20.6.13

ஏழு கவிதைகள்



1)
சிமெண்ட் தரையில்
கையளவு தேங்கிய
கடலின்
கரையோரத்திலிருந்து
இழுத்துவிட்டேன்
விரல் நுனி கொண்டு,


வேகமாய் வெளியேறுகிறது
ஒரு சிறு நதி.

2)
நீள் அலகு செலுத்தி
பூவில்
தேனெடுக்கும் கணம்
சிறகுகளிருப்பதில்லை
தேன்சிட்டுக்கு.

3)
அண்ணாந்து பார்த்தேன்
அந்தரத்தில் உதிர்ந்து கிடந்தன
கொன்றை மலர்கள்.

4)
ஒரு கை நீரள்ளி
மேல் தெளிக்கிறாள்
துணுக்குற்றது போல
கொஞ்சமே அசைந்துகொடுக்கிறது
இன்னும்
உயிரிருக்கும் ஒரு மீன்

அதைத்தான்
தேர்ந்தெடுக்கவேண்டும் நாம்.

5)
கிணற்றுக்குள்ளிருந்து
ஒலித்தாற்போலிருக்கிறது
எதிர்முனையில்
உன் குரல்

உடன்,
தழுதழுப்பு
விசும்பல்
பேச்சில் திணறல்
இறுதியில்
உடைப்பெடுத்த அழுகை

கிணற்றுக்குள்ளிருந்து
ஒலித்தாற்போலிருக்கிறது
உன் குரல்
எதிர்முனையில்

இம்முனையில்
ஆழத்திலிருந்து கிளர்ந்து
நீர் மட்டத்தில் உடைகிறது
ஒரு குமிழி.

6)
ரத்தத் திட்டுக்கள்,
உதிர்ந்த
சிவப்பு ரோஜாவின்
இதழ்கள் போல.

7)
நீயில்லாத தனிமை
புண் என்றால் தகும்

விரட்டும் வகை கைகூடாது
வதைபட,
ஓயாமல்
உன் நினைவுகள் மொய்க்கின்றன
ஈக்களாகி.




2 comments:

  1. 5, 6 மிகவும் ரசித்தேன்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அதைத்தான்
    தேர்ந்தெடுக்கவேண்டும் நாம்.

    கவிதையை நீங்கள் தேர்ந்தெடுப்பதைப் போல.

    ReplyDelete