20.7.11

யானை



 நின்றால் கோவில் முன்றில்
கிடந்தால் சுற்றுச்சுவரோர
கொட்டிலென்றான
யானைக்கெப்போதும் விருப்பம்
கானக வாசம்

ஆசி பெறவென
மனிதர் திரள் முன்னிற்கையில்
அது தன் கூட்டத்தை
நினைத்துக்கொள்கிறது

தூண்கள் தாங்கும்
கூரையினடியிலிருந்து
அது தன் அடவியின்
முடிவுறாத பச்சை வானத்தை
மனத்தின்கண்
மீள் பார்வை பார்க்கிறது

நீளம் காலம் அறிந்திராததும்
திசைகளை கணக்கில் கொண்டிராததுமான
முன்னாட்களின் பயணங்களை
நின்றவிடத்திலிருந்து அசைபோடுகிறது

மழை நாளில் மட்டும்
கொட்டிலோரம்
கொஞ்சம் தேங்கும் நீரில் தோன்றும்
இன்னொரு யானை
 இதனைத்தேற்றுகிறது

No comments:

Post a Comment