18.6.13

ஐந்து கவிதைகள்


1)
மணிக்கு
பூஜ்ஜியம் அங்குலம்
மரக்குதிரை அடையும்
தூரம்,
அதன்மீதிருந்து
நிமிடத்துக்கு
ஐந்து பத்து தேசங்களையாவது
விரைந்து கடக்கும்
இந்த நிஷித்
இப்போது
எந்த தேசத்திலிருக்கிறானோ.

2)
பகலில் இடறி
விழுந்துவிட்ட
பதைப்பு போலும்
கா காவென அரற்றித்திரியும்
இரவிடம்

அடுத்தடுத்து தரையிறங்கும்
இரவுகளின் அடர்வில்
கரைந்துகொண்டிருக்கிறது
இப்பகல்.

3)
நீரைக் கிழித்துக்கொண்டு
விரைகிறது விசைப்படகு
எழுதிவிட்டு நிமிர்கிறேன்
தடயமேயில்லை.

4)
இரண்டங்குல அகலமே
திறந்திருக்கும் சன்னல் வழி
அறை நுழையும் காற்று
இரண்டங்குலம்
இடை மெலிந்திருக்கிறது.

5)
கையசைப்புகள்
கண்ணீர்த்துளிகள்
விடைபெறல்கள்
வழியனுப்பல்கள்
அவ்வப்போது குரல்கொடுக்கும்
அறிவிப்பாளினியின் தயவில்
எதிர்முனை சேராதொழியும்
அலைபேசியிலும்
போய் வா
சென்று வருகிறேன்களை
தொடர்ந்து வரும்
விசும்பல்கள்.



2 comments:

  1. 3,4, மிகவும் பிடித்தது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஐந்து வித உணர்வுகளின் குவியல்.

    ReplyDelete