிதைகள் எழுதத் தலைப்பட்டு பெண்கள் ஆண்களுக்கு சற்றும் சளைத்திடாதவர்களாய் இயங்கி வருவது மகிழ்ச்சியளிப்பதாயிருக்கிறது.

பெண் கவிஞர்களின் காலத்தை ஔவையார், ஆண்டாள், காரைக்கால் அம்மையார் என சங்க கால கவிஞர்களிலிருந்து கணக்கில் எடுத்துக்கொள்வதை விட்டு இருபத்தியோராம் நூற்றாண்டு பெண் கவிஞர்களிலிருந்து பின்னோக்கிச் செல்லலாம் போல இன்றைய பெண் கவிஞர்கள் பங்களிக்கும் கவிதை இலக்கியம் அதி தீவிரமடைந்திருக்கிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கவனப்படுத்துதல், பெண்ணுரிமை, பெண் விடுதலைக்கு துணை புரிதல் போல என்னதான் ஆண் வர்க்கமானது எழுதுவதும் பேசுவதுமாக இருந்தாலும், பெண்ணினத்தின் பாடுகளை பெண்களே முன்வைக்கும்போதுதான் அவை கூடுதல் கவனத்தை பெறுபவையாகின்றன என்பதே நிதர்சனம்.

இதற்கு உதாரணமாக நர்மதாவின்,

பாரதி
விடுதலையைப் பாட
நாங்கள்
குனிந்து கும்மியடிக்க
வேண்டுமா?

- என்னும் கோபம் கொப்பளிக்கும் ஒரு கவிதையை சுட்ட இயலும். பெண் விடுதலையை மையப்படுத்தி கவிதை செய்தது பாரதியேயானாலும் அதிலும் இழையோடும் ஆணாதிக்கத்தை இத்தகைய பெண் கவி மனங்களே பிரித்தெடுத்து அடையாளம் காட்டுகின்றன. அதேநேரம் பெண் கவிமனம் பெண்ணுக்கேயான, பெண்ணுக்குள்ளிருக்கும் ஆசைகள், நிராசைகள், கனவுகள், காயங்கள், கோபங்களை கவிதைகளாய் பெயர்ப்பதில் தனித்துவம் வாய்ந்ததாக திகழவே செய்கிறது.

அப்படித்தான் அகிலாவின் சின்னச் சின்ன சிதறல்கள் தொகுப்பில் எனக்குஎன்ற தலைப்பில் வரும் ஒரு கவிதையின் வரிகள்,

ஆலிங்கனங்களை
ஏற்கவும் மறுக்கவும்
எனக்கு அனுமதிகள் உண்டு

- என்று ஆணின் சர்வாதிகாரம் துணுக்குற சாட்டை சொடுக்கி வைக்கிறது.

பதின் பருவத்து விளையாட்டு ஒன்றை வாழ்க்கையின் இயல்போடு இணைத்துப் பார்க்கும் ‘கண்ணாமூச்சி விளையாட்டுகவிதை இத்தொகுப்பின் ஆகச்சிறந்த கவிதையென சொல்லத் தோன்றுகிறது.

கண்ணைக் கட்டி சுற்றிவிடப்பட்டு
நிமிட நேரம் நின்று நிதானித்து
பின் தேட
கைகளை நீட்டும்போது
தொடும் இடமெல்லாம் காற்றாய்
தோழிகள் எங்கேயென்று மனம் தேடும்

சிரிப்பொலிகளில்
கொலுசுகளின் சிணுங்கலில்
தாவணியின் சரசரப்பில்
எங்கும் தோழிகளின் வாசம்

கட்டை அவிழ்த்துப் பார்க்கும்போது
காணவில்லையே யாரையும்
வெகு நாட்களாய் சுற்றிவிட்டேனோ
கையில் கிடைப்பதும் காணாமல் போவதுமாக
வாழ்க்கை முழுவதுமே இந்த
கண்ணாமூச்சி விளையாட்டு

- இப்படியாக எழுதப்பட்டிருக்கும் இக்கவிதையை,  

சிரிப்பொலிகளில்
கொலுசுகளின் சிணுங்கலில்
தாவணியின் சரசரப்பில்
எங்கும் தோழிகளின் வாசம்

கண்ணைக் கட்டி சுற்றிவிடப்பட்டு
நிமிட நேரம் நின்று நிதானித்து
பின் தேட
கைகளை நீட்டும்போது
தொடும் இடமெல்லாம் காற்று

- என விளையாட்டு போல வரிகளையும் பத்திகளையும் மாற்றியமைத்து வாசிக்கிற போதும் பரவசம் தருகிற கவிதையிது என்பது இன்னும் சிறப்பு.

கட்டை அவிழ்த்துப் பார்க்கும்போது
காணவில்லையே யாரையும்

– என்னும்போது சமூகத்தால் வஞ்சிக்கப்படும் பெண்ணினத்தை, எதிர்பார்ப்புகள், ஆசைகள் மீதான அவர்களின் கையறு நிலையை பொருத்திப்பார்க்கத் தோன்றுகிறது.

நான் உள்ளே
என் மனம் வெளியே

- என்று அகிலா சொல்லும் ரயில் பயண அனுபவக்கவிதை ‘தூரந்தோ எக்ஸ்பிரஸ். பாட வேளையில் வகுப்பறைக்குள் இருந்து கொண்டு ஜன்னல் வழியே வெளியே ஓடியாடும் அணிலோடு லயித்திருந்ததாக ஓஷோ தனது பிராயத்தை நினைவு கூர்ந்து சொல்வதை கேட்பது போல மனத்தை மயக்குகிறது.

நடை, புறாவும் சமாதானமும், ஆசை தீர்ந்தது - போன்ற கவிதைகள் வழி இன்னும் பல்வேறு உணர்வுகளை வாசகரோடு பகிர்ந்து கொள்ளும் அகிலா இன்னும் கவித்துவம் அடையாத சொற்ப கவிதைகளை(?) தவிர்த்திருக்கலாம் என்று படுகிறது. மற்றபடி, அகிலாவின் சின்னச் சின்ன சிதறல்கள், பெண் கவிஞர்களின் நூல்கள் வரிசையில் முக்கியமானதொரு நூல் என்று உறுதியாகவே சொல்ல இயலும்.

(இலக்கியச் சந்திப்பு ; நிகழ்வு 27-ல் வாசிக்கப்பட்டது)


சின்னச் சின்ன சிதறல்கள்
(கவிதைகள்)
அகிலா

கோவை பதிவர் வெளியீடு


5 comments:

  1. நல்ல விமர்சனம்... மகிழ்ச்சி... எனது சகோதரி அகிலாவிற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. என் கவிதை நூலை உங்களின் பாணியில் அழகாய் ஆய்வு செய்து நேற்று நடந்த இலக்கிய விழாவில் நீங்கள் படைத்து எனது நூலுக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கொடுத்துள்ளீர்கள்...எனது நன்றிகள் தியாகு....

    ReplyDelete
  3. வியக்க வைக்கும் சொல்லாட்சி. புத்தக/கவிஞர் அறிமுகத்துக்கு நன்றி.

    ReplyDelete