15.7.11

வானவில் கவிதைகள்1)
வானவில்லுக்கு
நாணேற்றி நிற்கும்
மின்கம்பியதிர
சீறிப்பாய்கிறது ஒரு அம்பு2)
தலையுமில்லை வாலுமில்லை
வானோடு வளைந்து கிடக்கிறது
ஏழு வர்ண நாகத்தின்
தேகம்3)
வானைக்கடைந்தும்
இனாம்,
ஆறு அமுதத்துக்கு
ஒரு விஷம்4)
வரவேற்று நிற்கும்
வளைவு நுழைவாயிலென நம்பி
முன்னேறினேன் பாருங்கள்
என்னை சொல்லவேண்டும்5)
சிலிர்த்துக்கொண்டதில்
குத்திட்டு நிற்கின்றன
மயிர்க்கால்கள்
வானவில்லில் தோய்வதான
கனவிலிருக்கும் தூரிகைக்கு6)
வெகுநேரம் மழை பெய்து
அடம்பிடித்ததைத்தொடர்ந்து
சாக்கலெட் வாங்கித்தந்தேன்
ஜனு-வின் முகத்தில் இப்போது
வானவில்7)
அங்கே தேடவேண்டாம்
கவிதை வரைய,
தீர்ந்து போகும்வரை
ஃபில்லர் அழுத்தி
எல்லா நிறங்களையும் உறிஞ்சிக்கொண்டது
நான்தான்

No comments:

Post a Comment