24.10.13

ஏழு கவிதைகள்


1)

நடுவே
விழியாயிருந்து மருளும்
விரிந்த இலைத்திரைமீதிலொரு
பனித்திவலை

சூரியனிடமிருந்து
நீண்டு வருகின்றன
கூர் நகங்கள்


2)

அலையோடு
பாதம் நனைத்தல் இல்லை
கரையோடு
சுவடு பதித்தல் இல்லை
சூம்பிப்போன கால்களுக்கு

கண்ணீர்த் தாரைகளில்
கன்னம் தொடும்
கடல்.

3)

செத்து மிதக்கும் மீனை
சல்லடை கொண்டு
அள்ளியெடுத்தேன்

திரும்பப்
பெற்றுக்கொள்கிறது தன்னை
நீர்.

4)

நிழலாடுகிறதென்று
எட்டிப்பார்த்தேன்

நீயில்லை
என்றானதன் நரகம்
நின்றிருந்தது வாசலில்.

5)

ரொட்டித்துண்டை விட்டெறிகிறேன்
தாவியோடி
அதைப்பற்றுகிறேன் பேர்வழி
என்றுகூட
விலகுவதில்லை
என் தனிமை எனும்
நாய்க்குட்டி.

6)

ஆதாமின் குமாரனிடமிருக்கிறது
கையளிக்கப்பட்டதொரு
குறுவாள்

தோலும்
சதையுமாயிருக்குமோர் ஆப்பிளை
அரிவதிலிருந்து அறியப்படலாம்
அதனுள்ளுமிருக்கும்
மறுக்கப்பட்ட நிர்வாணம்.

7)

துவண்டு
குப்பை மேட்டில் கிடந்ததை
முந்தியெடுத்து ஊதுகிறான்

ஆரம்பத்தில் ஆவேசமாய் விரைத்தது
அடுத்து
அவனுக்காகவும்
சற்றே விரிகிறது
அச் சேரிச் சிறுவன் வரையிலான
பலூன்.

6 comments:

  1. எல்லாமே அருமையாக இருக்கின்றது சகோதரரே!

    ஐந்தாவது ஏனோ மனதில் வந்து ஒட்டிக்கொண்டது...

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. துளிப்பாக்கள் ஒவ்வொன்றும் மிக அருமை...

    ReplyDelete
  3. அன்பு நன்றி நண்பர்களே..! :)

    ReplyDelete
  4. திரும்பப்
    பெற்றுக்கொள்கிறது தன்னை
    நீர்.
    அருமை !

    ReplyDelete
  5. ஒவ்வொரு கவிதையை வாசித்து முடித்தபின்னும் ஏதோவொரு பரிதவிப்பு வந்து ஒட்டிக்கொள்கிறது மனத்தில். ரசனை மீறிய தாக்கத்தை உண்டுபண்ணும் அதிசயம். பாராட்டுகள்.

    ReplyDelete
  6. அன்பு நன்றி ரிஷபன் ஜி, கீத மஞ்சரி மேடம். :)

    ReplyDelete